PUBLISHED ON : ஜூலை 01, 2026 03:29 PM

சில நாட்களுக்கு முன் பிரதமர் சீஷெல்ஸ் சென்றிருந்த போது அங்கு இருந்த விநாயகர் கோவிலில் வழிபட்டார் அந்த விநாயகர் கோவிலின் பின்னனியில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்த போது பெருமிதம் பொங்கியது
ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கரையில், நீலக் கடலும் பசுமையான மலைகளும் சூழ்ந்த ஒரு சொர்க்கப் பூமிதான் சீஷெல்ஸ் .
சீஷெல்ஸ் நாட்டின் முதலாவது மற்றும் ஒரே இந்து ஆலயமான இக்கோவிலின் ஆன்மீக மாட்சிமை, வரலாறு மற்றும் தமிழர்களின் பிணைப்பு குறித்து விரிவாகக் காண்போம்.
அதன்பின், 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மதராஸ் மாகாணத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்களும், வணிகர்களும் அங்கு சென்றனர். காலப்போக்கில் அவர்கள் அந்நாட்டின் தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக மாறினர்.
தலைநகர் விக்டோரியாவின் குயின்சி வீதியில் அமைந்துள்ள இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் சுமார் 100 அடி உயரம் கொண்டது. இதில் செதுக்கப்பட்டுள்ள வண்ணமயமான புராணச் சிலைகளும், கலைநயமும் சர்வதேசப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகின்றன. இக்கோவிலின் கருவறையில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் 'நவசக்தி விநாயகராக' வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
விநாயகரைத் தவிர, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், நடராஜர், துர்க்கை அம்மன், ஸ்ரீனிவாச பெருமாள், பைரவர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டு அர்ச்சகர்களால், ஆகம விதிகளின்படி தினமும் இங்கு பூசைகளும் அபிஷேகங்களும் நடத்தப்படுகின்றன.தமிழ்நாட்டுக் கோவில்களைப் போலவே இங்கும் அனைத்து விசேஷ நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இதில் மிக முக்கியமானது தைப்பூசக் காவடித் திருவிழா ஆகும்.
1993-ஆம் ஆண்டு எளிய முறையில் துவங்கிய இந்த விழா, இன்று சீஷெல்ஸ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக உருவெடுத்துள்ளது. தைப்பூசத்தன்று வண்ணமயமான 'ரதக் காவடி' ஊர்வலம் விக்டோரியா நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரும்போது, தமிழர்கள் மட்டுமன்றி மாற்று மதத்தினரும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் திரண்டு நின்று தரிசிக்கின்றனர்.இந்த விழாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்ந்த சீஷெல்ஸ் அரசு, 1998-ஆம் ஆண்டு முதல் ' தைப்பூசத் திருநாளை' அங்குள்ள இந்துக்களுக்கு அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவித்துக் கௌரவித்துள்ளது.
சென்னையிலிருந்து மும்பை, கொழும்பு அல்லது துபாய் வழியாக மிக எளிதாக (விசா இல்லா பயணமாக) இந்த நவசக்தி விநாயகர் ஆலயத்தை நாம் சென்றடையலாம்.
கடல் கடந்து சென்றாலும் தங்கள் மொழியையும், பண்பாட்டையும், வழிபாட்டு முறைகளையும் கைவிடாது, அந்நாட்டின் மொழியான 'கிரியோல்' மொழியிலேயே தமிழ்ச் சொற்களைக் கலக்கச் செய்த பெருமை சீஷெல்ஸ் தமிழர்களுக்கு உண்டு. காடுகளாக இருந்த தீவை, தங்கள் உழைப்பால் ஆப்பிரிக்காவின் மிகச் செல்வந்த நாடாக மாற்றிய தமிழர்களின் ஆன்மீகப் பெருமையைப் பறைசாற்றி நிற்கிறது இந்த விக்டோரியா நவசக்தி விநாயகர் ஆலயம்!
-எல்.முருகராஜ்
