PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM


எங்களை நிம்மதியா படிக்கவிடுங்க..கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்.
முதலிலே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறோம்.



இப்படித்தான் ஒரு இறப்பு வீட்டில் துக்கத்துடன் சரக்கையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, சரக்கு துாக்கலாக இருக்கிறதே என்று எண்ணுவதற்குள் கண் இருட்டியது, வயிறு குமட்டியது 'ஐயோ அம்மா என்னைய என்னவோ செய்யுதே, காப்பாத்துங்களேன்' என்ற கதறல் சொல்லிவைத்தாற் போல கள்ளச் சாராயம் சாப்பிட்டவர்களின் அனைத்து வீடுகளிலும் கேட்டது,
வீபரீதத்தின் வீரியத்தை உணராமல் மாவட்ட ஆட்சித்தலைவர் சாதாரண வயிற்றுப்போக்கு என்று சப்பைக்கட்டு கட்ட, பத்து இருபது பேர் மதியத்திற்குள் பொத்து பொத்தென்று செத்து விழுந்தபிறகுதான் இது கள்ளச் சாராய சாவு என்று கன்பர்ம் செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் சேலத்திலும்,கள்ளக்குறிச்சியிலும்,புதுச்சேரியிலும் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளனர் ஊரின் ஆரம்பத்தில் ஏதாவது பிளக்ஸ் பேனர் புதிதாக கட்டுகின்றனர் என்றால் அன்றைக்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பலனின்றி இறந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
சூட்டிங் முடித்த தலைவர்களும்,வெளிநாடு போய் திரும்பிய தலைவர்களும் ஆறுதல் சொல்ல சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னர் இப்போதுதான் வருகின்றனர், அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 'முதலில்' இருந்து அழ ஆரம்பிக்கின்றனர்.
இறந்தவர்களின் குடும்பங்களை பத்து லட்சம்தான் ஆறுதல் படுத்திவைத்திருக்கிறது,இங்குள்ள ஆண்கள் பெண்கள் யாருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை, ஆனால் தங்களது அடுத்த தலைமுறையாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டில் உள்ள பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர், இப்போது அந்தப் பிள்ளைகள்தான் பாவம் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்னர், மீடியாக்கள் முன் அழத்தெரியாமல் இறுகிய முகத்துடன் அடுத்த என்ன? என்று கேள்வியுடன் அமர்ந்துள்ளனர் ,பெரும்பாலான பிள்ளைகள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் ஒன் பிளஸ் டூ படிப்பில் உள்ளனர் இறுக்கத்தை உடைத்து அவர்களில் சிலர் எங்களை படிக்கவிடுங்க எங்க அப்பா அதுக்குதான் ஆசைப்பட்டனர் என்று கதறுகின்றனர்.
இந்த கதறல்கள்தான் உடனடியாக கவனிக்கப்படவேண்டும்.
-எல்.முருகராஜ்

