PUBLISHED ON : ஏப் 17, 2017

அனுபமா ஐ.ஏ.எஸ். என்றால் உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வராமலிருக்கலாம். ஆனால், அவர் கேரளத்தில் மிகவும் பிரபலம். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக, அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. பல இடங்களில் சோதனை; சுமார் 6,000 கலப்பட உணவுப் பொருட்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார். 750 வழக்குகளைப் பதிவு செய்தார். ரசாயனக் கலப்படமில்லாத உணவுப் பொருட்களை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதில் தளராத உறுதி. தீரத்துடன் பணியாற்றும் அனுபமா ஐ.ஏ.எஸ்.ஸின் பயணம் சுவாரசியமானது; மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பது.
அவர் கூறியவற்றிலிருந்து...
'பள்ளி நாட்களிலேயே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் கனவு. எதைப் படித்தாலும் அதை விரும்பிப் படிப்பேன். இல்லையென்றால் நேரத்தை வீணடிக்க மாட்டேன். மனப்பாடம் செய்வது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத விஷயம். இதுதான் எனக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு வரை உதவியிருப்பதாக உணர்கிறேன். மனப்பாடம் செய்து படித்து, அப்படியே எழுதுவதால் யாருக்குப் பயன்? படித்ததைப் பகுத்தறிந்து புரிந்துகொள்ளும்போது, நம் ஆற்றல் வளரும் இல்லையா? அதுதான் தலைமைப் பொறுப்புக்கு மிக முக்கியம்.
நாம் என்னவாக உருவாகவேண்டும் என்பது மனத்தில் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு எப்போதெல்லாம் படிக்கவும், புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போது, அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வேன்.
உதாரணமாக, மலையாள மொழியை நான் இரண்டாம் பாடமாகக் கற்றேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பாடமாக தேர்ந்தெடுத்தேன். தாய்மொழியில் செய்திகள், கட்டுரைகள், பிற புத்தகங்கள் படிக்கும் பழக்கம் தொடர்ச்சியாக இருந்ததால், தேர்வின்போது மொழியைத் துணிவாகப் பயன்படுத்த முடிந்தது.
பொறியியல் படிப்பு படித்ததால், அது தொடர்பான பாடங்களையே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தேர்வு செய்துகொள் என பலரும் எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் அப்படி செய்ய நான் விரும்பவில்லை. புவியியல் பாடத்தைத் தேர்வு செய்தேன். பலரும் என் முடிவை வரவேற்கவில்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால்தான் பலமணி நேரம் சோர்வு இல்லாமல் படிக்க முடிந்தது.
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 4வது இடத்தை பிடிப்பேன் என்றெல்லாம் கனவு காணவில்லை. பல லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். அனைவரும் கடுமையாக உழைப்பார்கள். ஆனால் சிலபேர் மட்டுமே அதிகாரிகள் ஆக முடிகிறது. அந்தச் சிலபேரில் நம் பெயரும் வரவேண்டும் என நினைத்தேன். ஒருவேளை நான் தோல்வி அடைந்திருந்தால் மீண்டும் முயற்சி செய்திருப்பேன். நிச்சயமாக என்னுடைய இலக்கை மாற்றிக் கொண்டிருக்க மாட்டேன்.
நாம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஆட்சிப்பணி முக்கியம் என நம்பினேன். நான் அடைய விரும்பிய இடத்தை அடைந்துவிட்டேன். அதன் மூலம் மக்கள் நலப்பணிகளைச் செய்ய தொடங்கியிருக்கிறேன். கடுமையாக உழைத்தது யாருக்காகவோ, அவர்கள் நன்மைகளை அறுவடை செய்ய என்னைப் போல பல இளம் தளிர்களை உருவாக வேண்டும்.”
