PUBLISHED ON : ஜன 09, 2017

உலகப் புகழ்பெற்ற புவியியல், வரலாறு மற்றும் கலாசார இதழான, 'நேஷனல் ஜியோகிராஃபி' இதழ், கடந்த 1888ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதழ் துவங்கிய காலத்தில், தற்போது நாம் பார்க்கிற அழகான புகைப்படங்களும், கிராஃபிக்ஸ் படங்களும் இல்லை. புகைப்படத்திற்கு செலவு அதிகம் என்பதால், தகவல்களை கைகளால் வரைந்து காட்சிப்படுத்தும் வழக்கம் இருந்தது.
புயல் உருவாவது எப்படி? மக்களின் இடப்பெயர்வு, முக்கிய சம்பவங்கள் போன்ற செய்திகள், ஓவியரின் உதவியோடு தகவல் வரைபடங்களாக மாற்றப்பட்டன. அதன் பின்னர், நவீன தொழில்நுட்பம் வளர்ந்து, புகைப்பட கருவிகளின் விலை குறைந்ததால், 1940 முதல் சித்திரங்கள் குறைந்து, புகைப்படங்களின் பயன்பாடு அதிகரித்தது.
எனினும், அணு அறிவியல் போன்ற சிக்கலான விஷயங்களைச் சொல்வதற்கும், நிறைய தகவல்களை விளக்குவதற்கும், புகைப்படங்கள் உதவாததால், தகவல் சித்திரத்துக்கான (இன்ஃபோகிராபிக்ஸ் - Infographics) தேவை தற்போதும் உள்ளது. கணினிகள் மூலம் அவை, எளிமையாக உருவாக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றன.
இந்த பின்னணியில், கடந்த 1888ல் இதழ் துவங்கப்பட்டதில் இருந்து, தற்போதைய நவீன காலம் வரை உருவாக்கப்பட்ட சிறந்த இன்ஃபோகிராபிக்ஸ் படங்கள் தொகுக்கப்பட்டு, ஒரே புத்தகமாக கொண்டுவரப்பட்டுள்ளது. 128 ஆண்டு கால படங்களை கொண்டுள்ள இந்த புத்தகத்தின் விலை 5,000 ரூபாய். 'நேஷனல் ஜியோகிராஃபிக்ஸ் கிளாசிக் இன்போகிராஃபிக்ஸ்' (NATIONAL GEOGRAPHIC'S CLASSIC INFOGRAPHICS) என்ற தலைப்பிலான இப்புத்தகம், கடந்த வாரம் விற்பனைக்கு வந்தது.

