
பாலைவன ரோஜா
ஆங்கிலப் பெயர்: 'டெசர்ட் ரோஸ்' (Desert Rose)
தாவரவியல் பெயர்: 'அடினியம் ஒபிஸம்' (Adenium Obisum)
வேறு பெயர்கள்: 'சபி ஸ்டார்' (Sabi Star), 'மாக் அசலீ' (Mock Asalea), 'இம்பாலா லில்லி' (Imbala Lily)
குறைவான மழையைப் பெறும் வறண்டு போன பகுதியே பாலைவனங்கள். ஆனால், ஆப்பிரிக்கப் பாலைவனங்களில், பாலைவன ரோஜா என்ற இந்தச் செடி வளர்கிறது. இது 'அபோசைனாசியே' (Apocynacea) குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இதன் தண்டுப்பகுதி ஒன்றுடன் ஒன்று இணைந்து முறுக்கியபடி காணப்படும். தடிமனான அடிப்பகுதியும், வேர்களும் நீரை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. வறண்ட, தரிசான பகுதிகளிலும் இவை செழிப்பாக வளர இதுவே காரணம்.
மிக மெதுவாக வளரும் இந்தச் செடி மூன்று மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இவை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை அழியாமல் பசுமையுடன் இருக்கும். இந்தச் செடியில் இருந்து வெளிவரும் பால், செடியின் வேர், விதை போன்றவை நச்சுத்தன்மை உடையவை.
செடியின் பூக்கள் இளஞ்சிவப்பு, அடர்த்தியான சிவப்பு நிறங்களில் மிகவும் அழகாக இருக்கும். ரோஜா மலரைப்போலவே பூவின் இதழ்கள் அமைந்திருக்கும். ஒரே செடியில் ஏராளமான பூக்கள் பூக்கும். பதியன் இடுவதன் மூலம் இவை இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. சஹாரா, அரேபியா பாலைவனப்பகுதிகளில் இந்தச் செடிகள் அதிகம் காணப்படுகின்றன.
முற்காலத்தில், இந்தச் செடியின் விதைகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் விஷம், அம்புகளின் முனையில் தடவி, விலங்குகளை வேட்டையாடப் பயன்பட்டது. ஒட்டகங்கள் போன்ற பாலைவன விலங்கினங்களின் உடலில் உள்ள உண்ணி, பேன் போன்றவற்றைக் கொல்லும் மருந்தாகவும், இந்தச் செடியின் சாறு பயன்படுகிறது.
இந்தச் செடி வீட்டுத் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இந்தச் செடிக்கு வாரம் ஒருமுறை சிறிதளவு நீர் ஊற்றினாலே போதுமானது. மிகக்குறைந்த அளவு தண்ணீரும், அதிக சூரிய வெளிச்சமும் தேவைப்படுகிற செடி இது.
- கி.சாந்தா

