தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நல்லதொரு வழிகாட்டி!

நல்லதொரு வழிகாட்டி!

நல்லதொரு வழிகாட்டி!


PUBLISHED ON : மே 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபால கிருஷ்ண கோகலே

9.5.1866 - 19.2.1915

கோதாலுக், மஹாராஷ்டிரா


தனக்காக அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்தபோது, நாட்டுக்காக அத்தனையையும் தியாகம் செய்தார். வறுமையான சூழலும், இளம் வயதிலேயே அப்பாவின் இழப்பும் அவரை அதிகம் சோதித்தன. 'நான் கஷ்டப்பட்டாவது என் தம்பியைப் படிக்க வைப்பேன்' என்ற அண்ணன், தான் வேலைபார்த்து இவரைப் படிக்க வைத்தார். தெரு விளக்கில் படித்து, ஒருவேளை சாப்பாட்டையும் தானே சமைத்து உண்டு, பல இன்னல்களுக்கு மத்தியில் பி.ஏ. பட்டம் பெற்றார் கோபால கிருஷ்ண கோகலே.

கோகலே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், மகாத்மா காந்தியின் அரசியல் குரு. விடுதலைக்காகப் போராட இந்திய தேசிய காங்கிரஸில் 1889ல் இணைந்து, திலகர், லாலா லஜபதிராய் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து போராடினார். நேரடி போராட்டத்தின் மூலம், விடுதலை வேண்டும் என்பது திலகரின் கோஷமாக இருந்தது. ஆனால் கோகலே மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்தார்.

குறிக்கோள்கள்:

• வன்முறை இல்லாத போராட்ட முறைகள்

• அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டுவருவது

குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் ஆங்கிலேய அரசின் சட்டத்தை ஆதரித்தார். இது பிடிக்காத திலகர், 'இந்துக்களின் நம்பிக்கைகளில் ஆங்கிலேயர்கள் தலையிடுகிறார்கள்' என அந்தச் சட்டத்தை நிராகரித்தார்.

இதனால் திலகர் - கோகலேக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வந்ததால், காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. மிதவாதிகளின் பிரிவுக்கு கோகலே தலைமை தாங்கி, 'சமூகத்தின் சேவகர்கள்' எனும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம், மக்களுக்கு கல்வியறிவு போதித்து, நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து, பல பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்.

நாடு சுதந்திரம் பெறுவதைவிட, சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமென விரும்பினார். மகாத்மா காந்திக்கும், முகமது அலி ஜின்னாவுக்கும் வழிகாட்டியாக விளங்கினார். கோகலேயைச் சந்திக்கும் முன்வரை, ஆங்கிலேய அரசின் மீது மரியாதை கொண்டிருந்தார் காந்தி. அதன் பிறகு, கோகலே ஆலோசனையால் ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உணர, தேசம் முழுக்கப் பயணித்தார். அதன்பிறகே, காந்தி 'மகாத்மா' காந்தி ஆனார். 'கோகலே என் அரசியல் குரு' என, தன் சுயசரிதையில் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us