தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உயர உதவும் மொழிப் பாலம்!

உயர உதவும் மொழிப் பாலம்!

உயர உதவும் மொழிப் பாலம்!


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓவியா அந்தக் கதையைச் சொன்னாள். அவளுக்குத் தெரிந்த தோழி ஒருத்தியின் பள்ளியில், ஆங்கிலத்தில் பேசாததற்காக, அபராதம் போட்டுவிட்டார்களாம். பெற்றோரைப் பள்ளிக்கு அழைத்தார்கள். பள்ளிக்குள் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் இருக்கும்போது, எப்படித் தமிழில் பேசலாம் என்று விசாரணை வேறு. அந்தப் பெற்றோருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த உமா மிஸ், தலையில் அடித்துக்கொண்டார். எனக்கு ஒன்று புரியவில்லை. இதுமாதிரி பல பள்ளிகளில் நடப்பதாகச் செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வருவதுண்டு. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், தமிழில் பேசாமல் என்ன செய்வார்கள்?

“நான் ஸ்கூல்களைக் குறைசொல்ல மாட்டேன். ஆனால், தாய்மொழியை எப்படி ஒரு பலமாகப் பார்க்கணும்னு இவங்களுக்குத் தெரியலங்கறதுதான் பிரச்னை.” என்று பேச ஆரம்பித்தார் உமா மிஸ்.

“என்ன சொல்றீங்க மிஸ்?”

“அதாவது, நம்ம ஊர்ல ஆங்கிலத்துலேயே பேசணும்னு பல பெற்றோர்கள் நினைக்கறாங்க. அப்பத்தான் தங்கள் பிள்ளைகளின் ஆங்கில அறிவு வளரும், வருங்கால உலகத்தைச் சந்திக்க அந்த ஆங்கிலப் பேச்சுத் திறனும் மொழியறிவும் பயன்படும்னு நினைக்கறாங்க. இது அவங்க விருப்பம். நாம குறை சொல்ல முடியாது. அதுக்காக, தாய்மொழியில பிள்ளைகளுக்கு இருக்கிற திறனை மட்டம் தட்டக் கூடாது, குறைசொல்லக் கூடாது, அபராதம் விதிக்கக் கூடாது.”

“ஆனால், அப்படி நடப்பதா தானே மிஸ் செய்திகள் வருது.”

“ஆமாம். இது புரிதல் இல்லாததால ஏற்படுற குழப்பம். உலகம் முழுக்க, இன்னிக்கு பல்வேறு மொழிகள் பேசப்படுது. ஒரு நாடு விட்டு இன்னொரு நாடு போய் தொழில் செய்றது, வேலை செய்றது ரொம்ப சகஜம். பல்வேறு பண்பாட்டு, வாழ்க்கைப் பின்னணியில் இருந்து மாணவர்கள் வராங்க. அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தாய்மொழி இருக்கும். ஆனால், அவங்க கத்துக்கவேண்டிய மொழி முற்றிலும் வேறு ஒண்ணா இருக்கும். உதாரணமா, நமக்கு ஆங்கிலம். வடமாநிலங்களுக்குப் போகும் மாணவர்கள், இந்தி கத்துக்கணும். ஐரோப்பா, அமெரிக்கா எல்லாம் போனா அங்கே பலருக்குத் தாய்மொழி சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு போன்றவை இருக்கும். அவங்க ஆங்கிலம் கத்துக்க வேண்டியிருக்கும். அங்கே இருக்கற பள்ளிக்கூடங்கள், மாணவர்களோட தாய்மொழியை இடைஞ்சலா நினைக்கறதில்ல. அதைக் குற்றமா பார்க்கறதும் இல்லை. அதை ஒரு பாலமா கருதுறாங்க. அதுக்குப் பேர் 'டிரான்ஸ்லேங்குவேஜிங்' (Translanguaging).

நாம் இதைப் பன்மொழித் திறன் அப்படின்னு சொல்லுவோம். இன்னிக்கு உலகமெங்கும், இதுக்கு ஒரு கவனம் கிடைச்சுருக்கு.

உதாரணமா, மாணவர்களுக்கு அறிவியலோ, புவியியலோ ஏதோ ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுதுன்னு வெச்சுக்கோ. அவங்க கத்துக்கற ஆங்கிலச் சொல்லுக்கு இணையா அவங்களோட தாய்மொழியில என்ன சொல் பயன்படுத்தப்படுதுன்னு பேச அனுமதிக்கப்படுவாங்க. உதாரணமாக, ஜாக்ஃப்ரூட் பத்தி ஒரு பாடம். உடனே அதை தமிழில் எப்படிச் சொல்வோம்னு தேடத் தொடங்குவாங்க. அதுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் என்ன? அதன் பிஞ்சு, காய், மரம் எல்லாத்துக்கும் பெயர்கள் என்ன அப்படின்னு யோசிக்கத் தொடங்குவாங்க.

இங்கே தமிழ் என்பது ஆங்கிலச் சொல்லுக்கான பாலமா மாறிடும். ஜாக்ஃப்ரூட் என்ற சொல் எங்கே வந்தாலும் அதோட தொடர்புடைய அத்தனை விஷயங்களும் ஞாபகம் வந்துடும். சொற்களும் தெரிஞ்சுபோயிடும். அதனால் மாணவர்களுக்கு இருமொழியிலேயும் தெளிவு ஏற்பட்டுடும்.”

“அப்படின்னா மொழிகளை எதிரெதிரா நினைக்கக் கூடாது. ஒசத்தி, தாழ்வு பார்க்கக்கூடாது. அப்படித்தானே மிஸ்?”

“சரியாச் சொன்னே. ஒரு மொழி மூலமா இன்னொரு மொழி அறிமுகமாகறதுதான் வழக்கம். அதுவும் பிள்ளைகளோட தாய்மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கூட்டிக்கிட்டுப் போறது இன்னும் சுலபம். இதைப் புரிஞ்சுக்கறதுக்கு நமக்கு ரொம்ப நாள் ஆகிப் போச்சு. பல நாடுகள்ல மாணவர்களால இரு மொழிகளை புரிஞ்சுக்க முடியாது, யோசிக்க முடியாதுன்னு நினைச்சுக்கிட்டிருந்தாங்க.

ஆனால், பிள்ளைகளால எத்தனை மொழிகளை வேணும்னாலும் கத்துக்க முடியும், புரிஞ்சுக்க முடியுங்கற முடிவுக்கு வந்திருக்காங்க. அதனாலதான், டிரான்ஸ்லேங்குவேஜிங் ஒரு முக்கியமான விஷயமா முன்னுக்கு வந்திருக்கு.”

உமா மிஸ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். உண்மையில், தாய்மொழியில் புரிந்துகொள்ளும்போது, பிள்ளைகளுக்கு தைரியம் பிறக்குமாம். அதனால், அவர்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதில் முழுமையான தெளிவை அடைகிறார்கள்.

இருமொழித் திறன் வளர்கிறது. மொழிபெயர்க்கும் ஆற்றல் பெருகுகிறது. இரண்டு மொழிகளிலும் உள்ள சொற்றொடர்கள், வாக்கிய அமைப்பு, இலக்கணம் ஆகியவை அத்துபடியாகிவிடுகின்றன.

“இந்தியாவுல டிரான்ஸ்லேங்குவேஜிங் வந்துடுச்சா மிஸ்?”

“ஓ! ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள்ல, தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் கூட இந்த முறையிலதான் சொல்லித் தராங்க. மாணவர்களை குழுகுழுவாகப் பிரிச்சு, இந்தி வகுப்புகள் நடத்துறாங்க. அங்கே பல இடங்களில் மாணவர்களுக்கு இந்தி தாய்மொழி கிடையாது. அவங்களுக்குப் பள்ளிகளில் இந்தி சொல்லிக் கொடுக்கவேண்டிய தேவை இருக்கு. அங்கேயெல்லாம், அவர்களுடைய தாய்மொழியையே இணைப்பு மொழியாகப் பயன்படுத்தி, இந்தியைச் சொல்லித் தராங்க. நாமதான் இன்னும் தமிழை ஒரு இணைப்பு மொழியாகக் கூட நினைக்கத் தயங்குறோம்.

உண்மையைச் சொல்லணும்னா, காலைக் கட்டிக்கிட்டு, தண்ணியில குதிக்கறா மாதிரியான சூழல் இது. தமிழ்ங்கற டியூப் இருக்கும்போது, அதைப் போட்டுக்கிட்டு ஆங்கில நதியில குதிச்சா, ஈசியா கரையேறிடலாம்.”

மொழிகளுக்குள் ஏற்றத்தாழ்வு பார்க்கும் மனப்பான்மை எவ்வளவு அபத்தமானது என்பதை ரொம்ப நேரம் விளக்கிக்கொண்டிருந்தார் உமா மிஸ். நான் தமிழ் வழியாக, ஆங்கிலத்தில் நீந்தத் தொடங்கியிருந்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us