தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஜானகி என்றொரு மாமனுஷி

ஜானகி என்றொரு மாமனுஷி

ஜானகி என்றொரு மாமனுஷி


PUBLISHED ON : மார் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜானகியம்மாள் பிறந்த தினம் - மார்ச் 21

பாரதியாரின் மனைவியைப் போல கணிதமேதை ராமானுஜனின் மனைவியின் வாழ்க்கை, இன்னும் சொல்லப்படாத வாழ்க்கைகளில் முக்கியமானது. ராமானுஜன், 32 வருடம்தான் வாழ்ந்தார் (1887-1920). ஜானகி, 94 வயது வரை இருந்தார் (1899-1994). ராமானுஜனுக்கும் ஜானகிக்கும் திருமணம் நடந்தது. அந்தக் கால வழக்கப்படி அது ஒரு குழந்தைத் திருமணம். ஜானகிக்கு வயது ஒன்பதுதான். ராமானுஜன் வயது 21. ஜானகி தன் 15ஆவது வயதில் பருவமடைந்த பின்னர் ராமானுஜனுடன் சென்னையில் குடும்பம் நடத்துவதற்கு வந்தார். அடுத்து அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது இரண்டே வருடங்கள். அடுத்த ஆறு வருடங்கள் ராமானுஜன் வெளிநாட்டில். ஜானகி சென்னையில். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த ஒரே வருடத்தில் ராமானுஜன் மரணம்.

அப்போது ஜானகிக்கு வயது 21. அதிக படிப்பறிவு ஏதும் இல்லாதவர். அடுத்த எட்டாண்டுகள் தன் சகோதரருடன் மும்பையில் இருக்கிறார். அங்கே தையல் வேலையும் ஆங்கிலமும் கற்றுக் கொள்கிறார். பின் திருவல்லிக்கேணிக்கு திரும்பி வந்து கொஞ்ச காலம் தன் சகோதரியுடன் இருக்கிறார். பின் தனியே தன் உழைப்பில் தையல் வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார். அவர் அப்படி தனி வாழ்க்கை நடத்திய காலத்தில், துணையாக இருந்த தோழி சௌந்தரம் 1950ல் இறந்துவிட்டார். அவருடைய ஏழு வயதுக் குழந்தை நாராயணனை, தானே வளர்த்து ஆளாக்குகிறார். அப்போது ஜானகிக்கு வயது 51. அவனை பி.காம் வரை படிக்க வைக்கிறார். வங்கி அலுவலராகப் பணியில் சேர்ந்த அந்த வளர்ப்பு மகனுக்கு, திருமணமும் செய்து வைக்கிறார். அந்த மகனின் பராமரிப்பில் இறுதி வரை இருக்கிறார்.

1962ல் ராமானுஜனின் 75வது பிறந்த வருடக் கொண்டாட்டம் வரை ஜானகி அம்மாளை (அப்போது வயது 63) அரசோ, அமைப்புகளோ பெரிதாக கவனிக்கவில்லை. ராமானுஜனுக்கான பென்ஷன் பணம் மாதம் 50 ரூபாய். மெல்ல மெல்ல இது 1994ல் 500 ரூபாய் ஆயிற்று. 1962 க்குப் பின் நன்கொடைகள் கணிசமாக வந்தன. இதில் திருவல்லிக்கேணியில் தனக்கென ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு அங்கே இருந்தார் ஜானகி. நிறைய ஏழை மாணவர்களுக்குப் பண உதவி செய்து வந்திருக்கிறார். தையல் டீச்சர் ஜானகி, கணித மேதை ராமானுஜன் அளவுக்கு முக்கியமானவர். தன் கணித மேதைமையை உலகம் அங்கீகரித்து உதவும் வரை வறுமையில் வாட நேர்ந்ததால், அடிக்கடி மனச் சோர்வுக்கு ஆளானவர் ராமானுஜன். ஆனால் ஜானகி நேர்மாறாக வாழ்க்கை தனக்கு அளித்த இடையூறுகளை மீறி, நம்பிக்கையோடு வறுமையில் செம்மையாக வாழ்ந்து சாதித்தவர். வாழ்க்கைக் கணக்கில் மேதை ஜானகி!

- ஞாநி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us