PUBLISHED ON : அக் 21, 2019

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, காந்தியடிகளின் 150வது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு, பல ஏற்பாடுகளைச் செய்தது.
இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா திறந்தவெளியில் மலம் கழிக்காத நாடு என்று அறிவித்தார்.
இதை வெறும் அறிவிப்பாக மட்டுமே பார்க்க முடியாது. இதற்குப் பின்னே பெரும் முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சுகாதாரத்தைப்பற்றி பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டன.
கழிவறைகள் கட்டினால் போதுமா? அதோடு சுகாதாரப் பிரச்னை தீர்ந்துவிடுமா என்ற கேள்வி எழுந்தது.
திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கான காரணங்கள் என்னென்ன என்பது முதலில் ஆராயப்பட்டது. அதனால் உண்டாகும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கின. கிராமங்கள் தோறும் மாணவ, மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், கிராம மக்களிடையே மனமாற்றம் உண்டானது. முறையான கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என, பல கிராம மக்கள் தாங்களாகவே முடிவு செய்தனர்.
அரசு ஒருபுறம் பொதுக் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது. அதோடு, கழிவறை வேண்டும் என கேட்கும் மக்களின் தேவைக்கேற்பவும் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.
நேபாளத்தில் இந்த நடைமுறை ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளது. அதை அப்படியே இந்தியாவிலும் பின்பற்றியதில், வெற்றி கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான், பிரதமர், காந்தி ஜெயந்தியன்று, இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் ஒழிந்துவிட்டது என்ற பொருளில் பேசினார்.
ஆனால், இது தொடருமா?
கழிவறையைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதுதான். ஆனால், கழிவறையின் மூலம் சேகரமாகும் கழிவுகளை எப்படிக் கையாளப் போகிறோம்?
ஒவ்வொரு வீட்டிலும் கட்டப்பட்டுள்ள கழிவறை, சோக்பிட் அல்லது செப்டிக் டேங்க்குடன் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், கழிவுகள் அதில் பாதுகாப்பாகச் சேகரமாகும்.
பெரும்பாலான கிராமங்களில் கழிவறைகள் சோக்பிட் முறையில்தான் கட்டப்படுகின்றன. ஆனால், இதை ஒழுங்காகக் கட்டியிருக்கிறார்களா என்பதைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
சோக்பிட் அல்லது செப்டிக் டேங்க் போன்றவற்றில் கசிவு ஏற்பட்டால், அதன் வழியாக கழிவுகள் வெளியேறி மண் மற்றும் நிலத்தடி நீர் கெட்டுப்போகும் அபாயம் உண்டு.
கழிவறைகளைச் சரியாகப் பராமரிக்காவிட்டால், மக்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள்; பழையபடி திறந்தவெளிகளில் மலம் கழிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
கழிவறைகளில் சேகரமாகும் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், அவற்றை மக்கள் முறையாகத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
வெகுவிரையில், இந்தத் திசையில் அரசாங்கம், மற்றொரு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
- கவிதா
