PUBLISHED ON : அக் 20, 2016

பிரஷர் குக்கரில் சமைத்தால், எரிபொருள் செலவைக் குறைத்து, விரைவாகச் சமைக்கலாம். இது எப்படி நிகழ்கிறது? குக்கருக்குள் உருவாகும் நீராவியின் அழுத்தமே, உணவு விரைவாக வேகக் காரணம். மூடப்படாத ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, சாதாரண காற்றழுத்தச் சூழலில் சூடேற்றினால், நீர் 100 டிகிரி செல்சியஸில் கொதிக்கும். அதில் மூழ்கிக் கொதிக்கும் உணவுப் பொருளும் 100 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே கொதிக்க முடியும். ஏனெனில், மிதமிஞ்சிய சூடால், நீர் ஆவியாகி வெளியேறி விடும். அதுவே, பாத்திரத்தைக் காற்று புகாத வண்ணம் மூடிய நிலையில் சூடேற்றினால், உருவாகும் நீராவி உள்ளேயே அடைபடுவதால், பாத்திரத்தின் உள்ளே இருக்கும் அழுத்தம் அதிகரிக்கும். குக்கர் மூடியின் உள் விளிம்பில் கேஸ்கட் எனும் ரப்பர் இணைப்பிறுக்கியை (Gasket Rubber) பொருத்துவோம். இது சிறிதளவுகூட காற்று வெளியேறிவிடாமல் தடுத்து, அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் வெப்பம் 100 டிகிரி செல்சியஸையும் தாண்டி, நீரையும் அதி வெப்பமடையச் (Super heat) செய்கிறது. சாதாரண சூழலில் காற்றழுத்தம், கிட்டத்தட்ட ஒரு பார் (Bar) என்றால், (Bar என்பது அழுத்தத்தின் அளவை) ஒரு பிரஷர் குக்கரில், உயர் கொதி நிலையில் அழுத்தம் 2 பார் வரை போகலாம். அதனால் நீரின் வெப்பம் 120 டிகிரி செல்சியஸ் வரை செல்லும். இதனால் உணவு விரைவில் வெந்துவிடுகிறது. உள்ளே அழுத்தம் மிதமிஞ்சி செல்லும்போது, குக்கரின் மேல் பொருத்தப்படும் விசில், பாதுகாப்பு அடைப்பானை (safety valve) திறந்து, காற்றை வெளியேற்றி குக்குருக்குள் இருக்கும் அழுத்தத்தைக் குறைத்து, அது வெடித்து விடாமல் பார்த்துக் கொள்கிறது.
-ரேவதி
