PUBLISHED ON : மார் 16, 2020

உலகின் கடைசி வெள்ளைப் பெண் ஒட்டகச்சிவிங்கியும், அதன் ஏழு மாதக் குட்டியும் சமீபத்தில் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டன.
ஆப்பிரிக்காவின் வடகிழக்கு கென்யா காட்டுப்பகுதியில் இரண்டு வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இருப்பதாக கடந்த 2017ஆம் ஆண்டில் வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுவரை உலகில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இருந்ததற்கான எந்தவிதச் சான்றுகளும் இல்லை. அதனால், வன அதிகாரிகள் அதற்கான காணொலியை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, நிரூபித்தனர். இந்தச் செய்தி உலகம் முழுவதும் பிரபலமானது.
சமீபத்தில், காட்டில் ரோந்துப் பணியில் இருந்தபோது, இரண்டு எலும்பு எச்சங்களைக் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர் அதிகாரிகள். அதில் ஒன்று பெண் ஒட்டகச்சிவிங்கி என்றும், மற்றொன்று அதன் ஏழு மாதக் குட்டி எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை நிறத்தில் 'நீண்ட கழுத்தும், உயரமான தோற்றமும் கொண்டிருக்கும் ஒட்டகச்சிவிங்களை சமூக விரோதிகள் பார்த்திருக்க வாய்ப்புண்டு' என தான்சானியாவின் தரங்கிர் தேசியப் பூங்கா (Tanzania's Tarangire National Park) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பகுதியில்தான் முதன்முதலில் வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பூங்காவில் யானைகள், சிவிங்கிப்புலி, கழுதைப்புலி என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்புகூட ஆண், பெண் மற்றும் குட்டி ஆகிய மூன்றையும் ஒருசில அதிகாரிகள் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது அதன் குடும்பத்தின் பெண்ணும், குட்டியும் வேட்டையாடப் பட்டுள்ளன.
ஒரே ஓர் ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டும் எங்காவது இருக்க வாய்ப்புண்டு என்கின்றனர் வனத்துறையினர்.
உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அரியவகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள் இல்லை என்பதால், வன ஆர்வலர்களை இந்தச் சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரபணு குறைபாடு
வெள்ளை நிறத்தில் காணப்பட்ட ஒட்டகச்சிவிங்கிகளுக்கு அல்பினிசம் (Albinism) குறைபாடு உள்ளதாக முதலில் அறியப்பட்டது. ஆனால், லூசிசம் (leucism) என்ற மரபணு குறைபாடு இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரபணு குறைபாடு இருந்தால், உடலின் தோல் நிறம் வெள்ளையாகவும், கண்கள் கருப்பு நிறத்திலும் காணப்படும். இந்த மரபணு குறைபாட்டால், ஒட்டகச்சிவிங்கிகளுக்கு எந்தவிதப் பிரச்னைகளும் இருக்காது என்று ஒட்டகச்சிவிங்கி ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

