தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடற்பறவைகளைத் தேடி ஒரு பயணம்

கடற்பறவைகளைத் தேடி ஒரு பயணம்

கடற்பறவைகளைத் தேடி ஒரு பயணம்


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் இருக்கும் பறவை ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து கடல் பறவைகளைப் பார்க்க ஒவ்வொரு ஆண்டும், சில கடற்பயணங்களை மேற்கொள்வதுண்டு. 'பெலாஜிக்' (Pelagic) என்று அழைக்கப்படும் இந்தக் கடற்பயணம், கடற்கரைகளிலிருந்து உள்ளே நூறு மைல் தொலைவுக்கு அப்பால் நடுக்கடலில் வாழும் கடல் பறவைகளைக் கண்டு, அவற்றின் இருப்பைப் பதிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

ஆலாக்கள், கடற்காகங்கள் போன்ற பறவைகள் கடற்கரை, ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளைச் சார்ந்து வாழ்ந்தாலும், அவை கடல் பறவைகள் என்ற பகுப்புக்குள் முழுமையாகக்கொண்டு வர முடியாது. செங்கால் குழாய் மூக்கி, வில்சன் கடற்குருவி உள்ளிட்ட கடல் பறவைகள் ஆண்டு முழுவதும் நடுக்கடலிலேயே வாழ்பவை. கடந்த ஜூலை மாதம் பறவை ஆர்வலர் சுப்பு தலைமையில் இருபது பறவையாளர்கள், சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஒரு பெரிய படகில் கிளம்பினோம். படகு கிளம்பியதும் துறைமுகத்தின் நுழைவாயிலில் ஆற்று ஆலா, மீசை ஆலா உள்ளிட்ட பலவகை ஆலாக்களைக் காண முடிந்தது. துறைமுக வழிகாட்டி மிதவைகள் மீது அமர்ந்திருந்த ஏராளமான ஆலாப் பறவைகள் எங்களை வரவேற்றன. நான்கு மீனவர்கள் எங்களுக்குத் துணையாக உடன் வந்தார்கள். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படகு நடுக்கடலை நோக்கி சீறிக் கொண்டிருந்தது. பலருக்குக் கடற்பயணம் புதிது என்பதால், கடற்காற்றின் அலையில் படகு மேலும் கீழுமாக அசைந்தபோது, பயணத்தில் சிரமம் ஏற்பட்டது.

'வில்சன் ஸ்டோம் பெட்ரல், நைன் ஓ கிளாக்' என்றொருவர் கத்தினார். அதாவது கடிகாரத்தின் ஒன்பது மணி திசையில் ஒரு 'வில்சன் கடற்குருவி' (Wilson Storm Petrel) பறந்து வருவதை அவர் உறுதி செய்தார். கடற்பயணங்களில் திசைகளை அறிய, ஒரு கடிகார முள்ளைப் போல படகை உருவகித்துக் கொள்வது வழக்கம். அதாவது '3 O'Clock என்றால் படகு முனையின் வலப்பக்கம் நடுவில் பார்க்க வேண்டும். வில்சன் கடற்குருவி சற்று தூரத்தில் ஒன்பது மணி திசையில் இரை தேடி பறந்து கொண்டிருந்தது. மீனவர்கள் சட்டென படகில் நிரம்பியிருந்த சிறு காரப்பொடி மீன்களை படகுக்கு வெளியே கடலில் தூவினர். கடற்பறவைகளைக் கவர இது ஒரு உத்தி. பெரும்பாலும், கடலின் சீற்றத்தால், கடற்பறவைகளை இருகண் நோக்கியில் பார்ப்பதோ, திறன்மிக்க கேமராக்களில் படமெடுப்பதோகூட, சற்று சிரமமான காரியம்தான்.

வில்சன் கடற்குருவிக்குப் பிறகு, சில குழாய் மூக்கிகளையும் பார்த்தோம். காலிடுக்குகளில் லேசான சவ்வுகளைப் பெற்ற குழாய் மூக்கிகள் (Flesh Footed Shear Water) கடலில் அமர்ந்திருந்த காட்சி அழகானது. பறவைகளைப் பார்த்த இடங்களை ஜி.பி.எஸ். (GPS) மூலம் பதிவு செய்துகொண்டே வந்தனர். பறவைகளைப் பற்றிய பேச்சுகளும் பேசித் தீரவில்லை.

எங்களுடைய பயணத்தின் முக்கிய சிறப்பு, இளஞ்சிவப்பு ஆலா (Roseate Tern) ஒன்றை பார்த்ததுதான். இந்தப் பிராந்தியத்துக்கு இப்பறவை மிகப்புதிது. பறவை ஆர்வலர்கள் தங்கள் வாழ்நாளில் முதல்முறையாகப் பார்த்த ஒரு பறவை இனத்தை, 'லைஃபர்' (Lifer) என்று சொல்வார்கள். அப்படியான ஒரு லைஃபராக இளஞ்சிவப்பு ஆலா பலருக்கும் அமைந்தது. ஒரு நாள் முழுவதும் நடுக்கடலில் கடல்வாழ் பறவைகளோடும், கத்திபோல துள்ளியெழுந்து பறக்கும் மீன்களோடும் சக பறவையாளர்களோடும் செலவழித்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

-- அ.மு.செய்யது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us