தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முகவரி கொடுத்த கால்பந்து!

முகவரி கொடுத்த கால்பந்து!

முகவரி கொடுத்த கால்பந்து!


PUBLISHED ON : ஜூலை 16, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கீதா...

ரஷ்யாவில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான, கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில், இந்திய அணிக்குத் தலைமையேற்று, கோப்பையை வென்று வந்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள நடைபாதைதான் அவர் முகவரி. அன்று கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டுத் திரும்பிய சங்கீதாவுக்கு, மழைக்காக ஒதுங்க வீடு எதுவும் இல்லை. கடையோரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபடியே, அவரிடம் பேசினோம்.

“பாட்டி காலத்தில் இருந்தே இந்தத் தெருதான் எங்கள் வீடு. சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் தெருவோரத்தில்தான். அப்பா சிறுவயதிலேயே எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டார். அம்மாவும் அக்காவும்தான் என்னைக் கவனித்து வருகிறார்கள்” என்று பேச ஆரம்பித்த சங்கீதா, 13 வயதில் படிப்பை விட்டுவிட்டு, ஸ்டீல் பட்டறைக்கு வேலைக்குச் சென்றவர்.

தெருவோரக் குழந்தைகளுக்கான சேவை அமைப்பான கருணாலயா, சங்கீதாவிற்கு உதவிக்கரம் நீட்டி, படிப்பை மீண்டும் தொடர வைத்தது. எனினும், அவருக்கு கால்பந்து விளையாட்டை வேடிக்கை பார்க்கவும், பந்தை எட்டி உதைக்கவும் அதிக ஆர்வம் இருந்தது.

இதையடுத்து, அவரைப் போன்ற தெருவோரச் சிறுமிகளைச் சேர்த்து, கால்பந்து அணி உருவாக்கப்பட்டது. அதே ஆர்வத்துடன், 2015இல் சென்னையில் நடந்த 'ஸ்லம் சாக்கர்' போட்டியில் பங்கேற்ற சங்கீதா, அபாரத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து, ஸ்காட்லாந்தில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். 64 உலக அணிகள் பங்கேற்ற அப்போட்டியில், இந்தியா, 5வது இடத்தைப் பிடித்தது.

கடந்த மே மாதம், ரஷ்யாவில் தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்து சர்வதேசப் போட்டி நடந்தது. இந்தியாவிலிருந்து சென்ற அணிக்கு சங்கீதா தலைமை வகித்தார். இதில், 29 நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன. அங்கு, சிறப்பாக ஆடி வெற்றிக் கோப்பையுடன் திரும்பியிருக்கிறார் சங்கீதா.

“என் மகள் கால்பந்து விளையாடப்போனது, ஆரம்பத்தில் எனக்குப் பிடிக்கவில்லை. என் உறவினர்கள் தடுத்தார்கள். ஆனால், இப்போது கால்பந்துதான் சங்கீதாவுக்கு அடையாளமாக மாறியுள்ளது.” என்று சிரிக்கிறார் சங்கீதாவின் அம்மா. அந்தப் பகுதி தெருவோர மக்களுக்கு இப்போது சங்கீதாதான் ரோல் மாடல். தெருவோரச் சிறுமிகள் பலர் கால்பந்தாட்டப் பயிற்சியில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.

சங்கீதா, சென்னை இராணிமேரிக் கல்லூரியில், இளங்கலை உடற்கல்வி படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியின், மகளிர் கால்பந்தாட்ட அணியிலும் இடம் கிடைத்துள்ளது. எனினும், அரசிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது சங்கீதாவின் ஆதங்கம்.

“வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் எடுக்க முடியாமல், நிறையக் கஷ்டங்களை அனுபவித்தேன். தெருவோரவாசிகளுக்கு என்ன முகவரி இருக்கும்? எங்களைப் போன்றவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் போன்றவை சரியாக இல்லை. தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து பிளஸ் 2 முடித்தாலும், கல்லூரியில் சேர ஏராளமான சிக்கல்கள். பலநாள் அலைந்து திரிந்து, போராடி சாதிச் சான்றிதழ் பெற்ற பிறகே, கல்லூரியில் சேர முடிந்தது. இதுபோன்று தெருவில் வசிப்பவர்களுக்கு உள்ள பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும்; அதற்காக நான் அரசு அதிகாரியாக ஆவேன்” என்று உறுதியுடன் சொல்கிறார் சங்கீதா.

இந்திய தேசிய அணியில் இடம்பிடித்து, உலகக் கோப்பை போட்டியில் ஆட வேண்டும் என்பதே சங்கீதாவின் இலக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us