PUBLISHED ON : மார் 28, 2016
இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி, 'டுவென்டி - 20' (2007), ஒரு நாள் போட்டி (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) என ஐ.சி.சி. நடத்தும் மூன்று விதமான தொடரிலும் கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் 1981ல் பிறந்தவர் தோனி. ஆரம்பத்தில் கால்பந்தில் கோல்கீப்பராக விளையாடினார். பின், அப்படியே கிரிக்கெட்டுக்கு மாறினார். வங்கதேசத்திற்கு எதிரான (டிசம்பர் 23, 2004, சிட்டகாங்) ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். பாகிஸ்தானுக்கு எதிரான (ஏப்.5, 2005, விசாகப்பட்டனம்) ஒரு நாள் போட்டியில் 123 பந்தில் 148 ரன்கள் விளாசியது, இவரை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றது.
கடந்த 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் 'டுவென்டி-20' உலக கோப்பையில் சற்றும் எதிர்பாராமல் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் அசத்திய தோனி, 1983க்குப் பின் இந்தியாவுக்கு இரண்டாவது உலக கோப்பையைக் கொண்டு வந்தார். தொடர்ந்து 2011ல் சொந்தமண்ணில், இந்தியா 50 ஓவர் உலக கோப்பை வென்றது. இவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தது. இக்கட்டான நேரத்திலும் 'கூலாக' செயல்படும் இவர், 'பினிஷராக' வெற்றி தேடித்தருவதில் கில்லாடி. கேப்டன், பேட்ஸ்மேன், 'விக்கெட் கீப்பர்' என மூன்றிலும் முத்திரை பதிப்பவர்.
