PUBLISHED ON : ஜன 16, 2017

இன்றைய அறிவியல் உலகில், தாவரங்களின் குணம், இயல்பு, பயன் பற்றி அறிந்துகொள்ள இணையம் வழிவகை செய்கிறது. அதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், சங்க காலத்தில் அப்படி இல்லை. ஆனாலும், அவர்கள் நம்மை விட, மதிநுட்பம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதற்கு உதாரணம்தான் நெருஞ்சிப் பூ. நமக்கெல்லாம் சூரிய காந்திப் பூ மட்டும்தான் சூரியனைச் சுற்றுகிறது என்று தெரியும். ஆனால் குட்டியாய் தரையில் படர்ந்திருக்கும் நெருஞ்சிப் பூவும் சூரியனைச் சுற்றும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
நம் மூதாதையர்களுக்கு அது தெரிந்திருக்கிறது. அவர்கள் அதை கவனித்திருக்கிறார்கள். சூரியனை நெருஞ்சி சுற்றுவதை சங்கப் பாடல்களில் காணமுடிகிறது. அகநானூறு 336ம் பாடலில், தலைவி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. அதில், 'முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியானாயின், வென் வேல்' 'அனைவரும் ஒன்று கூடி, முழவு முழக்கத்துடன் துணங்கை விழாவில் ஆடுகின்றர். (துணங்கை என்பது அந்தக் காலத்தில் ஆடல், பாடலுடன் நடைபெற்ற ஒருவகை விழா) அங்கு நான் செல்லவில்லை. சென்றால் சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கும் நெருஞ்சிப் பூ போல, அவன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பான்' என்று தலைவி கூறும் இடத்தில்தான் நெருஞ்சிப் பூ சூரியனைச் சுற்றி வரும் செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
குறந்தொகை 315ம் பாடலில் வேறொரு தலைவி சொல்கிறாள்.
'எழுதரு மதியம் கடற் கண்டாங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அணையன் தோழி
நெருஞ்சி அணைய என் பெரும் பணைத் தோளே'
(பணைத்தோள் - பருத்த மூங்கில் போன்ற தோள்)
கடலிலிருந்து மேலெழும் முழு நிலவினைப் பார்த்தால், அதன் ஒளிவெள்ளம் மலையிலிருந்து விழும் அருவி போலவே உள்ளது. அத்தகு, உயர்ந்து ஓங்கிய மலைநாடன் தலைவன். அவன் கதிரவனைப் போன்றவன். என் தோள்கள் கதிரவனையே நோக்கும் நெருஞ்சி மலர் போன்றவை என்று கூறுவதில் இருந்தும், நெருஞ்சி மலர் சூரியன் செல்லும் திசையெல்லாம் செல்கிறது என்பதை உறுதியாக நம்பலாம்.
குட்டியாய் மஞ்சள் நிறத்தில் பூக்கும் தாவரம்தான் நெருஞ்சி. இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுகிறது.
சங்கப் பாடல்கள் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு விழா, செய்தி, மரம், இலை, பூ, பறவைகள் பற்றிய நுணுக்கங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தால், புரிந்துகொள்ள முடியும். சித்தர், தனிப்பாடல்களிலும் நெருஞ்சி முள் பற்றி பதிவுகள் ஏராளமாய் உள்ளன.

