தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வலி மிகுதல் பகுதி- 32

வலி மிகுதல் பகுதி- 32

வலி மிகுதல் பகுதி- 32


PUBLISHED ON : ஆக 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகுமா ?

பண்புத் தொகையில் இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்றொரு வகை இருக்கிறது. இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டி வரும். அவற்றில் முதற்சொல், இரண்டாம் சொல்லின் பண்பினை உணர்த்தும். முதற்சொல்லானது, இரண்டாம் சொல்லின் எத்தகைய பண்பினையும் உணர்த்தும்? அவ்விரண்டு சொற்களுக்கிடையே 'ஆகிய' என்னும் பண்புருவினை விரித்துப் பொருள்கொள்ள வேண்டும். முதற்சொல் சிறப்புப் பெயராகவும், இரண்டாம் சொல் பொதுப்பெயராகவும் இருக்கும்

வெள்ளைத் தாமரை - வெள்ளை ஆகிய தாமரை என்று விரித்துப் பொருள்கொள்வோம். முதற்சொல் தாமரை என்பது பொதுப்பெயர். இரண்டாம் சொல் வெள்ளை என்பது சிறப்புப் பெயர். தாமரையின் நிறப்பண்பு உணர்த்தப்படுகிறது. இவ்வாறு சிறப்புப் பெயரும் பொதுப்பெயருமாக ஒட்டி வருபவை இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள். அவற்றுக்கிடையே கட்டாயம் வலி மிகும்.

வட்டப் பலகை - வட்டம் ஆகிய பலகை. இங்கே பலகையின் வடிவப் பண்பு உணர்த்தப்பட்டது

பலாப் பழம், நெல்லிக் கனி, மல்லிகைப் பூ, சாரைப் பாம்பு, வாழைக்குலை ஆகிய யாவும் இருபெயரொட்டுப் பண்புத் தொகைகளே. முதலில் சிறப்புப் பெயர், அடுத்து பொதுப்பெயர் என்று வரும், அவற்றுக்கிடையே கட்டாயம் வலி மிகும்.

சில இடங்களில் மாறியும் வருவதுண்டு. முதலில் பொதுப்பெயரும் அடுத்ததாகச் சிறப்புப் பெயரும் வரும்.

மன்னர் செங்குட்டுவன்

புலவர் புகழேந்தி

ஆசிரியர் தொல்காப்பியர்

தலைநகர் சென்னை

மேற்சொன்னவற்றில் பொதுப்பெயர் முதலிலும், சிறப்புப் பெயர் பின்னாலும் வருகின்றன. அவையும் இருபெயரொட்டுப் பண்புத் தொகைகளே. அவற்றுக்கிடையே வலி மிகுவிப்பதில்லை.

-மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us