PUBLISHED ON : ஏப் 25, 2016

ராஜாக்களுக்கு, பெரும்பாலும் பக்கத்து நாட்டு மன்னர்களோடு சண்டைக்குப் போவதே வழக்கம் என்பது போலத்தான் படித்திருக்கிறோம்.
ஆனால், வேறு சில சிறப்புத் தகுதிகளைக் கொண்ட ஓர் அரசர் இருந்தார். மகேந்திர வர்ம பல்லவன். கி.பி. 600 முதல் 630 வரை மல்லையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். மல்லையின் தற்போதைய பெயர் மாமல்லபுரம்.
பல்லவ மன்னரான அவர் இசையில் வல்லுநராகத் திகழ்ந்தார். பல பேருக்கு இசை கற்றுக்கொடுக்கவும் செய்தார். 'சங்கீர்ண ஜாதி' என்னும் இசைப் பண் ஒன்றைப் புதிதாக உருவாக்கவும் செய்தார்.
ஓவியத்தின் மீதும் இவருக்குக் கொள்ளைப் பிரியம் இருந்தது. கண்ணைக் கவரும் ஓவியங்களைத் தீட்டுவார். 'சித்திரக்கார புலி' என்றே அழைக்கப்பட்டார். 'தட்சிண சித்திரம்' என்னும் ஓவிய நூலுக்கு உரை எழுதியுள்ளார்.
'மத்த விலாச பிரஹசனம்' என்ற நாடகத்தை வடமொழியில் எழுதினார். பௌத்தத் துறவிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட நகைச்சுவை நாடகம் அது.
கோயில்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு வந்த காலத்தில், பாறை, குன்று போன்றவற்றைக் குடைந்து சிற்பங்களையும் கோயில்களையும் உருவாக்கினார். அப்படி இந்த அரசர் அமைத்த சிலைகள், பாறைச் சிற்பங்கள் மாமல்லபுரத்தில் இன்றும் இருக்கின்றன. மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலில் 'செங்கல், சுண்ணாம்பு, மரம்' மூன்றும் இல்லாமல் கோயில் கட்டிய செய்தியைக் கல்வெட்டில் பதித்துள்ளார். மகேந்திர வர்மனுக்கு குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசகன் போன்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. கல்லிலே கலை ஆர்வம் கொண்ட மன்னர்!
