PUBLISHED ON : பிப் 01, 2016

சென்ற இதழில் காகிதத்தில் யானை பொம்மை செய்யக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தோம். இதோ… அது!
ரிப்பன் வடிவில் வெட்டப்பட்ட காகிதத்தைக் கொண்டு, சுருள் வடிவங்கள் செய்யும் கலைக்கு ஆங்கிலத்தில் 'பேப்பர் கிவில்லிங் ஆர்ட்' (Paper Quilling Art) என்று பெயர். தமிழில் 'காகிதச் சுருள் கலை'என்று சொல்லலாம். 'பேப்பர் கிவில்லிங்' வெறும் ஆபரணங்கள் மட்டும் செய்வதற்கான கலை அல்ல. பூக்கள், பறவைகள், விலங்குகள் என வித விதமான வடிவங்களை நாம் செய்ய முடியும். கலை உணர்வும், படைப்பு ஆர்வமும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் இந்தக் கலையைப் பழகலாம்.
யானை பொம்மையைச் செய்ய நமக்குத் தேவையான பொருட்கள்: காகிதப் பட்டைகள் 6. (கிவில்லிங் பேப்பர் ஸ்ட்ரிப்கள் - Quilling paper strips). இது பல்வேறு வண்ணங்களில், வித விதமான அளவுகளில் கடைகளில் கிடைக்கிறது. அழுத்தமான வண்ணத் தாள்களை, குறிப்பிட்ட அகலத்தில் ரிப்பன் போன்ற வடிவில் வெட்டியும் பயன்படுத்தலாம். நாம் செய்யப்போகும் பெரிய யானை பொம்மைக்கு 45 செ.மீ. நீளம் , 5 மி.மீ. அகலம் கொண்ட 6 பட்டைகள் தேவை.
காகிதப் பட்டையை சுற்றுவதற்கு கிவில்லிங் டூல் (Quilling Tool): இது பிடித்துக் கொள்ள வசதியாக கைப்பிடி கொண்ட ஓர் ஊசி. இதன் முனையில் சிறிய பிளவு இருக்கும். இந்தப் பிளவுக்குள் காகிதப் பட்டையை நுழைத்து சீராகச் சுற்றலாம். ஒட்டுவதற்கு, ஃபெவிக்கால் (Fevicol, வெட்டுவதற்கு கத்திரிக் கோல் (Scissors).
1. யானையின் உடல் பகுதி: நான்கு பட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து, இறுக்கமான சுருள் ஒன்றை செய்ய வேண்டும்.
2. தலைப் பகுதி: ஒரு பட்டையில் சிறிய சுருள் ஒன்றை செய்யவும்.சுருளை இறுக்காமல் விட்டால் இலகுவான சுருளாக விரியும். விரிந்ததும் முனையை ஒட்டவும். இந்த சுருளின் ஒரு புறத்தைக் பிடித்துக் கொண்டு, மறு புறத்தைக் குறுக்கி இழுத்து, துதிக்கை வடிவத்தில் சுருட்டி மடிக்கவும்.
3. கால்கள்: 6 செ. மீட்டர் நீளத்தில் இரண்டு பட்டைகளை வெட்டி, இரண்டு சிறிய இறுக்கமான சுருள்கள் செய்துகொள்ளவும். இந்த சுருள்களைத் தட்டையாக அழுத்தி விட்டால் கால்கள் செய்வதற்கான பாகங்கள் தயார்.
4. காது: 6 செ. மீட்டர் நீளத்துக்கு வெட்டப்பட்ட பட்டையை அகலத்தில் இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதில் ஒரு பட்டையை எடுத்து இலகு சுருள் ஒன்றை செய்து கொள்ளவும். 'D' வடிவம் வருமாறு அழுத்திவிடவும்.
5. வால்: அகலத்தில் பாதி வெட்டப்பட்ட பட்டையில் வாலின் முனைக்காக சிறிய சுருளைச் செய்யவும். யானையின் உடலுக்கேற்ற வால் நீளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எஞ்சிய பட்டையை வெட்டி நீக்கி விடவும்.
இனி, யானையின் உடல் பகுதியில் தலை, காது, கால்கள், வால் பகுதிகளை ஒட்ட வேண்டியதுதான். பட்டைகளின் நீளத்தைக் குறைத்து விதவிதமான அளவுகளில் யானைகளைச் செய்யலாம். படத்தில் இருக்கும் அம்மா யானையின் உடல் செய்வதற்கு மூன்று பட்டைகளும், குட்டி யானையின் உடலுக்கு ஒரு பட்டையும் தேவைப்பட்டன.
ஓவியா டீச்சர்
