PUBLISHED ON : ஏப் 24, 2017
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
பாலில் தண்ணீர் கலந்திருப்பதைப் பரிசோதிக்கும் லாக்டோ மீட்டர் எவ்வாறு செயல்படுகிறது?
பா.ராம்பிரியா, 3ம் வகுப்பு, ஊ.ஒ.து.பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.
பாலில் தண்ணீர் கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதைக் கண்டறிய, லாக்டோ மீட்டர் (Lactometer) பயன்படுகிறது. பாலின் ஒப்பு அடர்த்தியை அளந்து, அதன் மூலமாக அதில் தண்ணீர் கலப்படம் இருக்கிறதா என, இந்தக் கருவி கண்டறியும். ஒரு முனையில் பாதரசம் (மெர்க்குரி) நிரப்பிய பந்துபோன்ற உருளை வடிவில் அமைந்த கருவிதான் லாக்டோ மீட்டர். நீரை விட பால் கூடுதல் அடர்த்தியானது. எனவே, நீரில் இந்த உருளை மூழ்கும் அதே அளவு, நீர் கலப்படம் இல்லாத செறிவான பாலில் மூழ்காது. நீரில் மூழ்கும் அளவிற்கும் பாலில் மிதக்கவேண்டிய அளவுக்கும் இடையே எவ்வளவு அளவில் மிதக்கிறது என்பதை வைத்து, பாலின் தரத்தை அறியலாம். தரமான கறந்த பசும்பால் 26 - 28 டிகிரியிலும், எருமைப்பால் 28 - 32 டிகிரியிலும் இருக்கவேண்டும்.
காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது ஏன்?
மோ.நித்யா, 9ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், போலச்சேரி, சென்னை.
உடலின் இயல்பான வெப்பநிலை சராசரியாக 98.6 டிகிரி ஃபாரன்ஹீட். நமக்கு ஏற்படும் தொற்றுநோய்களின் மிக முக்கியமான அறிகுறியாக இருப்பது காய்ச்சல். வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை வெளியேறும். வியர்வை உலரும்போது வெப்பநிலை சீராகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை குறையும்போது, நம் மூளையில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி, உடல் நடுக்கத்தைத் தூண்டிவிடும். இதனால், தசைகளுக்கு வேலை அதிகரித்து, உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும். உடல் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி, வெப்பம் வெளியேறாமல் தடுக்கும். உடலைத் தாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள், பைரோஜென் என்ற வெப்பத்தை அதிகரிக்கும் பொருளை உருவாக்குகின்றன.
இதனால்தான், உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது.
நுண்ணுயிரிகளின் தொற்று உடலில் ஏற்படும்போது, அதனை எதிர்க்க இன்டெர்லியுகின்-1 (IL-1) போன்ற காய்ச்சலூக்கிகளை (பைரோஜென் - pyrogen) ரத்தத்தின் வெள்ளையணுக்கள் உமிழ்கின்றன. ரத்தத்தின் வழியே காய்ச்சலூக்கிகள், வெப்பத்தைச் சீர் செய்யும் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதிக்கு செல்லும்போது, உடல் வெப்பம் கூடுகிறது. இதையே காய்ச்சல் அல்லது ஜுரம் என்கிறோம். உடல்வெப்பநிலை உயரும்போது, தாக்கும் கிருமிகளின் வளர்ச்சி தடைபடும். இதை வைத்துப் பார்த்தால் ஜுரம் என்பது, தொற்றுக் கிருமிகளை எதிர்க்க உடல் செய்யும் சாகசம். ஆனால், உடல் செய்யும் இந்த சாகசம், உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். இதுபோன்ற தொற்றுக்களால் மட்டுமே, காய்ச்சல் ஏற்படும் எனக் கூற முடியாது. கடும் உடற்பயிற்சி, கட்டிகளை உருவாக்கும் செல்கள் சுரக்கும் ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நோய்களாலும் காய்ச்சல் ஏற்படும்.
பனிக் காற்றில் ஈரப்பதம் இருந்தும், தோலில் ஏன் வறட்சித் தன்மை ஏற்படுகிறது?
எஸ். முகிலன், 6ம் வகுப்பு, ஒரிசான் அகாடமி, போத்தனூர், கோவை.
உடலின் ஆரோக்கியத்தைப் புலப்படுத்துவதில், தோலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். அவ்வாறே பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருந்தாலும், அது குறைவாகவே இருக்கும். அதனால் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. தோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படும். இதனால் வெள்ளைத் திட்டுகள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம்.
வறண்ட சருமத்தினர், கோடையை எண்ணிப் பயப்படத் தேவையில்லை. இவர்களுக்கு அதிகம் வியர்க்கும் என்பதால், அதைச் சமாளிக்க ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு முறையாவது குளித்தால் இதிலிருந்து தப்பிவிடலாம்.
ஈக்களும் கொசுக்களும் மாசடைந்த நீர் உள்ள பகுதிகளில் மட்டும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது ஏன்?
ரா.காவியா, 11ம் வகுப்பு, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு.
அழுக்கான, மாசடைந்த நீரில் மட்டுமல்ல; தேங்கியிருக்கும் நீர் நல்ல நீராக இருந்தால் கூட கொசு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். எனவே, தேங்கியிருக்கும் நீரை பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும்.
ஏரி, குளம் போன்ற பகுதிகளிலும் கொசு வளரலாம். ஆனால், அந்த நீர்நிலைகளில் மீன் போன்ற உயிரினங்கள் வளர்ந்தால், அவை கொசு முட்டைகளை உண்டு, கொசு வளர்ச்சியைத் தடைசெய்துவிடும். சாலை அல்லது வீடுகளின் அருகே தேங்கியிருக்கும் மாசடைந்த நீரில் மீன் உள்ளிட்ட உயிரினங்கள் இருக்காது; எனவே, கொசு போன்ற உயிரிகள் பல்கிப்பெருகி விடுகின்றன.
