
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
வானில் மேகங்களின் நகர்வு எவ்வாறு நடைபெறுகிறது?
ச.கீர்த்தனா, 4ம் வகுப்பு, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.
நிலப்பரப்பின் அனைத்துப் பகுதியும் சூரிய ஒளி பட்டுச் சம அளவில் சுடுவதில்லை. குறிப்பிட்ட பகுதி கூடுதல் சூடாகும்போது, கொதிக்கும் நீரில் குமிழி உருவாவது போல, வெப்பக்காற்றுக் குமிழி உருவாகும். சூடான காற்று மேலே உயரும் என்பதால், இந்தக் குமிழி உயரே, உயரே செல்லும். இதில் நீராவி செறிவாக இருந்தால், அது மேகமாக உருவெடுக்கும்.
மேகம் என்பது, சிறுசிறு நீர்த் துளிகளின் திரட்சி. குழாயில் சொட்டும் நீர்த் துளியில் பல நூறு மடங்கு சிறிய அளவில் இருக்கும் இந்த நீர்த் துளிகள், அவற்றின் எடை காரணமாகக் கீழே விழும். வீசும் காற்று இலகுவான இறகை காற்றில் மிதக்கச் செய்வது போல, மேகத்தில் உள்ள எடைகுறைந்த துளிகளை மேல்நோக்கி மிதக்கச் செய்கிறது. நீராவி செறிவாக உள்ள காற்றுக் குமிழியே மேகம்.
வளிமண்டலத்தில் பல்வேறு உயரங்களில் காற்று வீசும். இவ்வாறு வீசும் காற்று மேகத்தை அங்கும் இங்கும் நகர்த்திச் செல்லும். எடுத்துக்காட்டாக ஏப்ரல், ஜூன் வரை கோடை காலத்தில், இந்திய நிலப்பரப்பு வெப்பமாக இருப்பதால் ஏற்படும் குறை காற்றழுத்தம், இந்தியப் பெருங்கடலில் இருந்து காற்றை இழுக்கும். இந்த பருவக் காற்று கடலின் மேலே உருவாகும் மேகத்தை நகர்த்தி, இந்திய துணைக்கண்ட பரப்பின் மீது கொண்டு வந்து தென்மேற்கு பருவ மழையை உருவாக்குகிறது.
குளிர்சாதனப்பெட்டி கனமாகவும், அதிக ஆற்றல் தேவைப்படுவதாகவும் இருப்பது ஏன்? இப்படி இருந்தால்தான் குளிர் காற்று கிடைக்குமா?
எம்.முகம்மது இஸ்மாயில், 10ம் வகுப்பு, ஜான் டிவே மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி.
குளிர்சாதனப் பெட்டி, வெப்ப மாறுதலை ஏற்படுத்த வேண்டும். அதாவது, குறிப்பிட்ட வெப்ப நிலையில் உள்ள பொருளை, வேறு வெப்ப நிலைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு வெப்ப மாறுதலை ஏற்படுத்த, அதிக ஆற்றல் செலவாகும். கூடுதலான வெப்ப மாறுதலை ஏற்படுத்த, அதிக ஆற்றல் தேவைப்படும் இல்லையா?
ஐரோப்பிய நாடுகளில் 28 - 30 டிகிரி வெப்பநிலை இருக்கும்போது, அந்த வெப்பநிலையை 25ஆக குறைக்க தேவைப்படும் ஆற்றலைவிட, வெப்ப மண்டல நாடுகளான நமக்கு 40- 35 டிகிரியிலிருந்து 25க்கு கொண்டுவர கூடுதல் ஆற்றல் தேவைப்படும். குளிர்சாதனப்பெட்டியில் உள்ள கம்ப்ரசர் (Compressor) முதலிய பொருள்கள் எடை அதிகமாக இருப்பதால்தான் அவை கனமாக இருக்கின்றன. இதனால், கனத்துக்கும் குளிர் செய்விக்க எடுக்கும் ஆற்றலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கண் நன்றாகத் தெரிய பயிற்சி இருப்பது போல, காது நன்றாகக் கேட்பதற்கு பயிற்சி இருக்கிறதா?
த. ஹரிஹரன், அருப்புக்கோட்டை.
உடற்பயிற்சி செய்தால் தசைகள் உறுதி பெறுகின்றன. ஆயினும், வயது கூடக்கூட முதுமை ஏற்பட்டு தசைகள் வலுவிழக்கும். அதுபோல கண்களின் தசைகளைப் பயிற்சி மூலம் வலுவாக்க முடியும் என்றாலும், ஓரளவு தசை வலுவிழந்ததும் பயிற்சி மட்டுமே போதாது. கண், உடல் தசைகளை போல காதுகளின் கேட்கும் தன்மையை அதிகரிக்கச் செய்கிற பயிற்சிகள் இல்லை.
நம்முடைய ஐம்புலன்களில், முக்கியமான மூன்று புலன்கள் காது, மூக்கு, தொண்டை. இவைதான் நமக்கு ஏற்படும் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை முறையாகக் கவனித்தாலே உடலின் பல்வேறு பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
அழும்போது வருவதுபோல சிரிக்கும்போதும் ஏன் கண்ணீர் வருகிறது?
மெ.பா.ஸ்ரீராம், இயந்திரவியல் துறை, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை.
மன வருத்தம் அல்லது மிகை மகிழ்ச்சி என்ற இரண்டு மனக்கிளர்ச்சி நிலைகளிலும் கண்ணீர் வரும். உடல் வலி அல்லது மனஅழுத்தம் போன்ற கொந்தளிப்பு நிலையில், மனதின் அழுத்தத்தைக் குறைத்து, அமைதியை ஏற்படுத்த கார்டிசோல் (Cortisol), அட்ரீனலின் (Adrenaline) ஆகிய இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை சுரக்கும்போது இதயத் துடிப்பு அதிகமாகி, ஆழமான மூச்சு விடுவதற்காக நுரையீரல் விரிகிறது. கிளர்ச்சிநிலை மறைந்து அமைதிநிலை ஏற்படவும், இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன. இதே ஹார்மோன் கண்ணீரையும் தூண்டுகிறது. எனவே, மிகை மகிழ்ச்சி நிலையில் 'ஆனந்தக்' கண்ணீர், வருகிறது.
தனிமையில் கண்ணீர் விடுவதும், வாய்விட்டுச் சிரிப்பதும் குறைவு; நெருக்கமானவர்கள் முன்னிலையில்தான் கண்ணீர் விடுகிறோம், வாய்விட்டுச் சிரிக்கிறோம். இரண்டு மனநிலையையும் வெளிப்படையாக வெளிக்காட்டுவதால், அடுத்தவர் நமது மனநிலையை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. கண்சிமிட்டல் போல இதுவும் அனிச்சை செயலே. எவ்வளவு அடக்கினாலும் கண்ணீரையும் சிரிப்பையும் நிறுத்த முடியாது; எனவே, நாம் பாசாங்கு செய்யவும் இயலாது.
சமூக விலங்காகப் பரிணமித்துள்ள நாம், இவ்வாறு ஒரு சில உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுவதன் மூலமே, சமூக கட்டுக்கோப்பை ஏற்படுத்த முடியும். எல்லாம் பாசாங்கு என ஒருவர் மீது ஒருவர் எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்ளும் சமயத்தில், சமூக ஒற்றுமை ஏற்படாது. 'கண்ணீர் விடும்போது மனது கிளர்வுநிலையில் உள்ளது என்பதை அருகே இருப்பவருக்கு எடுத்துக்காட்டுவதற்காக பரிணாம வளர்ச்சியில் உருவானதே கண்ணீர்' என, அறிஞர்கள் கருதுகின்றனர்.