
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. வானவில் அரை வட்டமாகவும், ஏழு வண்ணங்களுடனும் மட்டும் தெரியக் காரணம் என்ன?
அ. கீர்த்தனா, 4ம் வகுப்பு, ஊ.ஒ.தொ.பள்ளி, பெரியார் நகர்.
'அழகான மாலையில் அடிவானம் வரைந்த அரைவட்ட வானவில் மழை' என கவித்துவத்துடன் கூறினாலும், வானவில்லின் வடிவம் முழு வட்டமே! வானவில்லின் கீழ்ப்பகுதி தொடுவானத்தின் கீழே பாதி வட்டம் மறைந்து விடுவதால், மேலே உள்ள அரை வட்டப்பகுதி மட்டும் அடிவானிலிருந்து உயர்ந்து காட்சி தருகிறது.
சூரியனுக்கு எதிர்த் திசை வானத்தில் மழை பெய்யும்போது, மழைத்துளி முப்பெட்டகம் போல செயற்பட்டு, சூரியனின் அனைத்து வண்ணங்களின் கலவைகளையும் 'ஒளிபிரிதல்' என்ற வினையால் பிரிந்து, பல்வேறு நிறங்களாகக் காட்சி தருகிறது. செம்பருத்தி, ரோஜா, குங்குமம் போன்றவைகளின் நிறத்தை மொத்தமாகச் 'சிவப்பு' என நாம் வகைப்படுத்தினாலும், இவையெல்லாம் தனித்தனி நிற வேறுபாடு கொண்டவை அல்லவா? அத்தனை வகை சிவப்பும் வானவில்லில் இருக்கின்றன. இதுபோல பல லட்சம் நிறங்களின் நிறமாலையே வானவில். எந்த நிறத்தை நம்மால் கற்பனை செய்யமுடிந்தாலும், அது வானவில்லின் நிறமாலையில் உள்ளது. இதைத் தொகுத்து VIBGYOR என்கிற ஏழு நிறங்களாக நாம் வகுத்துள்ளோம் அவ்வளவே.
2. பகல், இரவுப் பொழுதுகள் எவ்வாறு அமைகின்றன?
மு.பாகம்பிரியாள், 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
சூரியன் கிழக்கு அடிவானத்தில் இருந்து மேற்கு அடிவானத்துக்குச் சென்று மறையும் காலத்தை, பகல் என வரையறுத்துள்ளோம். வானில் சூரியன் தென்படாத நேரமே இரவு. பூமியின் அச்சு சுமார் 23.5 டிகிரி சாய்வாக உள்ளது. பூமி சூரியனைச் சுற்றும்போது, வடதுருவம் ஒரு சமயத்தில் சூரியனை நோக்கிச் சாய்ந்து இருக்கும். அடுத்த ஆறு மாதம் தென்துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து இருக்கும்.
வடதுருவம் சூரியனை நோக்கி இருக்கும் காலத்தில், வடகோளத்தில் சூரியன் வானில் தென்படும் நேரம் கூடுதலாக இருக்கும். அதாவது பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைந்தும் இருக்கும். வடதுருவத்தில் அந்த ஆறு மாதமும் சூரியன் மறையவே மறையாது. அதேபோல, அடுத்த ஆறு மாதம் தென்துருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்து இருக்கும் பொழுதில் தென்துருவத்தில் ஆறு மாதம் பகலாக இருக்கும்; வடதுருவத்தில் சூரியனே காட்சி தராமல் ஆறு மாதம் நீண்ட இரவு இருக்கும். வடகோளத்தில் பகல் பொழுதின் காலத்தைவிட இரவுப் பொழுதின் காலம் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக சென்னையைப் பொறுத்தவரை 22/12/2017 பகல் பொழுதின் அளவு 11 மணி நேரம் 21 நிமிடங்களாக இருக்கும். அதே சமயம், ஆறு மாதம் கடந்த பின்னர் 09/07/2018 அன்று, 12 மணி நேரம் 51 நிமிடங்களுக்கு பகல் பொழுது நீடிக்கும்.
3. மனிதர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதுபோல் விலங்குகளின் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படாதா?
ச. குருதர்ஷன், 5ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.
நிச்சயம் ஏற்படும். அதனால்தான் வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கும்போது, கவனம் தேவை என்கிறனர் மருத்துவர்கள். பொதுவாகவே, கழிவுகளின் வழியாகப் பரவும் நோய்கள், பெரும்பாலும் சிறுசிறு புழு ஒட்டுண்ணிகள் போன்ற கிருமிகளால் ஏற்படுகிறது. மனிதனைத் தாக்கும் இந்த உயிரிகள் பெரும்பாலும் மற்ற விலங்குகளில் வாழ முடியாது. எனவே, மனிதனுக்குள் வாழ்ந்து மனிதக் கழிவுகளின் வழியாக மட்டுமே அதிகம் பரவுகின்றன.
4. மழைக்கும் புயலுக்கும் என்ன தொடர்பு? புயல் உருவானால் மட்டும்தான் பருவ மழை பெய்யுமா?
மு.ஹேமா, 9ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.
புயல் அடிக்கும்போது மழை பெய்யும்; அதனால், மழை பெய்யும்போதெல்லாம் புயல் அடிக்கும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. வடகிழக்குப் பருவமழை சமயத்தில், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் புயல் வீசும் என்பதற்காக, புயல் வந்தால்தான் பருவமழை என்றும் சொல்வதற்கில்லை.
சுழல், சூறாவளி, புயல் எல்லாம் தனித்த வானிலை நிகழ்வுகள். பருவக்காற்று என்பது, குறிப்பிட்ட கால அளவில் காற்றின் வீசும் திசை மாறி, அதனுடன் நீர்த் துளிகளைக் கொண்டுவந்து பரவலான பகுதியில் மழைப்பொழிவை ஏற்படுத்தும் சற்றே நீண்ட கால வானிலை நிகழ்வு.
அரபிக்கடலை ஒப்பிடும்போது, வங்கக் கடலில் கூடுதல் நதிகள் வந்து கலப்பதால், அங்கு கடல்நீரில் உப்பின் அளவு குறைவு. அதனால், நன்னீரானது கடலின் மேல் படிந்து இருப்பதால் விரைவில் ஆவியாகும். எனவே, கடலின் மேற்பரப்பு சற்றே வெப்பமுடன் இருக்கும். வெப்பமான கடலின் பரப்பில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டு புயல் உருவாகும். எனவே, அரபிக் கடலில் உருவாவதைவிட, நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் வங்காள விரிகுடாவில் புயல்கள் உருவாகின்றன.
பொதுவாக, வடகிழக்குப் பருவ மழையின்போது வீசும் பருவக்காற்று, கூடுதல் நீராவியை ஏந்தி வருவதால், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், வலுவான புயலாகவும் உருவாக, கூடுதல் நீராவி உதவி செய்கிறது. வடகிழக்குப் பருவக்காற்றும் அந்தச் சமயத்தில் ஏற்படும் வலுவான புயல்களும் உடன் நிகழ்வுகளே தவிர, புயலினால் பருவமழை ஏற்படுவதில்லை.

