தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

1. முட்டியைக் கட்டிக்கொண்டு உட்காரக்கூடாது; கன்னத்தில் கை வைக்கக்கூடாது; கால் ஆட்டக்கூடாது; சாப்பிடும்போது இடதுகையை ஊன்றக்கூடாது என்றெல்லாம் கூறுகிறார்களே, இவற்றுக்கு அறிவியல் காரணங்கள் இருக்கின்றனவா?

ஜெ.லட்சுமி தேவிப்ரியா, 12ம் வகுப்பு, கே.சி.ஏ.டி.சி.ஜி பதின்ம மேல்நிலைப் பள்ளி, சாத்தூர்.


இதற்கெல்லாம் அறிவியல் காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கன்னத்தில் கை வைப்பதைக் கவலையின் அடையாளம் எனக் கருதுவதால் அப்படிக் கூறுகிறார்கள். அதுபோலவே, இடது கையால் பொருட்களை வாங்கக்கூடாது; விளக்கு வைத்த பின்னர் வெளி ஆட்கள் யாருக்கும் பணம் தரக்கூடாது போன்ற கருத்துகளும் இருக்கின்றன. இவையெல்லாம் நாம் வாழும் பகுதியின் பண்பாட்டு பழக்கவழக்கங்களே தவிர, எவ்வித அறிவியல் பார்வையும் இல்லை.

அறிவியல் என்பது உலகம் அனைத்துக்கும் பொதுவாக இருப்பதால், எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால், பண்பாடு என்பது காலம், இடம், பழக்கவழக்கங்கள் சார்ந்து மாறுபடும். நமது நாட்டில் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வழக்கங்கள் வித்தியாசமாகவே இருக்கும். ஆண்கள் நீளமாக முடி வைத்துக்கொள்வதை இப்போது நாகரிகம் (Fashion) என்கிறார்கள். சில காலத்துக்கு முன்பு முடியை ஒட்ட வெட்டிக் கொள்வது நாகரிகமாக இருந்தது.

2. முட்டையை நீளவாக்கில் அழுத்தினால் உடைவதில்லையே, ஏன்?

அ.ஷேக் முஹமது சபிக், 8ம் வகுப்பு, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி.


நீளவாக்கில் முட்டை உடையாமல் இருப்பதன் மர்மம் அதனுடைய வடிவத்தில் உள்ளது. முட்டையை நீளவாக்கில் பார்த்தால் இரண்டு முனையும் முப்பரிமாண வில்வளைவு போன்ற அமைப்பில் இருப்பதை உணரலாம். பாலம், கதவு போன்ற பல பகுதிகளில் கவண் வடிவ வளைவான கூரை இருப்பதைப் பார்க்கலாம். பல்வேறு வடிவங்களில் இந்த வில்வளைவான அமைப்பே கூடுதல் உறுதித்தன்மையைக் கொண்டது.

வில்வளைவு அமைப்பில் அதன் முனையில் விழும் அழுத்தம் சீராக அதன் பக்கவாட்டில் பரவிவிடும். எனவே, நிலைகுலைந்து உடைவதில்லை. அடைகாக்கும் கோழி முட்டையின் மீது உட்காரும்போதும் முட்டை உடையாமல் இருப்பதும் இதன் காரணமாகத்தான். ஆயினும், சமமற்ற அழுத்தம் ஏற்படும்போதும், ஏதாவது ஒரு பகுதியை மட்டும் சற்றே அழுத்தத்துடன் தட்டும்போதும் முட்டை உடைபடுகிறது.

3. பட்டை, இலை, பூ, காய் எல்லாம் கசப்புத்தன்மையுடன் இருக்கும்போது, பழம் மட்டும் இனிப்புத் தன்மையுடன் இருப்பது எப்படி?

து.நர்மதன், 6ம் வகுப்பு, இந்து மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.


நாம் உண்பதற்காக மரங்கள் பழங்களை உருவாக்குவதில்லை. காய் முதிர்ந்து, விதை முளைக்கத் தயாராகும் நிலையில் தரையில் விழும்போது, தேவையான சத்துகளை மண்ணுக்கு அளித்து, விதை முளைத்து வளரவே பழங்களில் விதையைச் சுற்றி சதை உள்ளது.

காய் நிலையில் உள்ளபோது, அந்தச் சதைப் பகுதியில் உள்ள பல்கூட்டுச் சர்க்கரை வேதிப் பொருட்கள், பழம் பழுக்கும்போது உருவாகும் ஒருவித என்ஸைம்- வேதி நொதியின் வினையில் உடைந்து ஃப்ரக்டோஸ் எனப்படும் எளிய சர்க்கரைப் பொருளை உருவாக்கும். இதுவே நமக்கு இனிப்புச் சுவையைத் தருகிறது. ஆகவே, பட்டை, இலை, பூ, காய் எல்லாம் கசப்புத்தன்மையுடன் இருந்தாலும், ஃப்ரக்டோஸ் உதவியால், பழம் மட்டும் இனிப்புத் தன்மையுடன் இருக்கிறது.

4. நாம் சுவாசிக்கும் காற்று உள்ளே செல்லும்போது ஆக்சிஜனாகவும் வெளியேறும்போது கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறுவது எப்படி?

பரத்வாஜ், டாக்டர். அழகப்பா அகாதமி பள்ளி, காரைக்குடி.


செல் சுவாசித்தல் எனும் செயலின் வழியே மூச்சுக் காற்றில் வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு நமது உடலில் உருவாகிறது. நாம் உண்ணும் உணவு அனைத்தும் கார்பன் செறிவான கரிமப் பொருட்கள் நிறைந்தவை. இதில் குளூகோஸ் எனப்படும் C6H12O6 மூலக்கூறு முக்கியம். இந்த மூலக்கூறுடன் ஆக்சிஜன் (O2) வினை புரியும்போது கடைசியில் கார்பன் டை ஆக்ஸைடு (CO2), நீர் (H2O) வெளிப்படுகிறது. வேதியியல்படி பார்த்தால், 'C6H12O6 + 6O2 = 6H2O + 6CO2 + ஆற்றல்'.

இந்த வேதிவினையில் வெளிப்படும் ஆற்றல்தான், செல் இயக்கத்துக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. இதுவே உயிரின் துடிப்பு. இந்த கார்பன் டை ஆக்ஸைடுதான் மூச்சுக் காற்றில் வெளிப்படுகிறது.

மூச்சை உள்ளே இழுக்கும்போது, 78% நைட்ரஜன் 21% ஆக்சிஜன் 0.965% ஆர்கன் 0.04% கார்பன் டை ஆக்ஸைடு

மூச்சை வெளி விடும்போது, 78% நைட்ரஜன் 17% ஆக்சிஜன் 0.965% ஆர்கன் 4% கார்பன் டை ஆக்ஸைடு

உள்ளே இழுக்கும் ஆக்சிஜன், ரத்தத்தின் வழியாக திசுக்களைச் சென்றடையும். அங்கே செல் சுவாசித்தல் நிகழ்வில், குளூகோஸை உடைத்து ஆற்றல் உருவாக உதவும். அதில் வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, ரத்தத்தின் வழி வெளியேறி நுரையீரலால் அப்புறப்படுத்தப்பட்டு, வெளிமூச்சில் வெளியேறும். இப்படித்தான் நாம் சுவாசிக்கும் காற்று உள்ளே செல்லும்போது ஆக்சிஜனாகவும் வெளியேறும்போது கார்பன் டை ஆக்ஸைடாகவும் மாறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us