
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1.கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதற்காக தண்ணீரைச் சுட வைத்தால் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்துவிடாதா? பாக்டீரியாக்கள் எங்கெல்லாம் இருக்கின்றன?
அ.உமர் பாரூக், 9ஆம் வகுப்பு, தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.
ஆம்! நீரில் உள்ள எல்லா நுண்ணுயிரிகளும் அழிந்துவிடும். ஆனால், நமக்கு வேண்டிய நல்ல பாக்டீரியாக்களை நீரிலிருந்து பெறுவது இல்லை. தயிர் போன்ற உணவிலிருந்தே பெறுகிறோம். எனவே கொதிக்கவைத்து ஆற வைத்த நீரைப் பருகுவதே நல்லது.
'பாக்டீரியான்' என்கிற கிரேக்க சொல்லுக்கு 'சிறு குச்சி' என்பது பொருள். பாக்டீரியங்கள் அளவில் மிக நுண்ணியவை. அவற்றை நுண்நோக்கியின் (microscope) மூலமே காண முடியும். பல நோய்கள் உருவாகக் காரணமாக இருந்தாலும், பால் புளிப்பதற்கும், வியர்வை நாற்றம் அடிப்பதற்கும், பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி பெரும்பாலான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் தயாரிக்கவும் காரணம் இந்த பாக்டீரியங்கள்தான். அது போல, இறந்து போன தாவரங்கள், மிருகங்கள், பல வித கரிம கழிவுப் பொருட்களை அழுகச் செய்வதில் இயற்கைக்கும் பாக்டீரியங்களின் தேவை அதிகமிருக்கிறது.
* நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எடை மட்டுமே ஏறத்தாழ 1.8 கிலோ!
* சுத்தமான வாயாக இருப்பினும், ஒவ்வொரு பல்லிலும் ஆயிரம் முதல் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும்.
2. பூமி, சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பதை விஞ்ஞானிகள் எவ்வாறு கண்டறிந்தார்கள்? அதேசமயம், நிலா ஏன் வட்டப் பாதையில் சுற்றுகிறது?
ர.நெல்சியா, 11ஆம் வகுப்பு, ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி, கமுதி.
பேச்சு வழக்கில் கூறினாலும் நிலாவும் நீள் வட்டப்பாதையில்தான் சுற்றுகிறது. கோள்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பதை முதன்முதலில் கெப்ளர் கண்டுபிடித்தார். சுமார் 687 நாட்களில் ஒரு சுற்றுச் சுற்றி வானில் அதே இடத்துக்கு செவ்வாய் வந்துவிடுகிறது என அறிந்திருந்தனர்.
சூரியன், பூமி, செவ்வாய் மூன்றும் நேர் கோட்டில் குறிப்பிட்ட நாளில் சந்திக்கின்றன என்றால் மறுபடி 687 நாட்கள் கடந்த பின்னரே வானில் அதே இடத்துக்கு செவ்வாய் வந்துசேரும். ஆனால் 365 1/4 நாட்களுக்கு ஒருமுறை வானில் வலம் வரும் பூமி அதே இடத்துக்கு வந்து சேராது. எனவே அன்று சூரியன்-, பூமி,- செவ்வாய் இடையே என்ன கோணம் எனக் கண்டுபிடிக்கலாம்.
மேலும் 687 நாட்கள் கடந்து செவ்வாய் மீண்டும் அதே இடத்துக்கு வந்து சேரும்போதும் சூரியன், பூமி, செவ்வாய் கோணத்தை அளவிடலாம். இவ்வாறு ஒரு சில தடவை செய்தால் வானில் பூமியின் நிலை என்ன என்று தெரிந்து விடும். வானில் பூமியின் நிலை புள்ளிகளை இணைத்தால் நீள்வட்டப் பாதை வருகிறது என கெப்ளர் கண்டுபிடித்தார். இதுவே அவரது முதல் விதி எனவும் அறியப்படுகிறது.
3.அணைகளுக்கு வரும் நீரையும் வெளியேறும் நீரையும் கன அடியில் எவ்வாறு அளக்கிறார்கள்?
ஏ. மாணிக்கம், 8ஆம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.
வட்டமான குழாய் வழியே நீர் செல்கிறது எனவும் குழாய் வாயின் பரப்பளவு 5 சதுர செ.மீ. எனவும் கொள்வோம். குழாயின் வழியே பாயும் நீரின் வேகம் நொடிக்கு ஒரு செ.மீ. எனக் கொண்டால், ஒரு நொடியில் 5 செ.மீ. பரப்பளவு உடைய 1 செ.மீ. உயரம் உடைய உருளை வடிவ நீர் வெளியேறியுள்ளது எனப் பொருள் அல்லவா? உருளையின் கொள்ளளவு என்ன? அடிப்பாகத்தின் பரப்பளவு X உயரம். எனவே, இந்தக் குழாயில் கடந்து சென்ற நீரின் அளவு 5 X 1= 5 கன செ.மீ.
இதே போல், அணையின் உள்ளே வரும் ஆற்று முகத்துவாரத்தை அளவிடலாம். நீரின் வேகத்தை அளந்து ஒரு நொடியில் எவ்வளவு நீர் செல்கிறது என மதிப்பீடு செய்யலாம். அதன் அடிப்படையில் அணையில் நீரின் வரத்து குறித்து மதிப்பீடு செய்ய முடியும். அணையின் வாய்ப் பகுதியின் அளவை அளந்து, வெளிப்படும் நீரின் வேகத்தை அளந்து, எவ்வளவு நீர் வெளியேறுகிறது என்பதையும் கணக்கிடலாம்.
4.மனிதனின் ரத்த அழுத்தம் குறைவதற்கும் அதிகரிப்பதற்கும் என்ன காரணம்? அதன் விளைவுகள் என்னென்ன?
கா.தர்ஷினி, 8ஆம் வகுப்பு, சி.எம்.சி.பள்ளி, கோவை.
ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு வேகத்திலும், வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால் இயல்பானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம், 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம்.
நோயற்ற நிலையில்கூட ரத்த அழுத்தம் கூடிக் குறையும். படுத்திருக்கும்போது உள்ள ரத்த அழுத்தம், நின்றுகொண்டிருக்கும்போது இருக்காது. உறக்கம் இல்லாத நிலையில் 125/70 என இருக்கும் அதே நபருக்கு மாலை மூன்று மணியளவில் 140/80 என அழுத்தம் அமையலாம். மன அழுத்தம், உணவில் உப்பின் அளவு என பல்வேறு கூறுகள் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தாறுமாறாக கூடிக்குறைந்தாலோ அல்லது மிகுவாகக் கூடிக் குறைந்தாலோ பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு முறையான சிகிச்சையைப் பெறத் தவறினால் இதயம் பாதிக்கும்; துடிப்பதற்கு சிரமப்படும்; மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப்படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால் பார்வை பறிபோகும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

