தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!

வெங்கியைக் கேளுங்க!


PUBLISHED ON : ஜன 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. வீட்டு நாயின் வாலை வெட்டிய பிறகும் எல்லா வேலைகளையும் செய்கிறதே எப்படி? விலங்குகளுக்கு வால்களால் என்ன பயன்?

ஐ.ராக்லண்ட் ஜெரமையா, 10ஆம் வகுப்பு, எஸ்.டி.ஏ. மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்
.

விலங்குகளுக்கு வால் ஒன்று, வேலை பல! நிலத்தில் வாழும் நான்கு கால் பாலூட்டி விலங்குகளைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட பயன்படும் உடல் பகுதிதான் வால். எனவே, வீட்டில் வளரும் விலங்குகளுக்கு வாலை வெட்டிவிட்டாலும் அவை பெருமளவு பாதிப்பு அடைவதில்லை.

கங்காரு, பூனை போன்ற விலங்குகளுக்கு கயிற்றில் நடப்பவரின் கையில் இருக்கும் கம்பு போல வால் பயன்படுகிறது. கூத்தாடி கம்பை வலமும் இடமும் நீட்டிச் சாய்த்து கயிற்றின்மேல் தன்னைச் சமநிலை செய்து நிலைநிறுத்துவது போல, தாவும்போது, தமது உடலை நிலைநிறுத்த வாலைப் பயன்படுத்திக் கொள்கின்றன இந்த விலங்குகள். மரத்துக்கு மரம் தாவும் சில வகைக் குரங்குகளில் கிளைகளைப் பற்றிக்கொள்ள உதவும் ஒரு பற்றும் உறுப்பு. இவ்வாறே உயிரி பரிணாமத்தில் பல விலங்குகளுக்கு, பல்வேறு விதமாக வாலின் பயன் அமைந்துள்ளது. எல்லா விலங்குகளும் வாலை எதற்காகப் பயன்படுத்துகின்றன என்பதை நாம் அறிந்துவிட்டோம் என்று கூற முடியாது. இதைப்பற்றி இன்னமும் ஆய்வு தேவை.

2. மின்விசிறிகள் கடிகார திசையில் சுற்றுவது போல் இருக்கின்றன. எதிர்த் திசையில் சுற்றினாலும் காற்று வருவதுபோல் அமைத்தால் என்ன?

எ.ஸ்ரீநிதி, 8ஆம் வகுப்பு, சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சின்னாளப்பட்டி.

எதிர் திசையில் சுற்றினாலும் காற்று வீசும்படி செய்ய முடியும். அதற்கு முதலில் எதிர்த் திசையில் சுழலும்படி விசைப்பொறிகளைத் (Motor) தயாரிக்க வேண்டும். விசைப்பொறிகள் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வெளிவருவதால், எல்லாவற்றையும் ஒரே மாதிரி வடிவமைக்கின்றனர்.

மேலும், கடிகாரம் சுழலும் திசை நமது பார்வைக்கு இதமாகவும், எதிர்த் திசையில் செல்வது விசித்திரமாகவும் இருக்கிறது. இந்த அமைப்புக்கு இதுவும் ஓர் உளவியல் காரணமாக இருக்கலாம்.

3. ஒரே பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் குணம் மாறுபடுவது ஏன்?

எஸ்.டி.தேவதர்ஷினி, 10ஆம் வகுப்பு, சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.


இரண்டு வகை குணங்கள்

1. உடலியல்சார் குணம்: சுருட்டைத் தலைமுடி, கன்னத்தில் குழி போன்றவை

2. செயற்பாட்டு குணம்: இளகிய மனம், சட்டென வரும் கோபம் போன்றவை

உடலியல் குணம் ஒவ்வொரு செல்களிலும் உள்ள டி.என்.ஏ. எனப்படும் மரபணு வழி தீர்மானம் ஆகிறது. செயற்பாட்டு குணம் மரபணுவால் மட்டும் வருவது அல்ல; நமது வளர்ப்பு, நமது முனைப்பு ஆகியவற்றின் தாக்கத்தாலும் ஏற்படுகிறது.

தாய்க்குக் கன்னத்தில் குழி இருக்கிறது எனக் கொள்வோம். அவர் பெறும் குழந்தைக்கும் சில சமயம் குழி இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஜோடி டி.என்.ஏ. இருக்கிறது. அதில் ஒன்று தாயிடமிருந்தும் மற்றது தந்தையிடம் இருந்தும் வருகிறது. தாய்க்கு கன்னத்தில் குழி இருந்தால் அவளிடம் உள்ள இரண்டு டி.என்.ஏ. ஜோடியில் ஏதாவது ஒன்றில் அதற்கான கூறு இருக்கும். ஆனால் அந்த டி.என்.ஏ. குழந்தைக்கு வராமல் மற்றது வந்துவிட்டால், குழந்தைக்கு கன்னத்தில் குழி ஏற்படாது. தாய், தந்தை இருவரின் கலப்பே குழந்தையின் டி.என்.ஏ. எனவே, தாய் அல்லது தந்தையின் சில உடலியல் அமைப்புகள் குழந்தைக்கு வரலாம்.

4. மின்வேலை செய்பவர்கள் ரப்பர் கையுறை, காலணிகளை அணிவது ஏன்?

ஆ. நித்திஷ், 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.


உடல் வழி மின்சாரம் பாயும்போது, அதனால் உடலில் ஏற்படும் மின்தடைதான் நமக்கு தீங்கானதாக மாறுகிறது. மின்தடை ஏற்படும்போது வெப்பம் உருவாகும். மின்சுற்று ஏற்பட்டால் மட்டுமே மின்சாரம் பாய முடியும். மின் கம்பியை தவறுதலாக நாம் தொடும்போது, நமது உடல் வழி மின்சாரம் பாய்ந்து, பூமியில் Earth ஆகிறது. பூமிக்கும் நமக்கும் இடையே மின்சாரம் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்திவிட்டால் மின்சாரம் பாயாது.

ரப்பர் போன்ற பொருட்கள் வெகு குறைவாகவே மின்சாரத்தைக் கடத்தும். எனவே, இவற்றை மின்கடத்தாப் பொருட்கள் என்கிறோம். எனவே, மின் வேலை செய்யும்போது, மின்சாரம் பாய்ந்து எர்த் ஆகி ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவே ரப்பர் கையுறை, காலணிகளை அணிகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us