
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
மூளைக்கும் கனவுக்கும் என்ன தொடர்பு? தேஜா வு, ஜமெய் வு என்பதும் கனவு போன்றதா?
என்.லேனா, 8ஆம் வகுப்பு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.
தூக்க நிலைகள் இரண்டு.
1. விரைவிழி இயக்கமற்ற உறக்கம் (NREM - Non Rapid Eye Movement)
2. விரைவிழி இயக்க உறக்கம் (REM-Rapid Eye Movement)
இவற்றில், விரைவிழி இயக்க நிலையில்தான் கனவு ஏற்படுகிறது. நவீன கருவிகளைக் கொண்டு தூக்கம், கனவுகள் குறித்து நடந்த ஆய்வில், பின்புற மேலடுக்கு மூளைப் பகுதியில்தான் கனவு ஏற்படுகிறது எனக் கண்டறிந்துள்ளனர். விழிப்பு நிலையில் இன்னொருவர் முகத்தை இனம்காணச் செயற்படும் மூளையின் அதே பகுதிதான், கனவில் வரும் முகங்களையும் இனம்காண உதவுகிறது என இந்த ஆய்வு சுட்டுகிறது. விழிப்பு நிலையில் மூளையின் பல பகுதிகள் இயங்கி, காட்சி என்ற உணர்வு எப்படி ஏற்படுகிறதோ அப்படித்தான் கனவிலும் ஏற்படுகிறது. அதாவது மூளைதான் கனவுக் காட்சிகளைக் காண்கிறது என அந்த ஆய்வு நிறுவுகிறது.
தேஜா வு (Deja vu)என்பது, ஒரு நிகழ்வு நடந்துகொண்டு இருக்கும்போது, இது ஏற்கெனவே நடந்ததுதான் என்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவது. ஜமெய் வு
(Jamais vu) என்பது, நன்கு பார்த்துப் பழகியவற்றை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கும்போது, அதைப் பற்றிய விவரம் தெரியாமலோ அல்லது மறந்து விட்டதுபோலவோ உணர்வது. இதற்கும் கனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும், கனவு ஏன் ஏற்படுகிறது, அதனால் நமக்கு என்ன நடக்கிறது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
பூமி சுற்றுவது நின்றுவிட்டால் உலகில் என்ன நடக்கும்?
பா.ரக்ஷனி, 10ஆம் வகுப்பு, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கடலூர்.
முதலாவதாக, பூமியின் ஒரு பகுதி எப்போதும் பகலாகவும், மறு பகுதி எப்போதும் இரவாகவும் மாறும். அப்படி மாறினால் பல்வேறு தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் வாழ முடியாமல் போகும். பகலாக மட்டுமே இருக்கும் பகுதியில், இரவில் இயங்கும் விலங்குகள், பூச்சிகள் வாழச் சாத்தியமே இல்லை. அதுபோல, இரவாக மட்டுமே இருக்கும் பகுதியில், பகலில் இயங்கும் உயிரினங்கள் வாழச் சாத்தியமே இல்லை.
இரவில் வேட்டையாடும் விலங்குகள், பகலில் இயங்கும் உயிரினங்களைத்தான் உணவாகக் கொள்கின்றன. எனவே, பூமி சுற்றாமல் நின்றுவிட்டால், இப்போது இருப்பது போன்ற உயிர்ச் சூழல் சாத்தியமே இல்லை. பூமியில் ஏற்படும் கடல் நீர் ஏற்ற இறக்கம், தட்பவெப்பம் போன்ற பல நிகழ்வுகள் பாதிக்கப்படும். அதேசமயம், பூமியின் ஈர்ப்பு விசையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பூமியின் ஈர்ப்பு விசை, அதன் நிறையைப் பொறுத்து மட்டுமே அமைகிறது.
ஆலமரத்தில் விழுதுகள் தோன்றக் காரணம் என்ன? விழுதுகளும் வளருமா?
ஏ.ஜெயஸ்ரீ, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, அனந்தபுரம்.
ஆலமரம் தவிர, அலையாத்திக் காடுகளில் காணப்படும் தில்லை என்ற சுரபுன்னைத் தாவரங்களிலும் விழுதுகள் காணப்படும்.
மர வகைகளில் தனித்தன்மையான அமைப்புகளைக் கொண்டது ஆலமரம். பரந்து விரிந்த கிளைகளுடன், பல ஆண்டுகள் வாழக்கூடிய மரத்தைத் தாங்கிப்பிடிக்க விழுதுகள் உதவுகின்றன. இவை, அவற்றின் தூண்வேர்கள் எனப்படும். காலப்போக்கில், நிலத்தைத் தொடும் ஒவ்வொரு விழுதும் அடிமரமாக உருவாகி, மரம் பரந்து விரியும். பரந்த கிளைகளின் வளர்ச்சிக்குத் தேவையானதைத் தரவும் விழுதுகள் தேவை. இது பரிணாமம் அளித்த தகவமைப்புதான்.
நீர் ஐஸ் கட்டியாக மாறும் ரசாயன மாற்றம் எதனால் எப்படி ஏற்படுகிறது?
டி.சாய்ரோகித், 7ஆம் வகுப்பு, சிந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, கோவை.
பேப்பர் எரிந்து சாம்பலாக மாறுவதும், அரிசி வெந்து சோறாக மாறுவதும் ரசாயன மாற்றத்தினால் நிகழ்வது. ஆனால், நீர் குளிர்ந்து பனிக்கட்டியாக மாறுவதும், வெப்பமடைந்து நீராவியாக மாறுவதும் ரசாயன மாற்றத்தினால் அல்ல. இயற்பியல் மாற்றத்தினால் நிகழ்கிறது. தண்ணீர், நீராவி, பனிக்கட்டி மூன்றிலும் உள்ள வேதிப்பொருள் நீர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
திட, திரவ, வாயு ஆகியவை, பொருட்களின் மூன்று இயற்பியல் நிலைகள். திரவமாக உள்ள நீரின் நிலையாற்றல் குறைந்து போனால், நீர் மூலக்கூறுகளின் இயக்கம் குறையும். வெப்பநிலை 0°C வரும்போது, இயக்கம் வெகுவாகக் குறைந்து மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு திடமாக மாறும். இதுவே பனிக்கட்டி.
திரவ நீரில் வெப்பம் கூடும்போது, மூலக்கூறுகளின் இயக்கம் தீவிரமடையும். இதன் தொடர்ச்சியாக மூலக்கூறுகளின் இடையே இடைவெளி கூடும். இதில்தான் நீர் நீராவியாக மாறுகிறது.