தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க


PUBLISHED ON : ஆக 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

போன்சாய் மரங்களில் இருந்து ஆக்சிஜன் கிடைக்குமா?

வீ.என். ரஞ்சனி, 11ஆம் வகுப்பு, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, சென்னை.


போன்சாய் எனப்படும் குட்டைச் செடிகள் வளர்ப்பதும் ஒரு தோட்டக்கலையே! ஜப்பானிய மொழியில் 'போன்' என்றால் 'ஆழமற்ற தட்டுகள்' என்றும், 'சாய்' என்றால் 'செடிகள்' என்றும் பொருள். பல ஆண்டுகளாகப் பாழடைந்த கட்டடங்களிலும் பாறை வெடிப்புகளிலும் வளரும் செடிகள் வளர்ச்சியின்றி முதிர்ந்து காணப்படும். அதுபோன்ற செடிகளை வேருடன் எடுத்து போன்சாய் செடிகளாக மாற்றிவிடலாம். இந்த மரங்கள் வளர்ப்பில், பராமரிப்பு மிக முக்கியம். முறையாகப் பராமரிக்காத மரங்கள் சாதாரண மரங்களைப் போல உயரமாக வளர்ந்துவிடும் அல்லது காய்ந்துவிடும்.

பெரும்பாலும், தாவரத்தின் அளவு, எடையைப் பொறுத்து அதிலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் அளவு அமையும். தாவரங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதில்லை. கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு, ஒளிச்சேர்க்கையின்போது, கார்பனை உட்கிரகித்து, ஆக்சிஜனை வெளியே உமிழும். எனவே, போன்சாய் மரம் எவ்வளவு வளர்ந்திருக்கிறதோ அந்த அளவே ஆக்சிஜனை வெளியிடும்.



சென்னையில் கடல் இருந்தும் கோடையில் மழை பெய்யாதது ஏன்?

வி.பி. தேஜஸ்வினி, 8ஆம் வகுப்பு, விவேகானந்தா வித்யாலயா, சென்னை.


ஓரிடத்தில் பொழியும் மழை, அதே இடத்தின் அருகில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகி உருவாகும் மேகத்தில் இருந்து வருபவை அல்ல. எடுத்துக்காட்டாக, தென்மேற்குப் பருவக்காற்றில் உள்ள ஈரப்பதம், அன்டார்டிகா முதல் இந்தியா வரையுள்ள இந்தியப் பெருங்கடலில் உருவான ஈரப்பதம்.

உயர் வளிமண்டலத்தில் காற்றின் சலனம் காரணமாக, மேகமும் ஈரப்பதமும் கடல் இருக்கும் அதே இடத்தின் மீது அரிதாகவே குவியும். எனவே, சென்னையில் சில சமயங்களில் கோடை மழை பொழிந்தாலும், எப்போதும் மழைப் பொழிவு இருப்பதில்லை.

பல வண்ணங்களில் உணவை உட்கொண்டாலும், கழிவுகள் ஒரே நிறத்தில் வெளி வருவது ஏன்?

ப.கவின்குமார், 9ஆம் வகுப்பு, ராமகிருஷ்ணா மிஷன், மயிலாப்பூர், சென்னை.


செரிமானம் என்பது வேதியியல் வினைதான். காய்கனிகளில் உள்ள நிறங்கள், நிறமி வேதிப்பொருட்களால் உருவானவை. உணவைச் செரிக்கும் பணி நடக்கும்போது, புரதங்கள் செரித்து அதன் அடிப்படைக் கூறுகளாக மாறுவது போல, நிறமி மூலக்கூறுகளிலும் வேதிவினை ஏற்படும். அப்போது உமிழப்படும் மஞ்சள் கலந்த பச்சை நிற பித்த நீர், வேதிவினை காரணமாக பச்சை நிறத்தை அகற்றும். இதன் காரணமாகவே மனிதக் கழிவின் நிறம் மஞ்சளான பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது.

சில சூழலில் சரியாகச் செரிமானம் ஆகாதபோது, அல்லது சில நிறமிகள் மனித உடலின் செரிமானத்தால் வேதிவினைக்கு உட்படாதபோது, கழிவின் நிறம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, கீரை அல்லது பீட்ரூட் அதிகமாக உட்கொண்டால் அடுத்த நாள் மனிதக் கழிவு நிறம் பச்சை அல்லது சிவப்பு நிறமாக இருக்கும். சில உடல்நலக் கோளாறுகள் காரணமாகக்கூட, கழிவின் நிறம் மாறி அமையும். ரத்தக்கசிவு ஏற்பட்டால் கடும் சிவப்பு அல்லது கருமை நிறம் தென்படும். பித்த நீர் அடைப்பு ஏற்பட்டால், வெளிர் நிறத்தில் அமையும். கழிவின் நிறத்தில் அதிக மாறுதல் இருந்தால், மருத்துவரை அணுகுவது நலம்.

இரசாயன முறையில் பழங்களை எதற்காகப் பழுக்க வைக்கிறார்கள்?

ஆதித்யன், 10ஆம் வகுப்பு, காஞ்சி குளோபல் பள்ளி, காஞ்சிபுரம்.


இயற்கையாக மரத்தில் பழங்கள் பழுக்கக் காரணமாக இருப்பது எத்திலீன் (Ethylene) எனும் வேதிப்பொருளின் இரசாயன மாற்றமே! சந்தையில் அதிகத் தேவை இருக்கும் சமயத்தில், வேகவேகமாகப் பழுக்க வைத்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில், பலரும் வேதிப்பொருட்களைச் செயற்கையாகப் பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர்.

மாங்காய் தானாகக் கனிந்து மாம்பழமாக மாற சுமார் 10 நாட்கள் ஆகும். ஆனால் சுமார் 100ppm (Parts per million) எத்திலீன் வாயு இருக்கும் அறையில் வைத்தால், ஐந்தே நாட்களில் பழுத்துவிடும். சிலர் கார்பைடு கற்களை வைத்தும் பழுக்க வைக்கின்றனர். கால்சியம் கார்பைடு சேர்மமும் நீரும் வினைபுரிவதால், அசெட்டிலீன் (Acetylene) வாயு ஏற்படும். இதுவும் பழங்களைக் கனியச் செய்யும்.

எத்திலீன் இயற்கை ஹார்மோன். ஆனால், அசெட்டிலீன் பழங்களில் உள்ள இயற்கை ஹார்மோன் அல்ல. இந்த வாயு, கால்சியம் கார்பைடு முதலியவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, 2011ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இதுபோன்ற செயற்கைமுறை நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us