PUBLISHED ON : அக் 22, 2018

1. உறங்கும்போது மூக்கு வாசனைகளை உணருமா?
ச.பரத், 4ஆம் வகுப்பு, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி.
இந்தக் கேள்வி குறித்து இரண்டு ஆய்வுகள் நடந்துள்ளன. முதல் ஆய்வு 1997இல் நடத்தப்பட்டது. நெருப்புப் புகையின் நெடி, தூக்கத்தில் உள்ளவர்களை விழிக்கச் செய்யுமா என, ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். அதற்காகப் பத்துப் பேரை ஆய்வுக்கூடத்தில் தூங்கச் செய்து, அந்த அறையில் நெருப்புப் புகையை ஏற்படுத்தினர். பத்தில் இரண்டு பேர் மட்டுமே விழித்துக் கொண்டனர். அதாவது, இரவில் தூங்கும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதன் புகையை நுகர்ந்து மட்டும் ஒருவரால் விழிக்க முடியாது என்பதை இந்த ஆய்வு நிறுவியது.
இரண்டாவது ஆய்வு 2004இல் பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ரேச்சல் ஹெர்ஸ் (Rachel Herz) என்பவரால் நடத்தப்பட்டது. சுமார் 20 வயதுடைய ஆறு இளம் நபர்களைத் தேர்வுசெய்து, அவர்கள் தூங்கும்போது மூக்கால் மட்டும் சுவாசம் செய்யும் பயிற்சியைத் தந்தனர். பின்னர் நறுமணம் கொண்ட பெப்பர்மின்ட் (peppermint), துர்நாற்றம் கொண்ட பைரிடீன் (pyridine) ஆகிய இரண்டு மணங்களைத் தூங்கும் நபர்களின் மூக்கில், குழாய் வழியாகச் செலுத்தி ஆராய்ச்சி செய்தனர். தூக்கத்தின் நான்கு நிலைகளிலும் இந்த ஆய்வைச் செய்து பார்த்தனர்.
முதற்கட்ட தூக்க நிலையில் பெப்பர்மின்ட் நறுமணத்தை உணர்ந்து சிலர் விழித்தனர். அடுத்தடுத்த தூக்க நிலைகளில் எவரும் விழிக்கவில்லை. பைரிடீன் மணம் சில சமயம் விழிப்பை ஏற்படுத்தினாலும், ஆழ்ந்த தூக்க நிலையில் உள்ளவர்களை விழிக்கச் செய்யவில்லை. எந்தத் தூக்க நிலையாக இருந்தாலும், சத்தம் அவர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தியது.
2. விமானத்தில் பயன்படும் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இரயில்களில் விபத்துகளைத் தடுக்க வாய்ப்பு உண்டா?
வி. சந்தானகோபாலன், மதுரை.
வானத்தில் விமானத்தைத் தவிர உலோகப் பொருட்கள் பெரும்பாலும் கிடையாது. எனவே, ஆகாயத்தில் ரேடார் கொண்டு உலோகப்பொருளை அறிந்தால், அது ஏதாவது விமானம் அல்லது ஹெலிகாப்டர் போன்ற வானூர்திகளாகவே இருக்கும் என அறிந்துகொள்ளலாம்.
இதுவே, தரைவழிப் போக்குவரத்தான இரயில் பாதையில் தந்திக் கம்பம் உட்பட பல்வேறு பொருட்கள் உலோகமாக இருப்பதால், ரேடாரை தரையில் பயன்படுத்துவது எளிதல்ல. ஆயினும் தற்காலத்தில் இரயில்களில் ரேடார் போன்ற கருவிகளைப் பொருத்தி, விபத்தைத் தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. சில இரயில்களில் பொருத்தவும் செய்துள்ளனர். மூன்றாவது கண் எனப் பொருள்படும் 'ட்ரை நேத்ரா' (Tri-Netra) அகச்சிவப்புக் கதிர் உணர்வி கருவி, இரயில் பாதையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தடைகள் குறித்து தகவல் தரும். பல டன் எடையுடன் வேகமாக ஓடும் இரயிலை சட்டென நிறுத்துவது எளிதல்ல. அப்படியே நிறுத்தினாலும், உடனே நிற்காமல் சற்று தொலைவு சென்றே நிற்கும். எனவே, தொலைவில் உள்ளபோதே பாதையில் உள்ள தடைகள் குறித்து அறிந்தால் மட்டுமே, முன்னதாக ப்ரேக் பிடித்து இரயிலை நிறுத்தமுடியும்.
3. பெட்ரோல் வாகனங்களில் டீசல் ஊற்றினால் என்ன ஆகும்?
ஆர்.வி. சுதன், 4ஆம் வகுப்பு, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, திருப்பூர்.
டீசல் எரிவதற்குத் தேவையான வெப்பநிலையைவிட கூடுதல் வெப்பநிலை பெட்ரோலுக்குத் தேவை. எனவே, டீசல் இன்ஜின் வடிவமைப்பும் பெட்ரோல் இன்ஜின் வடிவமைப்பும் வெவ்வேறாக இருக்கும். தேவைக்குக் குறைவான வெப்ப அழுத்தநிலை மட்டுமே டீசல் இன்ஜினில் இருக்கும் என்பதால், அதில் பெட்ரோல் ஊற்றி இயக்கினால் இயங்காது.
ஆனால், டீசல் எரிவதற்குத் தேவையான வெப்ப அழுத்தநிலையைவிட கூடுதல் வெப்ப அழுத்தநிலை பெட்ரோல் இன்ஜினில் இருக்கும். அதனால் அதில் டீசலை ஊற்றி இயக்கினால் பெரும் ஆபத்து ஏற்படலாம்.
இதுபோன்று மாற்றி நிரப்பினால், அந்த எரிபொருளை முழுவதுமாக வெளியில் எடுத்துவிட வேண்டும். அதுவரை இன்ஜினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பது வாகனத்துக்கு நல்லது.
4. வானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால் மழை பொழியுமா, பொழியாதா?
மு. வினோத்குமார், 7ஆம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப் பள்ளி, மதுராந்தகம்.
இரவு வானத்தில் மேகம் இருந்தாலும் இருட்டில் தெரியாது. அப்படியிருக்க அடர்ந்த மேகம் பரவியிருந்தால் வானில் இருக்கும் விண்மீன்கள் நமக்குத் தெரியாது அல்லவா?
அதாவது, வானில் விண்மீன்கள் தென்படவில்லை என்றால், அடர்ந்த மேகமூட்டம் அவற்றை மறைத்துள்ளது எனப் புரிந்துகொள்ளலாம். அடர்ந்த மேகமூட்டம் மழைக்கு அறிகுறி. எல்லா விண்மீன்களும் நன்றாகத் தெரிந்தால் மேகம் இல்லை என அறியலாம். மேகம் இல்லையென்றால் மழையும் பொழியாது. இதை வைத்தே இரவில் விண்மீன்கள் தெரிந்தால் மழை பொழியாது என்றும், விண்மீன்கள் தெரியவில்லை என்றால் மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
