தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க

வெங்கியைக் கேளுங்க


PUBLISHED ON : மே 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

விண்வெளிக் குப்பைகளை அகற்ற வழி இல்லையா?

அ.கபிலன், மின்னியல், டிப்ளமோ முதலாண்டு, இராமநத்தம்.


1957ஆம் ஆண்டு அக்டோபர் 4, ஸ்புட்னிக் I என்னும் செயற்கைக்கோள் சோவியத் யூனியனால் விண்வெளியில் செலுத்தப்பட்டது. இதுவே விண்வெளி யுகத்தின் தொடக்கம். அன்றிலிருந்து இன்றுவரை சுமார் 6,000 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

செயற்கைக்கோளைத் தாங்கிச் செல்லும் கடைசிக்கட்ட ராக்கெட், வெப்பக்கேடயம், போல்ட், நட் முதலியவை குப்பைகளாக விண்வெளியில் மிதக்கின்றன. இவற்றைத்தான் விண்வெளிக் குப்பை என்று சொல்கிறார்கள். மேலும் விண்வெளிக்குச் சென்ற சுமார் 8,950 செயற்கைக்கோள்களில் சுமார் 5,000 இன்னமும் சுற்றுப்பாதையில் உள்ளன. இவற்றுள் வெறும் 1,950 செயற்கைக் கோள்கள்தான் செயற்பாட்டில் உள்ளன.

ஒரு மில்லிமீட்டருக்கும் கூடுதல் அளவில் சுமார் 16.6 கோடித் துண்டுகள் விண்வெளியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 10 செ.மீ.க்குக் கூடுதல் அளவுள்ள சுமார் 22,300 துண்டுகளை விண்வெளிக் கண்காணிப்பு வலைப்பின்னல் அமைப்பு தொடர்ந்து கவனித்து வருகிறது.

விண்வெளி என்றாலும் அங்கேயும் மிகமிக அடர்த்தி குறைவாகக் காற்று இருக்கும். இந்த உராய்வினால் விண்வெளிக் குப்பைகள் அனைத்தும் காலப்போக்கில் பூமியின் மேலடுக்கு வளிமண்டலத்தில் விழுந்து எரியும். ஆனால் இதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி மையம் மற்றும் மனிதர்களை ஏந்திய விண்வெளிப் பயணம் போன்றவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்தக் குப்பைகளை அகற்ற பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீன் வலைபோல ஒரு வலையை விரித்து இழுத்து குப்பைகளைப் பூமியின் வளிமண்டலம் மேலேயே எரித்து விடலாம் என முயற்சி செய்கின்றனர். ஆயினும் எந்தத் திட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

குளிருக்கு கம்பளி போல, வெயிலைத் தாங்க குளிரான ஆடைகள் கிடைப்பதில்லையே ஏன்?

இ.பொன்வதனா, 4ஆம் வகுப்பு, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆண்டிப்பட்டி, தேனி
.

வெகு விரைவில் அத்தகைய ஆடைகள் விற்பனைக்கு வந்தாலும் வியப்படைய வேண்டாம்! தெர்மோஎலெக்ட்ரிசிட்டி (வெப்ப மின்னோட்டம்) முறையில் வெப்ப மின் இரட்டை (Thermocouple) கருவி கொண்டு வெப்ப வேறுபாட்டை வைத்து மின்னூட்டத்தை ஏற்படுத்தலாம்.

நமது உடலின் வெப்பமும், சுற்றுப்புற வெப்பமும் வேறுவேறாக இருக்கும். இதை வைத்து மின்சாரம் தயாரிக்கலாம். அதே போல சிறிதளவு மின்சாரத்தை வைத்து வெப்ப வேறுபாட்டை ஏற்படுத்தலாம். இந்த முறையில் வெப்ப மின்னோட்ட உடை செய்தால், உட்பக்கம் குளிரை ஏற்படுத்தும் போர்வைகளை உருவாக்கலாம். அந்த ஆய்வில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், குளிரைத் தாங்கும் ஆடை என்பதில் உள்ள அறிவியலைப் பார்ப்போம். வெப்பக்கடத்தல் வினையைச் செய்யாத பொருளை உடலின் மீது சுற்றிக்கொண்டால் உடலின் வெப்பம் வெளியேறாமல் இருக்கும். இதன் காரணமாக உள்ளே வெப்பநிலை சற்றே கூடும். உடலின் சூட்டைக் கடத்தாமல் பாதுகாப்பதும், உடலைக் குளிர்விப்பதும் வெவ்வேறு செயல்கள்.

பால் பொருட்கள் வெள்ளை நிறமாக இருக்கக் காரணம் என்ன?

ஆ.பிரியங்கா காந்தி, 9ஆம் வகுப்பு, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.


இலையின் மீது பல்வேறு நிறங்களின் கலவையான சூரிய ஒளி விழுகிறது. ஆனாலும், பச்சை நிறத்தைத் தவிர மற்ற நிறங்களை இலையில் உள்ள நிறமிப் பொருட்கள் கவர்ந்து கொள்கின்றன. ஆகவே, இலைகள் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலிக்கின்றன.

கருமைப் பொருள் என்றால், எல்லா நிறத்தையும் மொத்தமாக உறிஞ்சுகிறது என்று பொருள். வெண்மை பிரகாசிக்கிறது என்றால், எந்த நிறத்தையும் உறிஞ்சவில்லை என்று பொருள். பாலில் எந்த நிறமியும் போதுமான அளவு இல்லை, எல்லா நிறங்களும் பிரதிபலிக்கப்படுகின்றன. எனவேதான், பால் வெண்ணிறமாக இருக்கிறது.

கற்கள் நிறைந்த மலைகள் எப்படி உருவாகின்றன?

செ.தமிழரசு, பாரத் வித்யாலயம், சிவகங்கை.


எங்காவது நம் தலை இடித்துக்கொண்டால், அந்த இடத்தில் புடைத்துக்கொள்கிறது அல்லவா? அதுபோல பூமியின் உள்ளே இருந்து புடைத்து வருவதுதான் மலைகள். கற்கள் நிரம்பிய பகுதி என்றால், கற்கள் நிரம்பி இருக்கும்.

இமயமலைபோல கடலின் அடியிலிருந்து உருவாகிறது என்றால், கடலடி மண், கற்கள், மீனின் புதைபடிவங்கள் எல்லாம் இருக்கும். நீரில் மிதக்கும் கப்பலைப் போல, பூமியின் மேலோடு அதற்குக் கீழே குழம்பு நிலையில் இருக்கும் அடுக்கின் மீது அங்கும் இங்கும் நகர்கிறது. மேலோடு, பல்வேறு சில்லுகளாக உடைந்துள்ளதால், சில சமயம் பக்கவாட்டில் உரசிக்கொண்டு எரிமலை, பூகம்பத்தை ஏற்படுத்தும். சில சமயம் ஒரு சில்லு மற்றதன் மீது ஏறி அழுத்தும்போது, மலைகள் உருவாகும். அவற்றில் உலகின் மிகப்பழையதாகவும் பெரியதாகவும் இருப்பது விந்திய மலைத்தொடர்; மிக இளமையானது இமயமலைத்தொடர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us