PUBLISHED ON : மே 02, 2016

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
இஸ்ரோவில் விஞ்ஞானி ஆக என்னென்ன தகுதிகள் வளர்த்துகொள்ள வேண்டும்?
எஸ்.பத்ரி நாராயணன், ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation / ISRO) என்பது விண்வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், செயற்கைக்கோள் பற்றிய தொழில்நுட்பக்கூடம் ஆகியவை அமைந்துள்ள இடம். இஸ்ரோவில் விஞ்ஞானிகள் மட்டுமல்ல பல என்ஜினீயர்களும் உள்ளனர். முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் படித்தவர். ராதாகிருஷ்ணன் மின்னியல் என்ஜினீயரிங் படித்தவர். நமது மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கோயம்புத்தூரில் அரசு பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். மற்றொரு முன்னாள் தலைவர் யூ.ஆர்.ராவ், இயற்பியலில் பி.எஸ்ஸி பட்டம் பெற்று பின்னர் எம்.எஸ்ஸி, பி.எச்டி. பட்டங்களைப் பெற்ற இயற்பியலாளர். இன்றைய தலைவர் கிரண் குமார் பெங்களூரூவில் இயற்பியல் இளங்கலை கல்வி கற்றவர். இதிருந்து என்ன தெரிகிறது? இஸ்ரோ என்பது பெரும் கடல். மின்னியல், மின்னணுவியல் தொடங்கி எல்லா என்ஜினீயரிங் கல்வித் தகுதி கொண்டவர்களும் இயற்பியல் வேதியியல் என பல அறிவியல் வல்லுனர்களும் கொண்ட பெரும் அமைப்பு. எந்தத் துறையில் படித்தாலும் இஸ்ரோவில் பணி செய்ய முடியும். மனப்பாட முறையை ஒதுக்கித் தள்ளி நன்றாக விளங்கிப் படிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
உலகில் தோன்றிய முதல் உயிரினம் பாக்டீரியா என்கிறார்கள். இது உண்மையா?
எஸ்.பிரதீப், வித்யாலயா குருகுல உயர்நிலைப்பள்ளி, கோவை.
ஆஸ்திரேலியாவிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும், 34 கோடி ஆண்டுகள் தொன்மையான ஸ்ட்ரோமோடலைட் (Stromatolites) எனும் சைனோபாக்டீரியா (Cyanobacteria) வகை நுண்ணுயிரிதான் இதுவரை ஆகத்தொன்மையான உயிரி தோல் எச்சம். இன்றளவும் அதன் சந்ததி உலகில் உலா வருகிறது. இவற்றின் செல் கருவைச் சுற்றி செல் சுவர் உள்ளன. எனவே மேலும் சிக்கல் நிறைந்த உயிரியான இதைவிட மேலும் தொன்மையான உயரி இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் அனுமானம் செய்கின்றனர். சுமார் 38 கோடி ஆண்டுகள் முன்பு உயிரித் தோற்றம் கொண்டு பரிணாமப் படிநிலை வளர்ச்சி தொடங்கியிருக்கும் என்பது கணிப்பு. எவ்வளவு தொன்மை காலத்தில் உயிர் தோன்றி இருக்கவேண்டும் என விஞ்ஞானிகள் அனுமானம் செய்தாலும் உயிர்கள் தோற்றம் குறித்து நமக்கு இன்னமும் பல புதிர்கள் உள்ளன. டிஎன்ஏக்களை (DNA) கொண்டுள்ள ஒரு செல் உயிரிகள் தோன்றுவதற்கு முன்பே ஆர்என்ஏக்கள் (RNA) தோன்றி உலகம் முழுவதும் நிரம்பி இருக்க வேண்டும் எனவும் இவையே உயிரி தோற்றத்தின் முதல் கன்னி எனவும் சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தவுடன் முதன்முதலில் எலிகள் போன்ற உயிரினங்கள் மீது பரிசோதனை செய்கிறார்களே, ஏன்?
த. யோகேஸ்வரன், 8, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.
புதிய மருந்து நோயைக் குணப்பத்திவிடலாம். ஆனால் நோயைவிட மேலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியும் விடலாம்தானே. எனவேதான் மனிதருக்குப் பயன்படுத்தும் முன்பு மருந்துகளை விலங்குகளில் பரிசோதித்துப் பார்க்கின்றனர். மேலும் விலங்குகளில், மருந்து எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறுத்து ஆராய்ந்து அறிய முடியும்.
இன்று பயோ மெடிகல் ஆய்வுகளில் பயன்படுத்தபடும் விலங்குகளில் சுமார் 95 % சோதனை எலிகள்தான். எலிகள் எளிதில் குட்டி போடும், இரண்டு மூன்று ஆண்டுகளே வாழும். எனவே சுமார் ஐந்து ஆறு ஆண்டுகளில் மூன்று நான்கு தலைமுறை சந்ததிகளில் ஏதேனும் தாக்கம் இருக்கிறதா எனப் பார்க்க முடியும். அதேபோல ஏறக்குறைய ஒரே ஜீன்ஸ் உடைய எலிகளைத் தயாரித்து அதில் சோதனை செய்து பார்க்க முடியும். நாய் மாதிரிக் கடித்துவிடும் என்ற அச்சமோ, பூனை மாதிரி அங்கும் இங்கும் ஓடிவிடும் என்ற பயமோ தேவையில்லை. பிடிப்பது கடினம் என்றாலும் சாதுவான பிராணி எலி.
மனிதருக்கு ஒப்பான மரபணு, உடலியல் பாங்கு முதலியவற்றைக் கொண்டுள்ளது எலி. எனவே எலி மீது சோதனை செய்யும் மருந்து அல்லது மருத்துவம் பெருமளவுக்கு மனிதருக்கும் பொருந்தும். ஆயினும் சில சிறப்பு வித்தியாசங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக சில ஆண்டுகள் முன்பு சாக்கரின் எனும் செயற்கை இனிப்பூட்டி, எலிகளில் கான்சர் வியாதியைத் தூண்டியது. ஆனால், அதன் பின் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது எலிக்கு ஏற்படும் சிறப்பு விளைவு என்றும் மனிதரில் இவை தென்படவில்லை எனவும் மேலாய்வுகள் தெரிவிகின்றன. எனவே எலிகளின் மீது சோதனை நடத்தப்பட்டாலும், தீவிர பரிசோதனைக்குப் பிறகே ஏற்க வேண்டும் என்பது அறிவியல் கருத்து.
செடிகள் ஏன் பச்சை நிறத்தில் உள்ளன?
பி.அபிஷேக், பொன்னேரி.
'பச்சைத் தண்ணி ஊற்றுவதால்தான்' என வேடிக்கை செய்தாலும் உள்ளபடியே ஆழமான கேள்வி இது. தாவரங்களின் இலைகளில் பச்சையம் (Chlorophyll) உள்ளது, இதுதான் ஒளிச்சேர்க்கை செய்யும் பகுதி. இந்த நிறமி சூரிய ஒளியின் ஏழு நிறங்களில் பச்சையைத் தவிர ஏனைய நிறங்களைக் கபளீகரம் செய்துவிடும். மீதம் இருக்கும் பச்சை நிறம் மட்டும் தாவரத்தின் இலையில் பட்டு வெளிப்படும். எனவேதான் இலைகள் பச்சையாகக் காட்சி தருகிறது. எல்லா நிறத்தையும் உறிஞ்சி விட்டால் செடி கறுப்பாகத் தெரியும்.
தொடக்கத்தில் தாவரங்கள் போன்ற ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரிகள் கடல்களின் உள்ளேதான் தோன்றின. கடல் நீரின் உள்ளே குறைந்த ஆற்றல் கொண்ட நீண்ட அலை நீளம் உடைய சிவப்பு மஞ்சள் நிற ஒளிதான் அதிக ஆழம் செல்லும். ஆழத்தில் செல்லும் ஒளியை பெறும் வகையில் அமைந்த உயிரிதான் நிலைக்கும் அல்லவா? எனவே அந்த முதல் நிலை ஒளிச்சேர்க்கை உயிரிகள், சிவப்பு மற்றும் மஞ்சளை கிரகிக்கும்படியாக இருந்தன. எல்லா நிறத்திலும் சூரியன் ஒளிர்ந்தாலும் குறைவான ஆற்றல் உடைய சிவப்பு நிற ஒளித்துகள்களை கூடுதலாக சூரியன் உமிழ்கிறது. அதிக ஆற்றல் உடைய நீல நிற ஒளித்துகள் குறைவான விகிதத்தில்தான் ஆழத்தில் செல்ல முடியும். ஆனால் இடைப்பட்ட பச்சை நிறம் எண்ணிக்கையில் கூடுதல் இல்லை; ஆற்றலிலும் இடைப்பட்ட நிலை. எனவே நீரின் உள்ளே புகும் திறனும் மட்டு; உள்ளே செல்லும் விகிதமும் குறைவு. எனவே குறைவாக ஆழத்துக்கு வரும் பச்சையைத் தேடிச் செல்வதை விடுத்தது, கூடுதல் ஆற்றல் கொண்ட, ஆனால் குறைவான எண்ணிக்கை கொண்ட நீல நிறத்தையும், குறைவான ஆற்றல் கொண்ட அதேசமயம் எண்ணிகையில் கூடுதல் விகிதம் கொண்ட சிவப்பு நிறத்தையும் உறிஞ்சும் உயிரியின் திறம்தான் உயர்வாக இருக்கும்.
இன்றைய தாவரங்கள் எல்லாம் இந்த முதல் நிலை ஒளிச்சேர்க்கை உயிரிகளின் வழிதோன்றல்கள்தாம். எனவேதான் இவையும் பச்சையை விடுத்தது பிற நிறங்களை உட்கிரகிக்கும் படியாக உள்ளன.
