தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

உணவுகளில் உடலுக்குத் தேவையான சத்துகள் இருக்கின்றன. அது கூடினாலோ, குறைந்தாலோ என்ன ஆகும்?

S. வெங்கடேஷ் பிரசாத், 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை.

எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சு; அளவுக்கு குறைந்தால் உடல் நலக்குறை. உயிர்வளி என நாம் போற்றும் ஆக்சிஜன் சுவாசிக்கும் காற்றில் 19.5 முதல் 23.5 சதவீதம்வரை இருந்தால் மட்டுமே நன்மை. அது, 17 சதவீதத்துக்கும் குறைவாகப் போனால், மூளை பாதிப்பு அடையும். அதே நேரத்தில், 30- - 40 சதவீதம் எனக் கூடினால் அந்தக் காற்றே நமக்கு நஞ்சாகிவிடும்; தசைகள் பாதிப்பு அடைவதோடு சில சமயம் மரணம்கூட நிகழலாம். அதேபோல 'வைட்டமின் டி' குறைந்துபோனால் மன அழுத்தம் ஏற்படும் நிலை உருவாகும். இவற்றிற்கெல்லாம், சரிவிகித உணவுதான் சிறந்தது.

எந்த வாயு சிரிப்பூட்டுகிறது? அது எப்படி சிரிப்பை வரவழைக்கிறது?

வ.வைஷாலி, 10ஆம் வகுப்பு, அமிர்த வித்யாலயம், கோவை.


நைட்ரஸ் ஆக்சைடு (Nitrous Oxide) எனப்படும் N2O வாயுவை 'சிரிப்பை வரவைக்கும் வாயு' என்கிறார்கள். இந்த வாயு தயாரிக்கப்பட்டபோது சோதனைச்சாலையில் தற்செயலாக முகர்ந்தவர்கள் வாய் விட்டுச் சிரித்ததைக் கண்டார்கள். இதன் இந்தத் தன்மையால், 1800களில் கேளிக்கை விளையாட்டுக்கு இது பயன்பட்டது. எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த வாயுவை முகர்ந்ததும் புத்துணர்வை ஏற்படுத்தும் 'டோபமைன்' (Dopamine), 'நியூரோ-ரிசெப்டர்கள்' (Neuroreceptors) எலியின் மூளையில் அபரிமிதமாக உருவாகி மகிழ்ச்சி மனநிலை தூண்டப்படுவதை ஆய்வுகள் உறுதி செய்தாலும், இந்த வாயு சிரிப்பை எப்படி ஏற்படுத்துகிறது என்பதற்கான முழுமையான அறிவியல் விளக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எரியும் மெழுகுவர்த்தியைத் தலைகீழாகப் பிடித்தாலும் மேல்நோக்கியே எரிகிறதே, அது ஏன்?

AM.யாசிகா தேவி, மாடல் பள்ளி, திருப்பத்தூர், சிவகங்கை.


வெப்ப நிலையில் மெழுகு உருகி ஆவியாகி வெளிப்படுவதே மெழுகுவர்த்தியின் தீச்சுவாலை அவ்வாறு ஆவியாக வெளிப்படும் வாயுவில் ஏற்படும் ஆக்சிஜனேற்றம்தான் எரிதல் எனும் வேதிவினை. எனவே தீச்சுவாலை என்பது வேதிவினை நடக்கும் ஆவியாகிய மெழுகுதான். வெப்பமுள்ள பொருள்களின் அடர்த்தி குறைவு. காற்றைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் மேலே செல்லும். அவ்வாறுதான் தீச்சுவாலை, பூமியில் எப்போதும் மேல் நோக்கியே அமைகிறது. அதே சமயம் விண்வெளியில் காற்று இல்லாத சூழலில் இதே சோதனையைச் செய்தால் தீச்சுவாலை மேலே செல்லாது; மெழுகுத்திரியைச் சுற்றி, பந்துபோல அமையும்.



பசிக்கும்போது வயிற்றுக்குள் ஒரு வித சத்தம் ஏற்படுகிறதே, எதனால்? அதற்கு என்ன பெயர்?

K.அர்ஜுன், 10 ஆம் வகுப்பு, குன்னூர்
.

பசிக்கும்போது என நாம் குறிப்பிட்டாலும் எப்போது வேண்டுமென்றாலும் வயிறு சத்தம் செய்யலாம். வயிறு மட்டுமல்ல சிறுகுடலும் சத்தம் செய்யும். பசி ஏற்படும்போது வயிறு காலியாக இருக்கும். வயிறு காலியாக உள்ளபோது உருவாகும் சத்தம் தடையில்லாமல் வெளிவரும். எனவேதான் பசியின்போது வயிறு எழுப்பும் சத்தம் வலிமையாக இருக்கிறது.

வாயில் தொடங்கி பிட்டத்தில் சென்று முடியும் ஒரு குழாய்தான் வயிறு, சிறுகுடல் எல்லாம். டூத்பேஸ்ட் குழாயைப் பிதுக்கி பேஸ்டை வெளிக்கொண்டு வருவதுபோலத்தான் இந்தக் குழாய் சுருங்கி விரிந்து தொண்டைக்குழியிலிருந்து உணவு வயிற்றுக்கு உள்ளே செல்கிறது. உணவு, திரவங்கள், பல்வேறு வாயுக்கள் அடங்கிய கலவை இப்படி வயிற்றில் உள்ள குழாய்க்குள் செல்கிறது. வயிற்றுக்குள் உள்ள குழாய்ப் பகுதி நிமிடத்துக்கு மூன்றிலிருந்து பன்னிரண்டு முறை இவ்வாறு சுருங்கி விரிவது நிகழலாம். இவ்வாறு பிதுங்கி விரியும்போது எழும் ஓசைதான் வயிற்றுக்குள் எழும் சத்தமாக நமக்குக் கேட்கிறது. இந்தச் சத்தத்தை 'போர்போரிக்மி' (Borborygmi) எனக் கூறுவார்கள்.

பூஜ்யம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் கணக்கை எப்படிச் செய்தார்கள்?

அ. ஜெயபால், மின்னஞ்சல்
.

பூஜ்யம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் ஒருவரிடம் ஐந்து மைனஸ் ஐந்து எவ்வளவு என கேட்டால் அவர் 'மீதம் இல்லை' என்றுதான் பதில் கூறுவார். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. அப்படி என்றால் 'பூஜ்யம்' என்றால் என்ன? 'பூஜ்யம்' என்பதற்கு இரண்டு தன்மைகள் உண்டு.

எடுத்துக்காட்டாக, '204' என்பதில் இரண்டு நூறுகள், நான்கு ஒன்றுகள் உள்ளன; பத்துகள் ஒன்றும் இல்லை என்பதை இட மதிப்பு தசம எண் முறையில் குறிக்க '0' எண்ணுருவாக அமைகிறது. இடமதிப்பைத் தரும் எண்ணுரு '0'. இது இதன் ஒரு பண்பு. முதன்முதலில் இத்தகு பூஜ்யத்துக்கான எண்ணுருவை எகிப்தியர்கள் பயன்படுத்தினர் என்பர்.

இரண்டாவது 'எண் மதிப்பு'. 5 x = 5 என்றால் x ன் மதிப்பு என்ன? என்பது அல்ஜிப்ரா கணிதம். இதில் x ன் மதிப்பு '0' எனக் கூறும்போது நாம் '0' என்பதை வெறும் இட மதிப்புக் குறியாக மட்டும் அல்ல 'எண் மதிப்பாக' பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்தும் போக்கை முதன்முதலில் ஏற்படுத்தியது இந்தியக் கணிதவியல் என்பது அறிவியல் வரலாற்று அறிஞர்கள் கருத்து.

ரோம எண்களில் இரண்டு விதமான பூஜ்யம் இல்லை. என்றாலும் அவர்களாலும் கணிதம் போட முடியும். ஆனால் பூஜ்யத்துடன் கூடிய இந்திய தசம எண் முறை, கணிதத்தை எளிமையாக்கி விடுகிறது என்பதால்தான் உலகம் முழுமையும் மொழி எழுத்துகள் வேறுபட்டு இருந்தாலும் எண்ணுரு பொதுவாக ஒன்றாக இருக்கிறது. சீன மொழியை நீங்கள் படிக்க முடியாமல் போகலாம். ஆயினும் அங்கும் கடைகளில் இந்த ஷர்ட் விலை '158' என நாம் விளங்கும் எண்ணுருவில்தான் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us