PUBLISHED ON : ஜூலை 25, 2016

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
அமாவாசையில் இருந்து பௌர்ணமி, பௌர்ணமியில் இருந்து அமாவாசை என மாறி மாறி நிகழ்கிறதே அது எவ்வாறு?
K.R. பாலாஜி, மின்னஞ்சல்.
எல்லாம் ஒளி மற்றும் நிழல் விளையாட்டுதான். இரவில் உங்கள் முன்னால் மட்டும் விளக்கு ஒளிர்கிறது எனக் கருதுங்கள். உங்களுக்கு முன் ஒருவர் இருந்தால் அவரது பின்புறம் நிழல் இருப்பதால் அவரை நீங்கள் சரியாகப் பார்க்க முடியாது. விளக்கை நோக்கிய பகுதி தெரியும். ஆனால் அந்தப் பகுதி உங்கள் கண்களுக்குப் புலப்படாது. அதே சமயம் உங்கள் பின் ஒருவர் நின்று கொண்டிருந்தால் அவர் முகத்தில் ஒளி விழுவதால் அவரை நீங்கள் பார்க்க முடியும். அவரது முதுகுப் பகுதியில் ஒளி விழாது; அது அந்தப் பக்கதில் இருப்பதால் உங்களுக்குப் புலப்படவும் செய்யாது. உங்களுக்குப் பக்கவாட்டில் ஒருவர் இருந்தால் அவர் முகத்தின் ஒரு பகுதி விளக்கின் ஒளியிலும், மறுபகுதி நிழலிலும் இருக்கும். எனவே பாதி முகம் தெரியும்.
இப்படித்தான் மையத்தில் பூமி இருக்க தொலைவில் சூரியன் ஒளி தர, நிலவு பூமியைச் சுற்றிவருகிறது. அவ்வாறு சுற்றிவரும்போது நமக்குப் பின்புறம் அமையும்போது பௌர்ணமி. நமக்கு முன்புறம் அமையும்போது அமாவாசை.
நிழல் ஏன் கருப்பாக இருக்கிறது?
ப.சௌமியா, மதுரை.
நிழல் கருப்பாக இல்லை; ஒளி அற்று இருக்கிறது. ஒளி அற்றதை நாம் கருப்பு என்கிறோம் அவ்வளவே. எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால் அது வெள்ளையாகப் புலப்படும். சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும்போது பல வண்ணங்கள் காணப்படும். நிசப்தம் என்பது சப்தம் இன்மை என்பது போல கருமை என்பது நிறம் அல்ல; ஒளி இன்மை.
நீரில் எண்ணெய் கலந்ததும் கலர் கலராக நிறப்பிரிகை தெரிவது ஏன்?
மு. தனலெட்சுமி, 8ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.
நீரின் மீது, எண்ணெய் படலமாகப் படரும். இவ்வாறு, படரும்போது மையத்தில் தடிமனாகவும் விளிம்பில் தடிமன் குறைந்து மெலிதாகவும் இருக்கும்.
சூரிய ஒளி போன்ற வெள்ளை நிற ஒளி என்பது பல நிறங்களின் கலவை. இந்த ஒளி நீர் - எண்ணெய் என்ற அடுக்கின் மீது விழும்போது ஒளியின் ஒரு பகுதி மேற்பகுதியில் இருந்து பிரதிபலிக்கப்படும். ஒரு பகுதி ஒளி நீரும் எண்ணையும் சேரும் பகுதியில் இருந்து பிரதிபலிக்கப்படும். எங்கெல்லாம் எண்ணெயின் தடிமன் குறைவாக இருக்கிறதோ அங்கே ஊதா (Violet) நிறமும் எங்கெல்லாம் தடிமன் கூடுதலாக இருக்கிறதோ அங்கே சிவப்பு (Red) நிறமும் தென்படும். இதுதான், 'ஒளி குறுக்கீட்டு (Interference) நிகழ்வு' எனப்படுகிறது.
கேயாஸ் (Chaos) கோட்பாடு என்பது என்ன? எதற்காகப் பயன்படுகிறது? இதைக் கண்டுபிடித்தவர் யார்?
சு.பிரகாஷ் அமர்நாத், 10ஆம் வகுப்பு, நகரத்தார் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.
எதிர்பாராத வியப்புச் சம்பவங்களை ஆராயும் கணிதவியல் தத்துவம் 'கேயாஸ் தியரி' எனப்படுகிறது. மூன்றே மூன்று கண்ணாடி மற்றும் சில கண்ணாடி வளையல் துண்டுகள் மட்டுமே உடைய எளிமையான கருவிதான் கலைடாஸ்கோப். ஆயினும் கலைடாஸ்கோப் வழியே பார்க்கும் போது ஒவ்வொரு தடவை திருப்பி அதன் உள்ளே உள்ள உடைந்த வளையல்களை அடுக்கும்போது ஏற்படும் வடிவப் பாங்கு ஒவ்வொரு தடவையும் வெவ்வேறாக அமைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அடுத்தடுத்து இரண்டு விதைகளை நட்டாலும் இரண்டு செடிகளும் ஒன்றுபோல இலை, காம்பு முதலியவைகளை கொண்டு இருப்பதில்லை. இவையெல்லாம் 'கேயாஸ் தியரி' கொண்டு ஆராய்கிறார்கள். வானிலை முதற்கொண்டு பல கணித மதிப்பீடுகளைச் செய்ய இந்தக் கோட்பாடு பயன்படுகிறது.
மரபணுக்கள் தம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தம்மை வடிவமைத்துக் கொள்ளும் என்பது உலகளாவிய உண்மை. அதுபோல வெள்ளி, செவ்வாய் கிரகங்களில் சுற்றுச்சூழலையும் ஏற்குமா?
ஸ்ரீப்ரியா.N. ஐயர், 9ஆம் வகுப்பு, ஆர்.ஜி.எம். பள்ளி, உடுமலைப்பேட்டை.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மரபணுக்கள் உடனே மாறிவிடாது. எடுத்துக்காட்டாக நச்சு வாயு உள்ள பகுதியில் குறிப்பிட்ட பாக்டீரியா இருந்தால் அது மடிந்துவிடும். ஆனால் பல கோடி கோடி பாக்டீரியா இருந்தால் அதில் சிலது அங்கும் இங்கும் நஞ்சு சற்றே குறைவான செறிவில் இருக்கும் இடுக்குகளில் ஒளிந்து தப்பிவிடலாம். இப்போது என்ன ஆகும்? முதலில் இருந்த பாக்டீரியாவில் சில, சற்றே நஞ்சு இருக்கும் போது மடிந்துவிடும்; சில சிறிது கூடுதல் செறிவில் நஞ்சு இருந்தாலும் உயிரோடு இருக்கும். ஆனால் இப்போது முதல் வகை முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் இரண்டாம் வகை மட்டுமே இருக்கும், அல்லவா? இப்போது இரண்டாம் வகை மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்கும். எனவே அடுத்த தலைமுறையில் ஓரளவு நச்சைத் தாக்குபிடிக்கும் வகை மட்டுமே இருக்கும். இப்படித்தான் புதிய வகைகள் உருவாகும்.
விண்வெளிக் கலங்கள் வழியாக சில நுண்ணுயிரிகள் தப்பி வெள்ளி அல்லது செவ்வாயில் சென்று சேர்ந்து அங்கே உயிர்ப்புப் பெற்று, பரிணமித்து புதிய உயிரிகளாக வளர்ந்துவிடலாம் என்ற அச்சத்தில்தான் அங்கே அனுப்பும் முன், விண்கலங்களை இடுக்குவிடாமல் கிருமி நாசினி கொண்டு எல்லா நுண்ணுயிரிகளையும் அகற்றிய பின்தான் செலுத்துவார்கள். மனிதன் அல்லது விலங்கு போன்ற பல செல் உயிரிகள் அவ்வளவு எளிதில் தகவமைத்து கொள்ள முடியாது. எனவே மனிதனைக் கொண்டுபோய் செவ்வாயில் விட்டுவிட்டால் அங்கே மனிதன் மெல்ல மெல்ல தகவமைத்து கொண்டுவிடுவான் என்பது இயலாத காரியம்.
