தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!


PUBLISHED ON : செப் 05, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 05, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

விண்வெளியில் இருந்து சீனப் பெருஞ்சுவரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது உண்மையா? அங்கிருந்து வேறு என்னென்ன விஷயங்கள் நம் கண்களுக்குப் புலப்படும்?

S. பத்ரி நாராயணன், 12ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கர வித்யாலயா, புதுச்சேரி.


'நிலவில் இருந்து பார்த்தால்கூட, சீனப் பெருஞ்சுவர் தென்படும்' என்பதெல்லாம் வெறும் கதைதான். ஆனால், விண்வெளியில், பூமிக்கு மேலே, சுமார் 300 - 400 கி.மீ., உயரத்தில், 'விண்வெளிப் பாதை' எனப்படும் பாதையில் பயணிக்கும் சர்வதேச வின்குடில் (International Space Station) போன்ற பகுதியில் இருந்து பார்த்தால், சீனப் பெருஞ்சுவர் தவிர, பிரமிடு, பெரிய அணைகள் என உலகின் பல பொருட்கள், வெறும் கண்களுக்குத் தென்படும். சுமார் 100 மீட்டரை விடப் பெரிய அளவிலான பொருட்களை, விண்வெளிக் குடிலில் இருந்து, சரியான வானிலை இருக்கும்போது, வெறும் கண்களால் பார்க்க முடியும். பைனாகுலரில் பெரிய ரோடுகள் உட்பட மனிதன் உருவாக்கிய பல பொருட்கள் தென்படும்.

காற்றாலையில் மின்சாரம் எவ்வாறு உருவாகிறது? வீட்டு மொட்டை மாடியில், சிறிய காற்றாலையை வைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடியுமா?

S. பூர்ண ஹரிஷ், 6ஆம் வகுப்பு, சிதம்பரம் விசாலாட்சி மெட்ரிக் பள்ளி, காரைக்குடி.


சைக்கிள் சுற்றும்போது, அதில் பொருத்தப்பட்டு இருக்கும் டைனமோ சுழன்று, மின்சாரத்தை உற்பத்தி செய்து, சைக்கிள் விளக்கை எரிய வைக்கிறது அல்லவா? அதுபோல, ஏதாவது ஒரு வகையில், டைனமோவை சுழல வைத்தால் மின்சாரம் தயாரிக்கலாம். ஓடும் நீரைக் கொண்டு சுழல வைப்பது, ஒரு முறை. காற்றாலைகளைப் பொறுத்தவரை, காற்றில் காற்றாடி சுற்றுவதைப் பயன்படுத்தி, டைனமோவை சுழற்றி, மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

காற்று அதிகமாக வீசும் பகுதியில்தான், காற்றாலைகளை நிறுவ முடியும். இதற்கு அதிக பொருட்செலவு ஆகும். அதனால், தனிப்பட்ட முறையில் காற்றாடியை நமது வீட்டு மொட்டை மாடியில் நிறுவுவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், செய்த செலவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போய்விடும்.

பலூன் வெடிக்கும்போது ஏன் சத்தம் வருகிறது?

G. சித்ரா. 9ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, ஒக்கியம்பேட்டை, சென்னை
.

'சப்தம்' என்பது காற்றில் ஏற்படும் அசைவு அல்லது அதிர்வுகள்தாம். காதின் அருகே கையை வேகவேகமாக அசைத்துப் பாருங்கள்!. 'விஷ்' என்று சப்தம் வரும். பலூன் வெடித்துச் சிதறும்போது, அதன் உள்ளே அழுத்தத்தில் இருக்கும் காற்றும் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, அருகில் உள்ள காற்றில், மிக வேகமான வலுவான அதிர்வுகள் ஏற்படும். இதுவே நமக்கு சப்தமாகக் கேட்கிறது.



தாமரை இலையில் தண்ணீர் ஒட்டுவதில்லை ஏன்?

K. ஸ்வர்ணராஜ், 9ஆம் வகுப்பு, ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, ஒக்கியம்பேட்டை, சென்னை
.

சிறிய நீர்த் துளியானது, தனது சொந்த பரப்பு இழு விசையால் (Surface tension) திரண்டு, முத்து போன்ற நீர்த் துளியாக இருக்கும். ஈரம் ஆகக்கூடிய தரை பரப்பின் மீது, அந்தத் துளி விழுந்தால், அதன் மீது இரண்டு விதமான ஆற்றல்கள் எதிரும் புதிருமாகச் செயல்படும். நீரின் பரப்பு இழு விசை, நீர்த் துளியைக் கட்டிப் பிடித்து வைக்க முயற்சி செய்யும். அதே சமயத்தில், பூமியின் கவர்ச்சி ஈர்ப்பு விசை (Gravitational force) நீர்த் துளியைக் கீழ் நோக்கி அழுத்தும். இறுதியில், நீர் படிந்து, பரப்பின் மீது படரும்.

தாமரை இலை மீது, நானோ அளவில், மிக மிக நுண்ணிய கூர் ஊசி போன்ற அமைப்புகள் உள்ளன. நீர்த் துளி, இலையின் மீது வந்து விழும்போது, அந்தத் துளி, மூன்று நான்கு நுனிகளின் முகட்டில் படிகிறது. இந்த ஊசி அமைப்புகள், மெழுகு போன்ற ஒரு பொருளினால் ஆனவை. எனவே, நீரை விலக்கும் தன்மையை இவை பெற்றுள்ளன. இதன் காரணமாக, ஊசி அமைப்பின் மீது நீர் ஒட்டுவதில்லை. துளியின் பரப்பு இழு விசை சிதையாத நிலையில், நீரானது, துளியாகவே இருக்கிறது. அந்தத் துளி, இலையின் மீது ஒட்டாமல், துளி வடிவிலேயே உருண்டு ஓடுவதுடன், தூசு தும்புகளையும் தன்னுடன் சேர்த்து அடித்துச் செல்லும். எனவே, 'தாமரை இலை சுத்தமாகவும் இருக்கிறது', என்ற தகவல், எலக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டு செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. இந்த நானோ தொழில்நுட்ப அறிவை வைத்து, தானே சுத்தம் செய்துகொள்ளும் ஷர்ட் முதல், அழுக்கு படியாத பல பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.



மனிதனின் இரைப்பையில் இருக்கும் அமிலத்தில் விரல் வைத்தால், சில விநாடிகளில் விரல் அரித்துப் போய்விடும் என்கிறார்கள்; ஆனால், வயிற்றுப் புழுக்கள் மட்டும் எப்படி வாழ்கின்றன?

ஹர்சிதா சந்தோஷி, 3ஆம் வகுப்பு, கிட்ஸ் கிளப் பள்ளி, திருப்பூர்
.

'வயிற்றில் உள்ள பூச்சிகள், வயிற்றின் அமிலத்தால் மடியாமல் எப்படி வாழ்கின்றன?' என்பதற்கான விளக்கம், 'நமது வயிறு, அதே அமிலத்தால் அழிந்து போகாமல் இருப்பது எப்படி?', என்ற விளக்கத்தில் அடங்கி இருக்கிறது. வயிற்றின் உள்ளே, ஒரு வகை ஜவ்வுப் பொருள் பூச்சு உள்ளது. இந்த ஜவ்வுப் பொருள்தான், வயிற்றின் தசைப் பகுதியை, அமிலத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு புறம் அமிலம், ஜவ்வை சிதைத்துக் கொண்டிருக்க, மறுபுறம் அதனை ஈடுகட்ட வயிற்றுத் தசை, புதிய ஜவ்வை எப்போதும் உமிழ்ந்து கொண்டே இருக்கும். தட்டை வடிவில் இருக்கும் தட்டைப் பூச்சியின் மேலே, இது போன்ற ஜவ்வுப் பொருள் உள்ளது; உருளைப் புழுவின் மேலே, எளிதில் அமிலத்தால் அரிபடாத, தடிமனான தோல் இருக்கிறது. இதனால்தான் 'உருளைப் புழு' எனப்படும் நாக்குப் பூச்சி, தட்டைப்புழு போன்ற பூச்சிகள், நமது இரைப்பையில் 'ஜாம்ஜாம்' என வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us