தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!

வெங்கியைக் கேளுங்கள்!


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் மத்திய அரசு விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்



இயற்கைப் பேரழிவுகளை விலங்குகளால் எப்படி உணர முடிகிறது?

நா. சோபனா, 10ஆம் வகுப்பு, வேலம்மாள் வித்யாலயா, விரகனூர், மதுரை.


'அகவொலி' எனப்படும் இன்ஃப்ராசவுண்ட் (Infrasound) அளவில் இருக்கும் நுண்ஒலியை கேட்கும் திறன், சில விலங்குகளுக்கு உள்ளது, என நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ளது. மனிதனின் காதுகளுக்கு அத்தகைய ஒலியைக் கேட்கும் திறன் கிடையாது. நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் வித்தியாசமான, தாறுமாறான அகவொலியை ஏற்படுத்தும். இதனை உணரும் திறனுடைய விலங்குகள் குழப்பம் அடைந்து, அந்த இடத்தை விட்டு தப்பித்து ஓடிவிடும்.

காற்றில் நிறைய வாயுக்கள் இருக்கும்போது, ஆக்சிஜனை மட்டும் நாம் எப்படி சுவாசிக்கிறோம்?

நவின் விக்ரம், சென்னை.


நாம் சுவாசிக்கும் போது, எல்லா வாயுக்களும் கலந்த கலவை காற்றுதான் நுரையீரலுக்குள் செல்கிறது. நுரையீரலில் நுழையும் காற்று, ஆல்வியோலி (Alveoli) எனப்படும் மூச்சுச் சிற்றறைகளுக்குள் புகும். அந்த நுண்ணறைகளின் உட்சுவரில் சிறுசிறு ரத்த நுண் குழாய்கள் இருக்கும். இவை காற்றில் உள்ள ஆக்சிஜன் மூலக்கூறுகளை, ரத்தத்தில் கலக்கச் செய்யும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் ஆக்சிஜனைக் கவர்ந்து பற்றிக்கொள்ளும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, நுரையீரலுக்குள் வந்துவிடும். இவ்வாறுதான் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நுரையீரல் பிரித்தெடுத்து, ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

பூமத்திய ரேகை என்றால் என்ன? அதன் பொருள் என்ன?

T. சாய்ரோகித், 7ஆம் வகுப்பு, ஸ்மால் வொண்டர் பள்ளி, கோவை.


எலுமிச்சம் பழத்தை சாறு பிழிவதற்காக, பக்கவாட்டில் சரியாக இரண்டு துண்டாக வெட்டுவது போல, பூமியின் வடக்கு தெற்கு அச்சு புள்ளிகளுக்கு இடையே, சரியாக நடுவே பிரிக்கும் கோடுதான் பூமத்திய ரேகை. இதை நிலநடுக் கோடு என்றும் சொல்கிறோம். உள்ளபடியே பூமியின் மீது அப்படி ஒன்றும் கோடு இல்லை. புவியியல் ரீதியாக, நாம் கற்பனையாக வரையும் கோடுதான் இது.

கடலுக்குப் பக்கத்தில் அதிகமாக வீசும் காற்று, மற்ற இடங்களில் குறைவாக இருப்பது ஏன்?

ஜா. சாம் லூரி அபிநவ், 12ஆம் வகுப்பு, ஆக்ஸ்போர்ட் பள்ளி, சிவகங்கை.


கடலுக்கு அருகே தடுப்புகள் எதுவும் இல்லை என்பதால், நம்மால் நாலா பக்கத்தில் இருந்தும் காற்று வீசுவதை உணர முடிகிறது. இதனால்தான் கடலின் அருகே கூடுதல் காற்று உள்ளது என நாம் கருதுகிறோம். உள்ளபடியே கடலுக்குத் தொலைவிலும் இதே நிலைதான் நிலவுகிறது. பருவ காலங்களைச் சார்ந்து அடிக்கும் காற்றின் திசையும் வேகமும் மாறுபடும்; அவ்வளவுதான். தரை பரப்பின் மீது மரங்கள், வீடுகள் எனப் பல்வேறு தடுப்புகள் உள்ளதால், நம்மால் காற்று வீசுவதை அவ்வளவாக உணர முடிவதில்லை. இதுதான் வேறுபாடு.

பச்சைத் தாவரங்கள் மின்சாரத்தைக் கடத்துவதும், காய்ந்த தாவரங்கள் மின்சாரத்தைக் கடத்தாததும் விந்தையாக உள்ளதே! என்ன காரணம்?

ஜெ. ஹனிஷ்கா, 6ஆம் வகுப்பு, ஸ்ரீ ஆன்ந்த் ஜெயின் மெட்ரிக் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை.

உயிருள்ள மனித உடலைப் போல, பல தாவரங்களிலும் 90 சதவீதம் நீர்தான் உள்ளது. நீர் கரைசல் கொண்ட பச்சைத் தாவரம் மின்சாரத்தைக் கடத்தும். அதே தாவரம் காய்ந்து போன பின், அதிலுள்ள நீர் சத்து போய்விடுகிறது. நீரற்ற தாவரப் பகுதி, மின்சாரத்தைக் கடத்தாது; எனவேதான் காய்ந்த மரம் மின்சாரத்தைக் கடத்துவதில்லை. மின்சாரத்தைக் கடத்துவது நீர் சத்துதான்.

முதல் மனிதன் எங்கே தோன்றினான்? குமரிக் கண்டத்திலா, ஆப்பிரிக்காவிலா?

மு. அருண்குமார், 11ஆம் வகுப்பு, இந்து நாடார் பள்ளி, முகவூர்.


நீ, நான், எல்லோரும் அடங்கிய நவீன மனித இனம் ஆப்பிரிக்காவில்தான் தோன்றியது. அங்கே சில லட்சம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய இந்த இனம், இந்தியா உட்பட உலகம் முழுவதும், சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்பு பரவிக் குடியேறியது, என நவீன மரபணு அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே நாம் எல்லோரும் அடிப்படையில் ஆப்பிரிக்கர்கள்தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us