தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

ரயிலில் பயணம் செய்யும்போது, மரம் போன்றவை நமக்கு எதிர்த் திசையில் நகர்வது போல உணர்வது ஏன்?

வி.சாந்தகோபாலன், மதுரை.


இது ஒருவகை காட்சித் தோற்றம் அல்லது காட்சி மயக்கம். ரயில் சீரான வேகத்தில், அலுங்காமல் குலுங்காமல் மெதுவாக நகரும் சமயத்தில் மட்டுமே, இந்த காட்சித் தோற்றம் ஏற்படும். நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் ரயிலில் இருந்து, ஜன்னல் வழியே எதிரே உள்ள ரயிலைப் பார்க்க நேரிடும். அப்போது திடீர் என நமது ரயில் சீரான வேகத்தில் நகர்ந்தால், நாம் நகர்கிறோம் என நமது உணர்வுக்குப் புரிவதில்லை. அதனால், எதிரே உள்ள ரயிலின் பிம்பம் இடப்பெயர்ச்சி பெறுகிறது. இதனை நமது மூளை எதிரே உள்ள ரயில் நகர்வதாக தவறாகப் புரிந்து கொள்கிறது.

வேகமாகப் பாயும் அருவியை கண்கொட்டாமல் வெறித்துப் பார்த்துவிட்டு, உடனே அருகே உள்ள மரத்தைப் பார்த்தால், மரம் மேலே செல்வது போன்ற காட்சித் தோற்றம் ஏற்படுவதும் இதுபோன்ற நிகழ்வே!

பூரான், மரவட்டை போன்றவற்றின் அடிப்படை உணவுகள் என்னவாக இருக்கும்?

ஜி.வீரராகவன், 5ம் வகுப்பு, இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, மீனம்பாக்கம், சென்னை.


உணவுச்சங்கிலியில் பூரான், மரவட்டை போன்றவை தோட்டி வேலை செய்பவை எனக் கொள்ளலாம். தோட்டி வேலை என்பது தனக்கான உணவையும் பெற்றுக்கொண்டு சுற்றுப்புறத்தையும் சுத்திகரிக்க வேண்டும். அதாவது, தோட்டி விலங்குகள் தம் உணவு வழக்கத்தில் ஊனுண்ணியாக அல்லது தாவர உண்ணியாக இருந்தாலும், அவை தம் வாழிடத்திலுள்ள இறந்த மற்றும் சேதமுறும் பதார்த்தங்களை உணவாகக் கொள்கின்றன. ஏனைய பூரான் வகைகள், சிறுசிறு பூச்சிகள், புழுக்கள், சிலந்தி முதலியவற்றை பூரான் உணவாக கொள்ளும்போது, செடிகளின் இளம் வேர்ப் பகுதி, இலைகள் முதலியவற்றை மரவட்டை விரும்பி உண்ணும்.

நாய் வாலை ஏன் நிமிர்த்த முடியாது?

இ.தர்ஷிகா, 3ம் வகுப்பு, பாரதி பள்ளி, மேலூர்.


'என்ன செய்தாலும், நாய் வாலை நிமிர்த்த முடியாது' இது பரவலாகக் கூறப்படும் ஒரு சொலவடை. இதை நுட்பமாகப் பார்த்தல் சரியல்ல. சிலசமயம், நாய் தன் வாலை தானே நிமிர்த்தி நேராக வைத்துக் கொள்ளும். சில நாய்களுக்கு குட்டையான வால்தான்; எனவே அது வளைந்து உள்ளது எனச் சொல்லவே முடியாது.

நாயின் முதுகெலும்பின் நீட்சியே அதனுடைய வால். சுமார் ஆறு முதல் இருபத்திமூன்று முள்ளெலும்புகளை உள்ளடக்கியது முதுகெலும்பு. அந்த எலும்புகளைச் சுற்றிப் பிணைந்திருக்கும் திசு, ஒவ்வொரு பகுதியிலும் பல தனித்துவ குணம் கொண்டது. வாலின் நுனியை நாயால் நுட்பமாகச் செயல்படுத்த முடிவதுபோல, அதன் மையப்பகுதியைச் செயல்படுத்த முடியாது. அதனால்தான் நாய்வாலை நிமிர்த்த முடியாது என்ற கருத்து இருக்கிறது.

வெறும் கண்களால் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?

வி.ரகுராம், 3ம் வகுப்பு, ஊ.ஒ.து பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.


தூசு, நீராவி, காற்று, மாசு, பனிமூட்டம் முதலியவை இல்லாத தெளிந்த வானம் உள்ளபோது, எவ்வளவு தொலைவு பார்க்கமுடியும்? பூமி கோள வடிவம் கொண்டது. கடல் மட்டத்தில் சுமார் 4.8 கிலோமீட்டருக்கு மேலே உள்ள பகுதி பூமியின் வளைந்த பகுதிக்குள் சென்றுவிடுவதால், அந்தத் தொலைவு நமது பார்வையில் இருந்து மறைந்துவிடும்.

பல கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியனை நம்மால் காணமுடிகிறது; அதுமட்டுமல்ல, ஆண்ட்ரோமிடா கேலக்ஸி (Andromeda galaxy)யைக் கூட, நம்மால் பார்க்க முடியும். அந்த கேலக்ஸியில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேரவே 26 லட்சம் ஆண்டுகள் ஆகும்.

தொலைவில் உள்ள, மேலும் தெளிந்த கும்மிருட்டு இரவு வானத்தில் சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ள மெழுகுவர்த்தி ஒளியைக் கூட நமது கண்களால் காணமுடியும். எனவே, ஒரு பொருள் காட்சிப்படுவதற்கு முக்கிய தடை தொலைவு அல்ல; அதிலிருந்து நம்மை வந்துசேரும் ஒளியின் அளவுதான் அந்தப் பொருள் நமக்குத் தெரியுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். செலிக் ஹேஷெட் (Selig Hecht) 1941ல் நடத்திய ஆய்வின்படி, 54 முதல் 148 ஒளித்துகளான போட்டான் துகள்கள் வந்து கண்களின் விழித்திரையை எட்டினால் அந்த ஒளி நம் கண்களுக்குக் காட்சியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us