தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி

1. கை ரேகைகள் மறைய வாய்ப்பு இருக்கிறதா?

ம. முஹமது தாணிஸ், எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.


இறுக்கமாகப் பிடிக்க விரல்களுக்கு உராய்வைத் தரும் வரி மடிப்புகள்தான் ரேகைகள். ஒரு வெள்ளைக் காகிதத்தை நன்றாக மடக்கிப் பிரித்துப் பார்த்தால் சுருக்கக் கோடுகள் பதிந்திருக்கும். அதுபோல குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் சுருள்களும் முடிச்சுகளும் கொண்ட ரேகைகள் உருவாகின்றன.

கையில் ஏற்படும் காயங்களால் கைரேகைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டாலும், ஒரு மாத இடைவெளியில் திரும்ப உருவாகிவிடும். பெருவிரல் ரேகை பெருமளவில் மாறாது என்பதால்தான், ஆவணங்களில் பெருவிரல் ரேகை பெறப்படுகிறது. கைவிரல் ரேகையை அடையாளமாகப் பயன்படுத்துவது போல, உள்ளங்கை ரேகைகளைப் பயன்படுத்த முடியுமா என ஆய்வுகள் நடக்கின்றன. கண்ணாடி, உலோகம் போன்ற பொருட்களில் ரேகைகள் பதியும்.

2. விளக்கு வெளிச்சத்தைத் தேடிச் சென்று பூச்சிகள் இறப்பது ஏன்?

ப.யாழினி, 10ஆம் வகுப்பு, கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேனி.


ஒளியைத் தேடிச் சென்று பூச்சிகள் தம்மைத்தாமே மாய்த்துக்கொள்வது குறித்து, உறுதியான அறிவியல் விளக்கம் இதுவரை இல்லை. விளக்கின் வெளிச்சத்தை நோக்கிப் பூச்சிகள் ஏன் செல்கின்றன என்பது குறித்து, மூன்று கருத்துகள் உள்ளன.

1. மனிதன், செயற்கை ஒளியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர், இரவில் ஒளிரும் ஒரே பிரகாசமான பொருள் நிலவு மட்டுமே. நிலவை வைத்து திசை அறிந்து செயற்பட்ட பூச்சிகள், செயற்கை விளக்கின் ஒளியில் குழம்பி, விளக்கை நோக்கிச் செல்கின்றன.

2. பூச்சிகளின் தேவை ஒளி அல்ல. ஒளி தரும் வெப்பத்தைப் பூச்சிகள் விரும்புவதால், உஷ்ணம் குறைவாக இருக்கும் இரவில் வெப்பத்தைத் தேடிச் சென்று மாட்டிக் கொள்கின்றன.

3. பெண் பூச்சிகள் ஒருவகை அகச்சிவப்புக் கதிரை உமிழும். அதுபோல செயற்கை ஒளிகள் தெரிவதால், துணையைத் தேடிச் செல்லும் நோக்கில் விளக்கில் பட்டு மடிகின்றன.

3.மனிதர்களின் முக அமைப்பில் வேறுபாடு இருப்பதுபோல விலங்கு, பறவைகளின் உடலமைப்பில் வேறுபாடுகள் காண முடியுமா?

ரனிட்டா ஹன்சிகா, என்.எம்.எஸ்.வி.எஸ்.கே. பள்ளி, மதுரை.


மனிதர்கள் மட்டுமே பல்வேறு முகச் சாயல்களில் இருக்கிறார்கள் என நம்மில் பலர் கருதுகிறோம். விலங்குகளோடு பழகுபவர்களிடம் கேட்டால், விலங்குகளுக்கும் வெவ்வேறு முகஜாடை இருக்கிறது என்பார்கள். பறவைகளிடமும் முக வேற்றுமை உண்டு.

உடலுறுப்புகளில் உள்ள வேறுபாடுகள் குறித்து நடந்த ஓர் ஆய்வு வியப்பான செய்தியைத் தெரிவித்தது. அதாவது குறிப்பிட்ட உறுப்பின் அடையாளத்தை வைத்து, முகத்தின் அளவுகளைத் தவிர, வேறு உறுப்புகளின் அளவுகள் எந்தவகையில் இருக்கும் என்பதைக் கணிக்க முடிந்தது. நீண்ட கைகள் கொண்டவர்கள், நீண்ட கால்களைக் கொண்டிருந்தனர். ஆனால், குறுகிய கண்களை உடையவர்களின் மூக்கு நீளமாகவோ அல்லது குட்டையாகவோ இருக்கும் என்பதைச் சரியாகக் கூறமுடியவில்லை. ஏனைய உடலுறுப்புகளை ஒப்பிடும்போது கண்களுக்கு இடையே இடைவெளி, மூக்கின் நீளம் என, முகத்தில் பல்வேறு வேறுபாடுகள் பரவலாக இருந்தன. இதனாலேயே ஒரே தாய் தந்தைக்குப் பிறந்தாலும், ஒவ்வொரு பிள்ளையும் தனித்துவமான முக அமைப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மனித பரிணாம வளர்ச்சியில் ஒருவரை ஒருவர் அடையாளம் காணும் பொருட்டே முக வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதுபோலவே, பரிணாம தேவை காரணமாக, பறவைகள் தம்மைத் தனித்து அடையாளப்படுத்த குரல் வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். ஓர் இனத்தில் எல்லாப் பறவைகளின் சப்தமும் நமக்கு ஒன்றுபோலக் கேட்டாலும், பறவைகள் அவற்றை வேறுபடுத்திக்கொள்ளும். எனவே, மனிதனுக்கு முகம் என்றால் பறவைக்கு குரல் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறது.



4. இரத்தத்தில் வெள்ளை, சிவப்பணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் எவ்வாறு பயணிக்கின்றன?

பா.ரக்ஷனி, 10ஆம் வகுப்பு, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கடலூர்
.

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுதான் பயணிக்கின்றன. இரத்தம் என்பது, வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும் பிளாஸ்மா திரவத்தில் கலந்த கலவை. இது, 'கூழ்மம்' எனவும், 'தொங்கல் கரைசல்' (suspension) எனவும் அழைக்கப்படுகிறது. 100 மி.லி. இரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின்கள்தான் உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன.

இரத்தநாளங்களில் இரத்தம் பாயும்போது, மேலும் கீழும் குதித்துக் கொண்டேதான் பாயும். எனவே, அவ்வப்போது வெள்ளை அணுக்களும் சிவப்பணுக்களும் ஒன்றுடன் ஒன்று மோதுவது மட்டுமன்றி, ரத்தநாள சுவர்களிலும் மோதிக்கொள்ளும். நீர்மத்தில் மிதந்து செல்லும் செல்கள் இவ்வாறு மோதுவதால் உடைந்துவிடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us