தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஜூலை 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

உயரமான இடத்தில் இருந்து கூக்குரலிட்டால், எதிர்த் திசையில் எதிரொலிப்பது ஏன்?

வி.யோகேஸ்வரன், 8ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, கொடைக்கானல்.


காற்றில், ஒலியின் வேகம் நொடிக்கு 330 மீட்டர். எதிரொலி என்பது ஒலியின் பிரதிபலிப்பு. நமக்கு அருகே உருவாகும் ஒலியலைகள் சற்றுத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் மீது மோதி நமது திசை நோக்கிப் பிரதிபலிப்பதே எதிரொலி. அதாவது, ஒலிபடும் பொருள், ஒலியைக் கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து சுமார் 17 மீட்டருக்கு அப்பால் இருந்தால் மட்டுமே எதிரொலி கேட்க வாய்ப்பு உருவாகும்.

மலை போன்ற உயரமான இடங்களில் இருந்து கூக்குரலிடும்போது, பாறை போன்ற பொருட்கள் 17 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் இருப்பதால் அதன் மீது பட்டு ஒலி எதிரொலிக்கிறது. சுவரில் மோதியும் ஒலி எதிரொலிக்கும் வாய்ப்பு உண்டு. இதனால்தான், திரையரங்குகளில் ஒலி எதிரொலிப்பதைத் தடுக்கப் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வாய் புண்ணாவது ஏன்?

கே.கவியரசு, 9ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, மானாமதுரை, சிவகங்கை.


கரும்பைக் கடித்துத் தின்பதால் ஏற்படும் பிரச்னைதான் அது. கரும்புச் சாற்றுக்கும், புண்ணுக்கும் தொடர்பில்லை. கரும்புச் சாறு வாங்கிக் குடிக்கிறோம்; புண் ஏற்படுவதில்லையே?

கரும்பில் நார் போன்ற பகுதி இருக்கிறது. அதை நாம் கடித்துச் சுவைக்கும்போது, நார்ப் பகுதியின் சக்கை சிறு சிறு துணுக்குகளாக உடைந்து நாக்கில் குத்துகிறது. இதனால் காயம் ஏற்படுகிறது. உணவைச் சூடாகச் சாப்பிடும்போது புண்ணாகும் நாக்கு, ஓரிரு நாட்களில் தானே குணமாகும். அதுபோல கரும்பு நார் ஏற்படுத்தும் புண்ணும் தானாகச் சரியாகிவிடும். அதற்குள்ளாகத் தண்ணீர் அருந்தினால், காயம்பட்ட இடத்தில் நீர் பட்டு வலி ஏற்படுகிறது. இதைத்தான் கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வாய் புண்ணாகிறது என்று தவறாகக் கருதுகிறோம்.

மாரடைப்பு எதனால் வருகிறது? சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன?

ச.பிரணவ், 9ஆம் வகுப்பு, முகம்மதியா மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.


மாரடைப்பு என்பதை இதயத்தசை இறப்பு (Myocardial infarction) என மருத்துவ உலகில் கூறுவர். அதாவது, இதயத்தசைப் பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைந்து அல்லது நின்று போகும்போது, அங்கே உள்ள திசுக்கள் மடிந்துவிடும். முடியுறு தமனிகள்தான் (Coronary arteries) இதயத்தசைப் பகுதிக்கு இரத்தத்தை ஏந்திச் செல்கின்றன.

* முடியுறு தமனியின் சுவரில் ஏற்படும் சுருக்கம்

* கொழுப்பு படிந்து குழாயின் அளவு சுருங்கிப் போதல்

* இரத்தம் கெட்டி அடைத்தல்

போன்ற காரணங்களால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, தசைப் பகுதிக்குச் செல்ல வேண்டிய ஆக்சிஜனில் பற்றாக்குறை ஏற்படும்.

போதிய ஆக்சிஜன் இல்லாமல் இதயத் தசைப் பகுதி மெல்லமெல்ல மடிந்து, கடைசியில் மாரடைப்பாக மாறுகிறது. தற்காலத்தில் சிறுவயதினர் பலர் சர்க்கரைப் பொருள், கார்போஹைட்ரேட் மிகுதியாக உண்பதன் தொடர்ச்சியாக, அவர்களின் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால், முடியுறு தமனியின் சுவரில் கொழுப்புப் படிந்து, குழாயின் அளவு சுருங்கிப் போகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சிறு வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது.

வாகனத்தில் செல்லும்போது நம்முடன் பயணிக்கும் ஒரு ஈ, திடீரென பறந்து சென்றால் நமது வேகத்தை ஒத்திருக்குமா?

கி.பிரசன்ன நிலேஷ், 8ஆம் வகுப்பு, பி.வி.எம். குளோபல் மெட்ரிக் பள்ளி, கோவை.


வேகம் எனக் கூறும்போது, 'ஒப்பு வேகம்' (Relative velocity) என்ற இயற்பியலின் அடிப்படையையும் புரிந்துகொள்ள வேண்டும். ஓடும் இரயிலில் ஆடாமல் அசையாமல் அதே சீட்டில் உட்கார்ந்துகொண்டு இருப்பவர், அவருடன் பயணிக்கும் மற்றவர்களைப் பொறுத்தவரை நகரமால் இருக்கிறார் என்றுதான் அர்த்தம். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவருக்கு இரயிலின் வேகத்தில் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு வாகனத்தில் ஓட்டுநருக்குப் பின்புறமாக நீங்கள் அமர்ந்து பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, உங்கள் தோளில் இருந்து ஓர் ஈ பறந்து ஓட்டுநரின் தோளில் உட்கார்ந்தால், அது பறந்த வேகம் தரையைப் பொறுத்தவரை வாகனத்தின் வேகத்தை விடக் கூடுதலாகவே இருக்கும்.

ஓடும் ரயிலுக்குள், ரயில் போகும் திசையில் நடந்து சென்றால் உங்கள் வேகம், தரையைப் பொறுத்தவரை ரயிலின் வேகத்தைவிடக் கூடுதலாகவே இருக்கும். அதைப் போலவே, நீங்கள் உங்கள் வீட்டில் தூங்கினாலும், பூமியின் வேகத்தில் சுற்றிக்கொண்டுதான் இருப்பீர்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us