தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!

வெங்கியை கேளுங்கள்!


PUBLISHED ON : ஆக 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த. வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி



1.நாசா, செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்ப இருக்கும் செய்தி படித்தேன். காற்று மண்டலம், விண்கற்களின் தாக்குதல் இவற்றைத் தாண்டி அது பயணிக்குமா?

இ.இம்ரான், 10ஆம் வகுப்பு, திருச்சி.


பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையே காற்று இல்லை. வெற்றிட விண்வெளிதான் இருக்கிறது. எனவே, பூமியில் இருந்து செவ்வாய்க்கு ஹெலிகாப்டரால் செல்ல முடியாது. மாறாக, ஒரு விண்கலம் மூலமாக செவ்வாய்க்கு ஹெலிகாப்டரை எடுத்துச் சென்று அங்கே இயக்க முடியும்.

ஏற்கெனவே, ரோபோ கார் போன்ற வாகனத்தை எடுத்துச்சென்று, செவ்வாயின் மேற்பரப்பில் இயக்கி உள்ளனர். அதுபோல ஹெலிகாப்டரை அனுப்புவதில் சிக்கல் இருக்காது. ஆனால், செவ்வாயில் காற்றின் அடர்த்தி குறைவு என்பதால், பூமியில் செயற்படும் ஹெலிகாப்டர்கள் அங்கே செயற்பட வாய்ப்பில்லை. ஆகவே, செவ்வாயில் இயங்கும் வகையில் சிறப்பு ஹெலிகாப்டர்கள் தயாரிக்க வேண்டிவரும். உங்கள் கேள்விபோல யோசனை அளவில் மட்டுமே தற்போது சாத்தியம்.

2. வெப்பம் எவ்வாறு காற்றுக்குள் பயணிக்கிறது?

கே.அர்ச்சனா, 9ஆம் வகுப்பு, அம்ரிதா வித்யாலயா, இராமநாதபுரம்.


வெப்பநிலைக்கும் வெப்பத்துக்கும் தொடர்பு உண்டு என்றாலும், இரண்டும் ஒன்றல்ல. நீரைச் சூடாக்குவதால் அதன் வெப்பநிலை (Temperature) அதிகரிக்கும். சிறிய டம்ளர் நீர் அல்லது பெரிய அண்டா நீர் எதுவாக இருப்பினும், இரண்டையும் ஒரே வெப்பநிலைக்கு நம்மால் எடுத்துவர முடியும். ஆனால், சிறிய டம்ளரில் உள்ள மொத்த மூலக்கூறுகளைவிட பல மடங்கு கூடுதல் மூலக்கூறுகள் அண்டாவில் உள்ளன. எனவே, இரண்டும் ஒரே வெப்பநிலையில் இருந்தாலும் அண்டாவின் வெப்ப ஆற்றல் அளவு, டம்ளரின் வெப்ப ஆற்றல் அளவைவிடக் கூடுதலாக இருக்கும்.

வெப்பநிலை என்பது குறிப்பிட்ட பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி ஆற்றல். ஆனால் வெப்ப ஆற்றல் அளவு என்பது அந்தப் பொருளில் உள்ள ஒவ்வொரு மூலக்கூறு ஆற்றலின் கூட்டுத் தொகை.

காற்று என்பதும் ஒருவகைப் பொருளே. திடம், திரவம் போல பொருட்களின் ஒரு நிலையே காற்று. சூடான காப்பிக் கோப்பையை மேஜையின் மீது வைத்தால், கோப்பையைத் தொடும் காற்று மூலக்கூறுகள் கூடுதல் ஆற்றல் பெறும். அந்த மூலக்கூறு விலகும்போது கோப்பையைச் சுற்றிய காற்றுப் பகுதியும் சற்றே வெப்பமுறும். அதே சமயத்தில், கோப்பையும் அதே அளவு வெப்பத்தை இழக்கும். இதனை 'வெப்பக் கடத்தல்' என்பார்கள். இதுதவிர வெப்பச் சலனம், வெப்பக் கதிரியக்கம் ஆகிய வழிகளிலும் கோப்பையின் வெப்ப ஆற்றல் வெளியேறிக் காற்றைச் சூடுபடுத்தும்.



3. ஒரே நேரத்தில் மழையும் வெயிலும் வரக் காரணம் என்ன?

மு.சபரி, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை.


கடல்கள், ஏரிகள், ஆறுகள் போன்றவற்றில் இருக்கும் நீர், வெப்பம் காரணமாக நீராவி நிலைக்கு மாறி, காற்றில் கலந்து மேகங்களை உருவாக்குகின்றன. இந்த நீரே மழையாகப் பெய்கிறது. இந்த நிகழ்வை நீர்ச் சுழற்சி (The Water Cycle) என்று குறிப்பிடுகிறோம்.

பகலில் சூரியன் இருக்கும்வரை வெயில் இருக்கும். ஒருவேளை அடர்ந்த மேகம் இடையில் வந்துவிட்டால், அந்தப் பகுதியில் வெயில் குறையும். அதாவது, மறைக்கப்பட்ட வெயில் மேகத்தின் மீது படர்கிறது. மேகம் தொடர்ச்சியாகப் படர்ந்து இல்லாமல், இடைவெளி இருந்தால், அந்த இடைவெளி வழியாக வெயில் பூமியில் விழும். அந்தச் சமயத்தில் மழையும் வெயிலும் ஒரே சமயத்தில் வரலாம்.



4. உலகின் முதல் மனிதர்கள் யார்? எங்கே தோன்றினார்கள்?

கௌ.சஹானா, 8ஆம் வகுப்பு, பார்வதீஸ் அனுகிரஹா சர்வதேசப் பள்ளி, திண்டுக்கல்.


நம்மைப் போன்ற மனிதர்களை 'நவீன மனிதர்கள்' என்று வகைப்படுத்துகிறார்கள். சுமார் 5 முதல் 7 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் மனித மூதாதையர் தோன்றினர். அந்த இனத்தில் இருந்து சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான்; ஆப்பிரிக்காவில் தோன்றிய இந்த இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, ஆசியப் பகுதிகள் நோக்கி இடம்பெயர்ந்தனர் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.

பின்னர் சுமார் 1 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அந்த இனம் பரவியது. இந்தியப் பகுதியில் சுமார் 80 முதல் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நவீன மனிதஇனம் முதன்முதலில் குடிபுகுந்தது எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வரலாற்றுத் தகவலை மாற்றும் வகையில், 2011ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டுக் குகை ஒன்றில் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிமங்களைக் கண்டெடுத்தனர். இதை ஆய்வுசெய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில்தான் தோன்றினான் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதன்மூலம், மனிதனின் தோற்றம் குறித்துப் பல குழப்பமான முடிவுகளே நீடிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us