PUBLISHED ON : ஆக 20, 2018

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. சூரியனைச் சுற்றி பல கிரகங்கள் இருப்பதுபோல, வானில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றியும் கிரகங்கள் இருக்குமா?
சீ.ஆனந்தி, 5ஆம் வகுப்பு, அழகப்பா தொடக்கப் பள்ளி, காரைக்குடி.
ஆம்! பல நட்சத்திரங்களைச் சுற்றிப் பல கிரகங்கள் உள்ளன. பிரபஞ்சத்தில் சூரியனைப் போல் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. சூரியனைச் சுற்றும் கிரகங்களை 'கோள்கள்' (Planets) என்றும், சூரியன் அல்லாத நட்சத்திரங்களைச் சுற்றும் கிரகங்களை 'புறக்கோள்கள்' (Exoplanet) என்றும் அழைக்கப்படுகின்றன. கடந்த ஜூலை 1ஆம் தேதிவரை 2,841 நட்சத்திரங்களைச் சுற்றி வரும் 3,797 புறக்கோள்கள் இனம் காணப்பட்டுள்ளன. இதில், 632 நட்சத்திரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புறக்கோள்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் விண்வெளி ஆராய்ச்சிகள் மூலமாகப் புதிதுபுதிதாகப் புறக்கோள்கள் இனம் காணப்படுகின்றன.
பிரபஞ்சத்தின் மையத்தில் இருக்கும் பூமியையே, கோள்களும் சூரியனும் விண்மீன்களும் சுற்றி வருகின்றன என்று கருதிக் கொண்டிருந்தோம். நட்சத்திரங்கள் எல்லாமே தனித்தனி சூரியன்கள் என்றும், அதைச் சுற்றியும் புறக்கோள்கள் உள்ளன என்றும் கண்டறிந்த பிறகு, எல்லா கோட்பாடுகளும் மாறின. அதன்பிறகே, பூமியைப் போன்ற மற்ற கோள்களிலும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பார்கள் என்ற கருத்து உருவானது.
2. மின்னணுக் கழிவு (E- waste) என்பது என்ன? அதை அகற்றும் வழிமுறைகள் யாவை? வி.சந்தானகோபாலன், மதுரை.
நாம் பயன்படுத்தும் மின்னணுப் (Electronic) பொருட்கள் பழுதடைந்து உபயோகிக்க முடியாமல் போகும்போது, மின்னணுக் கழிவாக மாறுகிறது. இவற்றில் கணினி சார்ந்த பாகங்கள், மொபைல்போன்கள், சார்ஜர்கள், சிடி, ஹெட்போன்கள், டிவி, ஏசி போன்றவை அதிகமாகச் சேர்கின்றன. மின்னணுக் கழிவுகள் அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடம் பெறுகிறது. டில்லி, பெங்களூரூ, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் 70 சதவீத மின்னணுக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. அந்தப் பொருட்களில் இருக்கும் சிலிகான், காட்மியம், மெர்க்குரி போன்ற வேதிப்பொருட்கள், குப்பையிலிருந்து நிலத்தடி நீரில் கலந்து மாசு ஏற்படுத்தும். எனவே தான், மின்னணுக் கழிவுகளை வீசி எரியாமல் சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்கள் பழைய மின்னணு சாதனங்களைத் திரும்ப எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு தருவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் அவற்றை அப்புறப்படுத்த முடியும்.
என்ன செய்யலாம்?
* மின்னணுப் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்தல்
* பயன்படுத்திய பொருட்களை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துதல்
* கழிவுகளை மறுசுழற்சி செய்தல்
3. காற்றாலை சுழல ஈரப்பதமுள்ள காற்றுத் தேவையா?
மு.நாராயணன், கோவை.
மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) தத்துவத்தின் அடிப்படையில், மின்னியற்றி பொறியைக் (டைனமோ - Dynamo) கொண்டு அனைத்து வகை மின்சாரமும் உருவாக்கப்படுகிறது. காந்தப்புலத்தினுள் மின்கடத்தியை அசைத்தால், மின்காந்தத் தூண்டல் வினை மூலம், மின்சாரம் உருவாகும் என ஃபாரடே நிகழ்த்திய கண்டுபிடிப்பே இதற்கு அடிப்படை. ஃபாரடேவின் கொள்கைகளை அடிப்படையாக வைத்து ஹிப்போலைட் பிக்ஸி (Hippolyte Pixii) என்பவர், 1832இல் முதல் டைனமோவை வடிவமைத்தார்.
டைனமோவில் சுழலும்படி காந்தம் அல்லது மின்கடத்தி வைக்கப்படும். ஏதாவது விசை கொண்டு காந்தப்புலத்தில் மின்கடத்தி சுழலும்போது மின்சாரம் உற்பத்தியாகும். காற்றாலையில், காற்று வீசும் விசையால் டைனமோவை இயக்க முடியும். இந்தியா போன்ற நாடுகளில் ஈரப்பதம் கூடுதலான பருவமழைக் காலங்களில்தான் கூடுதல் விசையுடன் காற்று வீசும். என்றாலும், காற்றின் ஈரப்பதத்துக்கும் காற்றலை மின் உற்பத்திக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை. காற்றாலையைப் பயன்படுத்துவதால் ஈரப்பதம் குறையாது; மழைப் பொழிவும் குறையாது.
4. இரிடியம் என்பது எவ்வகை உலோகம், அதன் பயன் யாது? இதன் விலைமதிப்பு மிக அதிகமா?
ஜெ.லெனின்குமார், 12ஆம் வகுப்பு, இந்து மேல்நிலைப் பள்ளி, திருவில்லிப்புத்தூர், விருதுநகர்.
பிளாட்டினம் தொகுதியைச் சேர்ந்த இடைநிலைத் தனிமங்களில் ஒன்று இரிடியம் (Iridium). இதன் அணு எண் 77. இது மிகச்சிறந்த வினைவேகமாற்றி. இயற்கையாகவே பூமியில் மிக அரிதாகக் கிடைக்கும் இந்தத் தனிமம், தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கிறது.
பூமி உருவானபோது, இரிடியம் மிகமிகக் குறைவாகவே இருந்தது. ஆனால், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்பாறை மோதலில், விண்ணிலிருந்து பெருமளவு இரிடியம் பூமிக்கு வந்து சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. அரிதாகக் கிடைக்கும் பொருட்களின் விலை எப்போதும் கூடுதலாகவே இருக்கும்; எனவே, இரிடியத்தின் விலை மதிப்புக் கூடுதலாக உள்ளது.
பயன்கள்
* பேனா முனைகள்
* மருத்துவ உபகரணங்கள்
* மின்னணு சாதனங்கள்
* போர் விமானத்தின் பாகங்கள்
