
மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
1. பூமிக்குப் புவியீர்ப்பு விசை எங்கிருந்து கிடைக்கிறது?
செ.ரோஹித், 8ஆம் வகுப்பு, ஸ்ரீசுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக். பள்ளி, மேலூர்.
'பூமிக்கு மட்டுமே கவரும் தன்மை உடைய விசை இருக்கிறது' என ஒரு காலத்தில் தவறாகக் கருதினர். அதனால்தான், இதைப் புவியீர்ப்பு விசை என்றனர். அறிவியலில் இதை ஈர்ப்புவிசை (Gravity) என்கிறோம்.
பூமிக்கு மட்டுமே ஈர்ப்புவிசை உள்ளது என கருதுவது தவறு. மேலும் இந்த விசை குறித்து ஆராய்ச்சி செய்தபோது, நிறை (mass) கொண்ட எல்லா பொருட்களுக்கும் இந்த ஈர்ப்பு விசை உள்ளது என தெரிய வந்தது. இரண்டு பொருட்களின் நிறைகள், அவற்றுக்கு இடையே உள்ள தொலைவு சார்ந்து, ஈர்ப்பு விசையின் வீரியம் அமையும்.
பூமியில் உள்ள எல்லா பொருட்களைக் காட்டிலும் பூமியின் நிறை, பல கோடி மடங்கு பெரியது. எனவேதான், பூமியில் மற்ற பொருட்களின் ஈர்ப்பு விசை எளிதில் புலப்படுவதில்லை. எனினும் மலைகள் ஏற்படுத்தும் ஈர்ப்பு விசைகளை இன்று அளந்து பார்க்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது. சமீபத்தில், செர்ன் (CERN) எனும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிக்ஸ்போஸான் துகளை இனம் கண்டனர். இந்தத் துகள் காரணமாகவே, ஈர்ப்பு விசை ஏற்படுகிறது என்கிறார்கள்.
2. பிறந்த சில நாட்களிலேயே சில விலங்குகளால் ஓட முடிகிறது. மனிதனால் ஏன் முடியவில்லை?
மு.யுவன், 6ஆம் வகுப்பு, கிட்ஸ் கிளப் பள்ளி, விஜயாபுரம், திருப்பூர்.
பிறந்த சில நொடிகளிலேயே குதிரை எழுந்து ஓடத் தொடங்கும். பிறந்த சில மணிகளிலேயே மரத்துக்கு மரம் தாவும் தாயின் உடல் மயிர்களைப் பற்றி சிம்பன்சி குட்டியும் தாவும். ஆனால், ஒரு வயது வரை மனிதக் குழந்தையால், பெற்றோரின் பாதுகாப்பு இன்றி உயிர் வாழ முடியாது. காரணம் - நமது மூளை!
பிறக்கும்போது என்ன செயல்கள் பதியப்பட்டுள்ளதோ அதையே குதிரை போன்ற விலங்குகள் செய்யும். ஒலி எழுப்புதல், தாவுதல், ஓடுதல் போன்றவை எல்லாம் பிறக்கும்போதே, அதன் மூளையில் பதிவேற்றப்பட்டவை.
ஆனால், மனித மூளை நெகிழ்வுத் தன்மை கொண்டது. பிறக்கும்போதே அமையும் திறன்களைத் தாண்டி சைக்கிள் ஓட்டுவது, விண்ணில் பறப்பது, புது மொழி கற்பது போன்ற மனிதன் செய்யும் சாதனைகள் அனைத்துக்கும் மனித மூளையின் கற்றல் திறனே காரணம். எனவேதான், அதிகம் பதியப்படாத தகவல்களுடன் மனிதன் பூமியில் பிறக்கிறான். நாம் வளரும் முறை, அறிந்துகொள்ளும் விஷயங்கள் போன்றவை நம்மை மேலும் மேம்படுத்துகின்றன. எனவேதான், கழுகு போன்ற கூர்மையான பார்வை நமக்கு இல்லை என்றாலும், அதே திறன் கொண்ட கருவியை உருவாக்க முடிகிறது. யானை பலம் இல்லை என்றாலும், பெரும் பாறைக் கற்களைத் தூக்கும் கிரேன் போன்ற இயந்திரங்களைப் படைக்க முடிகிறது.
3. இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள், இரட்டையர்கள் பிறப்பு எந்த விகிதத்தில் அமைகிறது?
வி.சந்தானகோபாலன், மதுரை.
இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் விகிதம்: இரட்டையர்கள் அல்லாதவர்களிடம் 8.5%
ஒரே பிரசவத்தில் பிறந்து, டி.என்.ஏ. வெவ்வேறாக அமைந்த இரட்டையர்களிடம் 14.0%
ஒரே பிரசவத்தில் ஒரே மரபணு அமைப்புடன் பிறக்கும் இரட்டையர்களிடம் 14.5%
ஒரே மரபணுத் தொடரைக் கொண்டு பிறக்கும் இரட்டையர்களில் ஒருவர், இடக்கைப் பழக்கம் உள்ளவர் எனில், மற்றவரும் இடக்கைப் பழக்கம் உள்ளவராக இருப்பதில்லை. சுமார் 21% இடக்கைப் பழக்கமுடைய இரட்டையர்களில் ஒருவர் இடக்கை, மற்றவர் வலக்கைப் பழக்கம் உடையவர்.
இடக்கை மற்றும் வலக்கைப் பழக்கம் உடைய சுமார் 4,000 ஜோடி இரட்டையர்களில் நடத்தப்பட்ட மரபணு ஆய்வில், இடக்கைப் பழக்கத்துக்கு என குறிப்பான மரபணு எதுவும் வெளிப்படவில்லை. எனவே, ஏன் இடக்கை பழக்கம் சிலருக்கு மட்டும் ஏற்படுகிறது என்பது இன்னமும் புதிர் தான்.
மேலும், சோதனைக் குழாய் குழந்தை போன்ற செயற்கைக் கருவுறுதல் முறையில், சுமார் 45% பேர் இரட்டையர்களாக அமைகின்றனர். இந்தியாவில் செயற்கைக் கருவுறுதல் முறையில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஒரு தகவல் கூறுகிறது. உலகிலேயே கூடுதல் இரட்டையர்கள் கொண்ட நாடு பெனின் (Benin) எனும் மேற்கு ஆப்பிரிக்க நாடுதான். சர்வதேச அளவில் இரட்டையர்கள் சுமார் 13.6% என இருந்தால், பெனின் நாட்டில் மட்டும் 1,000 பிரசவங்களில் சுமார் 27.9% பிரசவம் இரட்டையர்களே!
4. பேசும்போது சத்தம் எங்கிருந்து எப்படி உருவாகிறது?
லெ.இராஜராஜேஸ்வரி, 5ஆம் வகுப்பு, அழகப்பா நர்சரி பள்ளி, காரைக்குடி.
காற்றில் வேகவேகமாகக் கையை அசைத்தால் ஒருவித சத்தம் எழும். இவ்வாறு, காற்றில் அழுத்த அலைகளை ஏற்படுத்துவதன் மூலமே எல்லா சத்தங்களும் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வீணையின் கம்பிகளை மீட்டும்போது இசை எழும். அதுபோல, பேசும்போது குரல்வளை நாளங்கள் அதிர்ந்து சத்தம் உருவாகிறது. வாய், நாக்கு, மூக்கு, உதடு முதலியவற்றைக் குவித்து விரித்து செயற்படுத்தும்போது பேச்சு உருவாகிறது.

