தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மீண்டும் பள்ளி, மீண்டும் மகிழ்ச்சி!

மீண்டும் பள்ளி, மீண்டும் மகிழ்ச்சி!

மீண்டும் பள்ளி, மீண்டும் மகிழ்ச்சி!


PUBLISHED ON : ஜூன் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

இதோ அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. புதிய உடைகள், புதிய பை, புதிய வகுப்பறை, புதிய நண்பர்கள்… என்று ஒரே குதூகலம் ஒருபக்கம். மறுபக்கம், புதிய சூழ்நிலைகளை எப்படிக் கையாளப் போகிறோமோ என்ற தயக்கம்.

என்ன செய்யலாம் இந்தக் கல்விப் புத்தாண்டில்?

* நேற்று போல் இன்று இல்லை. இன்றுபோல் நாளை இல்லை. புதுசில் உள்ள ஆச்சரியமே அதுதான். புதிய ஆண்டில் ஆச்சரியத்தோடு பள்ளிக்குச் செல்லுங்கள். அதாவது, என்ன நடக்கும், அவர் ஆசிரியராக வருவாரா, இந்த நண்பர்கள் என் வகுப்பில் இருப்பார்களா என்ற யோசனையெல்லாம் வேண்டவே வேண்டாம். யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் வருவேன், இந்த வகுப்பறைக்கு.

* பழைய கோபதாபங்கள், எரிச்சல்கள், முன்கருத்துகள் அத்தனையையும் துடைத்து எறிந்துவிடுங்கள். விடுமுறை விட்டு 60 நாட்களாச்சா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கும். அப்படியானால், நீங்கள் நேற்று பார்த்த நண்பர், இன்று அப்படியே இருக்கப் போவதில்லை. நேற்று உங்களுக்கு எரிச்சல் மூட்டியவர், இன்றும் அப்படியே இருக்கப் போவதில்லை. மாற்றம் என்னும் பேரலையில், மாறாதது எது? அதனால் திறந்தமனத்தோடு, புதிய வகுப்பறைக்குச் செல்லுங்கள்.

* அடுத்த ஆண்டு, புதிய பாடங்கள், ஏராளமான சுமை. 'இன்னும் நிறைய நேரம் படிக்கணும், இன்னும் சுமையைச் சுமக்கணும்' என்றெல்லாம் வீட்டில் சொல்லிவிடுவார்கள். அவர்கள் கவலை அவர்களுக்கு; அதில் தப்பில்லை. ஆனால், புதிய வகுப்பு என்பது புதிய அறிவின் திறவுகோல். புதிய புத்தகங்கள் என்பவை, புதிய பிரபஞ்சத்தைத் திறந்துகாட்டப் போகும் மாயக்கண்ணாடி. எப்படி இருந்தாலும் படித்துவிடுவோம். பயத்தை ஒதுக்கிவிட்டு, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.

* நேற்று மாதிரி, இன்று நீங்கள் குழந்தை இல்லை. நேற்றுப் பார்த்த சாலையும், வகுப்பறையும், நண்பர்களும், அறிமுகங்களும் இன்று முற்றிலும் வித்தியாசமாகத் தெரிவார்கள். ஆம், உயரம், கொழுக் மொழுக், பருக்கள், ஸ்டைல் ஆகியவை மட்டும் மாற்றங்கள் அல்ல. நீங்கள் பார்க்கும் விதமே, கோணமே மாறிப் போயிருக்கும். எப்படி இந்த மாயம் நிகழ்ந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதுதான் காலத்தின் கொண்டாட்டம். வளர்ச்சியின் சீதனம்.

* 60 நாட்களுக்கு மேல் விடுமுறை என்பதால், மனம் லேசாக இருக்கும். படிப்பு, டியூஷன், தேர்வு, அழுத்தம், மதிப்பெண் போன்ற கவலைகள் நினைவின் அடுக்குகளில் இருந்து விலகி, அங்கே நிதானமும் அமைதியும் தளும்பி வழியும். சொல்லப் போனால், உங்கள் மூளை இப்போது திறந்த பாத்திரம். கல்வியாலும் ஞானத்தாலும் நிரம்பக் காத்திருக்கும் அகண்ட வாய் பாத்திரம். இத்தகைய ஓர் இனிமையை நீங்கள் பெறவே முடியாது. அதற்காகத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

* சென்ற ஆண்டில் எதிலெல்லாம் கோட்டை விட்டோம், எதையெல்லாம் தப்பாகச் செய்தோம், என்று ஒரு பட்டியல் போட்டுக்கொள்ளுங்கள். அவற்றைக் களைந்திருந்தால், இன்னும் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள். சென்ற ஆண்டு முடியாததையெல்லாம் இந்த ஆண்டு முடித்துக் காட்டுங்கள்.

* இந்த ஆண்டில் ஒரு விஷயத்தைப் புதிதாகக் கற்றுக்கொண்டே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ளுங்கள். நான் பழைய மாணவி / மாணவன் அல்ல. இதற்கு அடுத்த ஆண்டு போகும்போது, எனக்குக் கூடுதலாக ஒரு விஷயம், கலை தெரியும் என்ற பெருமிதம் வேண்டும். அப்படியானால், இப்போதே உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை ஆரம்பியுங்கள். அது விளையாட்டாக இருக்கலாம், ஓவியமாக, இசைப் பயிற்சியாக, மேடைப் பேச்சாக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ரொம்ப வேண்டாம், தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்துகொள்வேன் என்றுகூட நீங்கள் கங்கணம் கட்டிக்கொள்ளலாம். அதனால் உங்களுக்கு ஒரு பயன் இருக்கவேண்டும். ஒரு முன்னேற்றம் தெரியவேண்டும்.

* எல்லாவற்றையும் விட முக்கியமானது மகிழ்ச்சி, துணிவு. இந்த உலகம் விசாலமானது. இங்கே பிறந்த அனைவருக்கும் இது வளமான வாய்ப்புகளைத் தரக் காத்திருக்கும் பூமி. அப்படியானால், பள்ளியும் மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கவேண்டும். தேர்வுகளில் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால், வாழ்க்கையில் எப்போதும் ஏறுமுகம் தான் உண்டு. இந்த ஆண்டை முடிக்கும்போது, நீங்கள் இன்னும் சில அங்குலங்கள் உயரமாக வளர்ந்திருப்பீர்கள். அதேசமயம் உங்கள் உள்ளமும் அறிவும்கூட சில அங்குலங்கள் உயர்ந்திருக்கும். அதற்கான ஆரம்ப நாள், இன்று.

ரெடி, ஜூட்.

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us