PUBLISHED ON : அக் 27, 2025
ஆங்கிலத்தில் வித்தியாசமான சொற்களைக்கூடத் தெரிந்து வைத்திருப்போம். பாடத்தில் வருகிற புதுச் சொற்களைக் குறித்து வைத்து நினைவில் ஏற்றுவோம். ஏதேனும் எழுதும்போது, புதிதாகப் பழகிய அந்தச் சொல்லைப் பயன்படுத்திப் பார்ப்போம். அதே நேரத்தில் நாம் அன்றாடம் செய்கிற சில வேலைகளுக்கான ஆங்கிலச் சொற்களை அறியாமலும் இருப்போம். ஏனெனில், அந்தச் சொற்கள் நாம் வாசிக்கும் பாடங்களில் இல்லாமல் போயிருக்கலாம். அப்படிப்பட்ட சில வினைச்சொற்களை இங்கே பார்ப்போம்.
'ராக்கம்மா கையத் தட்டு' என்று பாடும்போது நடுவில் சொடக்குப் போடுகிறார்களே, அது போல நீங்களும் போட்டிருப்பீர்கள். சொடக்குப் போடுவது என்பதை இங்கிலீஷில் எப்படிச் சொல்வது?
I am ______ (1) my fingers
இது சொடக்குப் போடுவது. சொடுக்கு எடுப்பது என்று ஒன்று இருக்கிறதே... விரலை மடக்கி அழுத்தினால் டொக் என்று ஒரு சத்தம் வருகிறதே... அப்படிச் சொடுக்கெடுப்பதை என்ன என்று சொல்வது?
I am ______ (2) my knuckles
அப்புறம், நம்முடைய பால் பாயின்ட் பேனாவை ஒரு முறை அழுத்தினால், எழுதும் முனை வெளியே வரும். இன்னொரு முறை அழுத்தினால் அது உள்ளே போய்விடும். அப்படி அழுத்துவதற்கு என்ன சொல்?
I am ______ (3) my pen
பேனாவை அழுத்தி எழுதி முடித்தாயிற்று. குளிரால் கையெல்லாம் ஜில் என்று இருக்கிறது. இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்துச் சூடேற்றிக்கொள்கிறோம். இந்தச் செயலுக்கான ஆங்கில வினைச்சொல் என்ன?
I am ______ (4) my hands together
விடைகள்:
1. snapping
2. cracking
3. clicking
4. rubbing

