தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சின்ன தோள்களில் பெரிய சுமை!

சின்ன தோள்களில் பெரிய சுமை!

சின்ன தோள்களில் பெரிய சுமை!


PUBLISHED ON : செப் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதினைந்து, இருபது நாட்களாக ராதிகா பள்ளிக்கு வரவில்லை என்பதை உமா மிஸ் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். ராதிகாவும் என்னுடைய வகுப்பில்தான் படிக்கிறாள். முதலில் இரண்டு, மூன்று நாட்கள் வராதபோது, சாதாரணமாக எடுத்துக்கொண்டேன். பின்னர் தொடர்ச்சியாக வராதபோது, அது என் கவனத்தையே கவராமல் போய்விட்டது. உமா மிஸ்தான் ஒரு நாள் கேட்டார்.

“எனக்குத் தெரியலை மிஸ். நான் என்ன விஷயம்னு கேக்கலை மிஸ்.” என்றேன்.

“அவங்க குடும்பத்துல என்னவோ ஆகியிருக்கு. உங்க கிளாஸ் மிஸ், ராதிகாவோட அப்பாகிட்ட பேசினாங்களாம். ஏன் ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டிருக்காங்க. சரியா பதில் சொல்லலைன்னு சொன்னாங்க. நாம போய் பார்த்துட்டு வருவோமா?”

அன்றைய தினம் மாலையே, ராதிகா வாழும் அடுக்ககத்தைத் தேடிக்கொண்டு போனோம். எங்கள் பள்ளியில் இருந்து, ஐந்தாறு தெருக்கள் தள்ளித்தான் அவள் வசிக்கும் அடுக்ககம் இருக்கிறது. உமா மிஸ்ஸின் இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்துகொண்டு போனேன்.

அவளது ஃப்ளாட்டைக் கண்டுபிடித்து, அழைப்புமணியை ஒலித்தோம். ஒருசில கணங்கள்தான். எனக்கு அந்தச் சூழ்நிலையும் அமைதியும் அசெளகரியமாக இருந்தது. ஏதோ ஒரு எதிர்பாராத விஷயத்தைச் சந்திக்கப் போகிறோம் என்று உள்ளுணர்வு சொல்லிக்கொண்டு இருந்தது.

வயதான பாட்டியொருவர் கதவைத் திறந்தார். 'குப்'பென மருந்து நெடி முகத்தில் அறைந்தது. கூடம் முழுக்க அலங்கோலம். துக்கம் கவிந்த அரை இருட்டு. உமா மிஸ், ராதிகா பெயரைச் சொல்ல, உள்ளே வரச்சொன்னார் அந்த மூதாட்டி.

ராதிகாவை இப்படிப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. சமையலறையில் இருந்து வெளியே வந்தவள், அவ்வளவு அழுக்காக இருந்தாள். சட்டென வயதுக்கு மீறிய முதிர்ச்சி. “வாங்க மிஸ்…” குரலில் உற்சாகம் தொனித்தாலும், கூடவே இயலாமை. பரபரவென இருக்கைகள் மேல் இருந்த துணிகளை எடுத்து ஓரம் போட்டுவிட்டு, நாங்கள் அமர இடம் செய்து கொடுத்தாள்.

என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

“எங்க ஸ்கூல் மிஸ், எஜ்ஜி!” என்று மூதாட்டியிடம், ராதிகா சொல்ல, அந்தம்மாள் லேசாகப் புன்னகைத்தாள். அடுத்த அறையில் இருந்து நிஜார் போடாத பையன் ஒருவன் சட்டென எட்டிப் பார்த்தான்.

அடுத்த சில நிமிடங்களில், மூதாட்டி விளக்கத் தொடங்கியபோது, என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. திடீரென்று ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில், ராதிகாவின் தாயார் இறந்துவிட, வீடு நிர்மூலமானது. அவளது அப்பாவுக்கு கடுமையான எலும்புமுறிவுகள். தாத்தாவும் பாட்டியும்தான் துணை. அவர்களோ வயதானவர்கள். வேலைகள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள்.

ஒருவகையில் எல்லா பொறுப்பும் ராதிகா மீதுதான். வளர்ந்தும் வளராத பெண். என்னைவிட ஒருவயது கூட வேண்டுமானால் இருக்கலாம். பன்னிரெண்டு. என்ன புரிந்ததோ, அவள்தான் வீட்டை இன்று பார்த்துக்கொள்கிறாள் என்று அந்த மூதாட்டி சொன்னபோது, என் கண்களை நம்பமுடியவில்லை.

ராதிகா சமையலறையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். ஓரம் போய் நின்றுகொண்டாள். என்னைப் போலவே உமா மிஸ்ஸாலும் கண்ணீரை அடக்கமுடியவில்லை. சட்டென சமாளித்துக்கொண்டு, ராதிகாவின் அருகே போய் அவளை அரவணைத்துக்கொண்டார். சின்ன விசும்பல். இனிமேல் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதைவிடப் பெரிதாக பொறுப்புகள் அந்தச் சின்னஞ்சிறு தோள்களில்.

“எப்படி இனிமே இவளை ஸ்கூலுக்கு அனுப்பறதுன்னு தெரியலைம்மா. அறியாத பொண்ணு. அவதான் தம்பிய வேற பார்த்துக்கறா. எனக்கும் உதவியா இருக்கறா. ஏன் இப்படியெல்லாம் நடக்கணும்னு இருக்கோ?”

அந்த மூதாட்டி வருத்தத்தில் தெரிந்த அக்கறை உண்மையாக இருந்தது. சட்டென உமா மிஸ்ஸின் முகத்தில் தெளிவு.

“ராதிகா படிக்கணும்னு இவளோட அப்பாவும் நினைக்கறார் இல்லையா?”

“நிச்சயமாம்மா. ஆனால், எப்படி ஸ்கூல் வரது போறதுன்னு தெரியலை…”

“கவலைப்படாதீங்க. முதல்ல ஸ்கூல்லேருந்து நிறுத்தணும்னு மட்டும் நினைக்காதீங்க. வாரத்துல எத்தனை நாள் ஸ்கூலுக்கு அனுப்ப முடியுமோ அனுப்புங்க. நான் எங்க மேனேஜ்மென்ட்கிட்ட பேசறேன். புரியாத பாடங்களை என்கிட்ட வந்து படிக்கட்டும். நான் சொல்லித்தரேன்.

இது நிச்சயம் கஷ்டம்தான். இடையூறுதான். ஆனால், பிரச்னை இல்லை. இப்படியெல்லாம் நேர்ந்திருக்க வேணாம். ஆனால், நேர்ந்துடுச்சு. இதுலேருந்து எப்படி மீண்டு வரதுன்னு பார்க்கணும். அதுக்காக படிப்பை விட்டுடக்கூடாது…நான் ஏற்பாடு செய்யறேன்.”

பேசும்போது, ராதிகாவின் தோளை வலுவாகப் பிடித்து, நம்பிக்கை ஊட்டிக்கொண்டிருந்தார். அவளும் உமா மிஸ் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தார். இன்னும் சற்றுநேரம், ராதிகாவின் பாட்டியோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டு, கிளம்பினோம். மறக்காமல், ராதிகா அப்பாவின் தொலைபேசி எண்ணை உமா மிஸ் வாங்கிக்கொண்டார். அவரிடம் பேசுகிறேன் என்றார். அங்கிருந்து கிளம்பியபோது, அடுக்ககத்தின் வாசல் வரை வந்து ராதிகா வழியனுப்பியது சொல்ல முடியாத வலியை நெஞ்சில் ஏற்படுத்தியது.

“இது ஒரு பெரிய பிரச்னை கதிர். சின்ன வயசுலேயே குடும்பத்தையும் பெரியவங்களையும் கவனிச்சுக்க வேண்டிய அவசியம் ஒருசில வீடுகள்ல ஏற்பட்டுடுது. இந்தியாவுல 17 வயசுக்குட்பட்ட சிறுவர்களில் சுமார் 9 சதவீதம் பேர், இதுபோல குடும்பத்தைக் கவனிச்சுக்குறாங்கன்னு ஓர் ஆய்வு சொல்லுது.

நமக்கு மட்டுமல்ல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியான்னு, பெரிய நாடுகள்ல கூட இந்தப் பிரச்னை இருக்கு. யங் கேர்கிவ்வர்ஸ் (Young Caregivers) அல்லது யங் கேரரஸ்னே இதுக்குப் பேரு. சின்ன தோள்களில் பெரிய சுமை. அவங்க இதை எப்படித் தீர்க்கறது, என்ன மாற்றுவழின்னு யோசிக்கறாங்க. நம்ம ஊர்ல, இதை அவங்கவங்களோட தலையெழுத்துன்னு விட்டுடறோம். அது தப்பு.

இந்த மாதிரி எதிர்பாராத அசம்பாவிதம் நடந்துட்டா, முதல்ல பலியாவது படிப்புதான். அதுவும் பெண் பிள்ளைகளோட படிப்புதான். சமூகமும், ஸ்கூலும் இணைஞ்சு உதவினா, ராதிகா மாதிரியான குழந்தைகளை நம்மால மீண்டும் ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டு வரமுடியும். குறைந்தபட்சம், அவளோட படிப்பு பாதிக்கப்படாமல் காப்பாத்த முடியும்.”

உமா மிஸ், வண்டி ஓட்டிக்கொண்டே உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். அவரது வேகமும் அக்கறையும் பின்னால் இருந்த என் மனத்தை ஈரப்படுத்தியது. ராதிகாவின் படிப்பை உமா மிஸ் எப்படியேனும் காப்பாற்றிவிடுவார் என்றே தோன்றியது.

நான் அவளுக்கு எந்தவகையில் உதவியாக இருக்கமுடியும் என்று மெல்ல யோசிக்க ஆரம்பித்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us