PUBLISHED ON : மார் 17, 2025

புரதங்கள் வாழ்வதற்கு அவசியம். இவை செல்லினுள் நொதிகளாக இருப்பதால் உடலின் அனைத்து செல்களுக்கும் முக்கியமானது. இவை தண்ணீருக்குப் பிறகு, உடலில் மிகுதியாக இருக்கும் பொருளாகும்.
இவை அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய பொருட்களால் ஆன, நீண்ட சங்கிலி போன்ற மூலக்கூறுகள். இவை பெப்டைட் எனும் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
இவை நம் உடலில் உள்ள திசுக்களை வளர்க்கவும், பராமரிக்கவும், மாற்றவும் செய்கின்றன. எனவே நமது தசைகள், உறுப்புகள், நோயெதிர்ப்பு அமைப்புகள் பெரும்பாலும் புரதத்தால் ஆனவை.
புரதம் ஜீரணிக்கப்பட்டவுடன், அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலங்கள் தசைகள், எலும்புகள், ரத்தம், உடல் உறுப்புகளைப்
பராமரிக்கப் பயன்படுகிறது.
அதிகப்படியான புரதத்தை உட்கொள்வது உடலுக்கு ஆபத்தானது. இது கல்லீரல், சிறுநீரகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கூடுதல் புரதத்தை வெளியேற்ற அவை கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதிகப்படியான புரதமும் எடையைக் கூட்டும்.
புரதங்களில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று முழுமையான புரதங்கள். இவை இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள், முட்டை, சோயா முதலியவற்றில் உள்ளன. முழுமையற்ற புரத மூலங்களில் விதைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் அடங்கும்.
சில உணவுகளில் உள்ள புரதங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஏனெனில் புரதத்தின் அமைப்பு நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஓர் எதிர்வினையை ஏற்படுத்தும். உதாரணமாக, க்ளூட்டன் (Gluten) ஒவ்வாமையைச் சொல்லலாம். இது கோதுமை, தானியங்களில் உள்ள ஒரு புரதமாகும்.
முட்டையின் புரதமே மிக உயர்ந்த தரமான புரதம் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். சில சாதாரண புரத உணவுகளை விட அதிக அளவு புரதத்தை பூச்சிகள் கொண்டுள்ளன. எதிர்காலத்தில் இதுவே புரதத் தேவையைத் தீர்க்கும்.