PUBLISHED ON : பிப் 17, 2025

இந்திய யானைகள், ஆப்பிரிக்க யானைகளை விடப் பெரிய காதுகள் கொண்டவை.
தவறு. இந்திய யானை ஆசியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இவை பொதுவாக ஆப்பிரிக்க யானைகளை விட உருவத்தில் சிறியவை. அவற்றை விடச் சிறிய காதுகள் உடையவை. இவை இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா, லாவோஸ், சீனா, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்றன. இதன் விலங்கியல் பெயர் எலிஃபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ் (Elephas maximus indicus).
ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டுமே தந்தங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்திய இனங்களில் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது. வெகுசில பெண் யானைகளுக்குச் சிறிய தந்தங்கள் இருக்கும். பெண் யானைகளும், அவற்றின் குட்டிகளும் சிறிய கூட்டமாக வாழ்கின்றன. ஆசிய யானை இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே இவை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது.