sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தோலில் கசப்பு; உள்ளே இனிப்பு

/

தோலில் கசப்பு; உள்ளே இனிப்பு

தோலில் கசப்பு; உள்ளே இனிப்பு

தோலில் கசப்பு; உள்ளே இனிப்பு


PUBLISHED ON : செப் 18, 2017

Google News

PUBLISHED ON : செப் 18, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரம்புட்டான்: Rambutan

தாவரவியல் பெயர்: 'நெப்பேலியம் லப்பாசியம்' (Nephelium Lappaceum)


ரம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத் தாவரம். 'சாப்பின்டாசியே' (Sapindaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆண், பெண் மரங்கள் தனித்தனியாகவும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே மரத்திலுமாகவும் காணப்படும். கிழக்கு ஆசியா (சீனா), தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகிறது. இதன் பழம் சிவப்பான மேல்தோலில் முடிகள் போன்ற அமைப்புடன் இருக்கும். பழத்தின் தோலும், பழுப்பு நிற விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் இனிப்பான வெண்மையான சாறு நிறைந்த சதைப் பகுதி மட்டுமே உண்ணத்தகுந்தது.

ஈரிலைத் தாவரமாகிய ரம்புட்டான் 12 முதல் 20 மீட்டர் வரை வளரும். மரத்தின் குறுக்களவு 60 செ.மீ. அளவிலும், பசுமை மாறா இலைகள் மாற்றொழுங்கானவையாக (Alternate - அல்டர்நேட்) 10 முதல் 30 செ.மீ. நீளம், 3 முதல் 11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலையாகவும் இருக்கும். சிற்றிலைகள் 5 முதல் 15 செ.மீ. நீளமும், 3 முதல் 10 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த மரத்தை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகளில் வளர்க்கலாம். நடப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் பழம் கொடுக்கத் தொடங்கிவிடும்.

பழம் முழுமையாகப் பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். பிஞ்சாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் இந்தப் பழம் இருக்கும். ரகங்களுக்கு ஏற்றார்போல இந்த மரம் மார்ச் மாதத்திலிருந்து மே வரை பூக்களையும், ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் 80 முதல் 200 கிலோ வரையிலான பழங்களையும் கொத்துக்கொத்தாகத் தரும். களிமண் அல்லது வண்டல் நிறைந்த வளமான மண்ணில் மிக நன்றாக வளரும்.

நிறைய மாவுச்சத்தும் புரதமும் நிறைந்த இந்தப் பழம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அகியவற்றைக் குணமாக்கும். வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், செம்புச் சத்து (Copper), இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை, உடல் எடை குறைப்பு, சருமப் பளபளப்பு போன்றவற்றிற்கும் உதவும். இந்தப் பழத்தின் விதையிலிருந்து மஞ்சள் நிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு, மெழுகுவத்திகள் தயாரிக்க உதவுகிறது. ரம்புட்டான் பழங்களும் மரத்தின் பிற பாகங்களும் மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் பல நூறு ஆண்டுகளாக மருந்தாக உபயோகிக்கப்படுகிறது.

- பேராசிரியை அ.லோகமாதேவி






      Dinamalar
      Follow us