தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெளிச்சத்துக்கு வந்த கருந்துளை இரகசியம்

வெளிச்சத்துக்கு வந்த கருந்துளை இரகசியம்

வெளிச்சத்துக்கு வந்த கருந்துளை இரகசியம்


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ஆறு கோடி ஒளியாண்டு தொலைவில் M87 எனும் கேலக்சி உள்ளது. அதன் நட்ட நடுவே M87* எனும் மிகப்பெரிய ராட்சதக் கருந்துளை உள்ளது. இதனை முதன்முதலில் புகைப்படம் எடுத்ததை 2019ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் சாதனையாக 'சயின்ஸ்' எனும் பிரபல அறிவியல் ஆய்விதழ் தேர்வு செய்தது.

இதுதான் இந்த ஆண்டில் என்னைக் கவர்ந்த சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு.

௧௦.௪.2019இல் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் தான், கருந்துளையின் முதல் புகைப்படம்; நேர்காட்சி சான்று. இதன் மூலம், கருந்துளை வெறும் கருதுபொருள் அல்ல; மெய்யான வான்பொருள் என்று உறுதிப்பட்டது.

கருந்துளை என்பது என்ன?

பல கோடிக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதி தான் கேலக்சிகள். கன்னி ராசி திசையில் 5.349 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள ஒரு ராட்சத கேலக்சி தான் M87. தொலைநோக்கியில் பார்க்கும்போது, அதன் மையத்தில் விரல் போல வினோதமான வடிவம் தென்பட்டது.

இதனால், 1917ஆம் ஆண்டு முதலே இந்தக் கேலக்சியை வானியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த வினோத வான்பொருளுக்கு, ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர், 1967இல் 'கருந்துளை' (blackhole) என்ற பெயரைச் சூட்டினார். இப்பெயர் பிரபலமாக, பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது.

சவால்!

கருந்துளை, தானும் ஒளியை வெளியே விடாது, அதன் மீது ஒளியைப் பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது; உறிஞ்சிக் கொண்டுவிடும். எனவே, எப்படிப் படம் பிடிப்பது?

ஒரு முற்றுப்புள்ளியை நிலவின் தொலைவில் வைத்துப் பார்த்தால் ஏற்படும் காட்சியே, மைக்ரோ வினாடிக் கோணம். இருபது முற்றுப்புள்ளிகளை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி, அதை நிலவின் தொலைவுக்கு எடுத்துச்சென்று வைத்தால் எவ்வளவு சிறியதாக இருக்குமோ, அவ்வளவு சிறியதாகவே தென்படும்.

இந்த நுணுக்க அளவைப் பிரித்தறிய அதிக பிரிதிறன் கொண்ட பெரிய தொலைநோக்கி தேவை. கணக்கிட்டுப் பார்த்தபோது, பூமியின் அளவுடைய தொலைநோக்கி இருந்தால் தான் கருந்துளையைப் பிரித்து அறிய முடியும்.

மெய்நிகர் தொலைநோக்கி

நுணுக்கமான கருந்துளைகளை இனம்கண்டு புகைப்படம் எடுக்க, விஞ்ஞானிகள் புதுமையான முறையைக் கையாண்டனர்.

பூமியின் பல பகுதிகளில் உள்ள ரேடியோ தொலைநோக்கிகளை ஒருங்கிணைத்துச் சேர்ந்திசைபோல இயக்கி, பூமியளவு மெய்நிகர் (virtual) தொலைநோக்கியை உருவாக்கினர். இந்த மெய்நிகர் கருவிதான், நிகழ்வெல்லை தொலைநோக்கி (Event Horizon Telescope). ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைவிட நாலாயிரம் மடங்கு அதிக பிரிதிறன் வாய்ந்ததாக அமைந்தது.

அமெரிக்கா, சிலி, ஸ்பெயின், மெக்சிகோ, தென்துருவ ரேடியோ தொலைநோக்கிகளைப் பிணைத்து, 2017இல் முதன்முதலில் மெய்நிகர் தொலைநோக்கியை உருவாக்கினர்.

அவ்வாறு எட்டு தொலை நோக்கிகளும் துல்லியமாக ஒரே திசையிலும் வானை நோக்கித் திருப்பும்போது, வானிலை சரியாகவும் அமையவேண்டும்.

ஏப்ரல் 2017இல் பத்து நாட்களைத் தேர்வுசெய்து எட்டுத் தொலைநோக்கிகளையும் M87* நோக்கிய திசையில் திருப்பினர். அதில் சுமார் பத்து லட்சம் ஜிபி தகவல்கள் கிடைத்தன. ஒவ்வொரு தொலைநோக்கியும் சேகரித்த நாள், நேரம் முதலிய தகவல்களை ஒன்று திரட்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் படத்தைத் தயார் செய்தனர்.

- த.வி.வெங்கடேஸ்வரன்

மத்திய அரசு விஞ்ஞானி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us