PUBLISHED ON : பிப் 08, 2016

ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தைப் (டயாமீட்டர் - Diameter -- 'D') போல 'பை'மடங்கு (π) என்று படித்திருக்கிறோம் (πD). கணிதத்தில் 'பை' என்பது மிக அடிப்படையான ஒரு மாறிலி (கான்ஸ்டன்ட் - Constant).
'பை'யின் மதிப்பு 3.14 என்பது நமக்குத் தெரியும். (பின்னத்தில் 22/7 என்று குறிப்பிடலாம்.) எளிதாக இருப்பதற்காக முழு எண்ணிற்குப் பிறகு இரண்டே தசம ஸ்தானங்களோடு நிறுத்திவிடுகிறோம். உண்மையில் 'பை' ஒரு முடிவிலா தசம ஸ்தானங்களைக் கொண்ட எண். கணினியைக் கொண்டு பையின் அளவை ஒரு டிரில்லியன் (Trillion) தசம எண்களுக்கும் மேலாகக் கணித்து இருக்கிறார்கள்.
'பை'யின் தசம ஸ்தானங்களில், அதிக பட்சம் ஒருவரால் எத்தனை எண்களை மனப்பாடமாகச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?
அலெக்ஸாண்டர் கிரெய்க் அய்ட்கென் (Alexander Craig Aitken) என்பவர் 1920ஆம் ஆண்டில், 528 எண்களை சரியாகச் சொல்லி உலக சாதனையை நிகழ்த்தினார். அதே வருடத்தில் ஆயிரம் எண்களைச் சரியாகச் சொல்லி அவரது முந்தைய சாதனையை அவரே முறியடித்தார்.
அய்ட்கெனுக்குப் பிறகு, பல பேர் பல ஆயிரத்துக்கும் அதிகமான எண்களைச் சொல்லி, உலக சாதனை செய்திருக்கிறார்கள்.
சென்ற வருடம் மார்ச் 21 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா (Rajveer Meena) என்ற நபர், வேலூர் வி.ஐ.டி. பல்கலை வளாகத்தில் செய்ததுதான் தற்போதைய கின்னஸ் சாதனை. இவர் மனப்பாடமாகச் சொன்னது 70 ஆயிரம் தசம ஸ்தானங்கள்!
