
“நான் தியானம் செய்தேன்.” என்றேன். உடனே ஞாநி மாமா, ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் தன்னைக் கத்தியால் குத்தும் நண்பன் புரூட்டஸைப் பார்த்து கேட்ட தொனியில் “நீயுமா மாலு?” என்றார். அடுத்து “எந்த சமாதி?” என்றார்.
“சமாதி எல்லாம் இல்லை. கக்கூசில்!” என்றேன். “உவ்வே” என்றான் பாலு. “இதுல உவ்வேக்கு என்ன இருக்கிறது. நீ உலகப் புகழ் பெற்ற நடிகனாக இருந்தாலும், சர்வாதிகாரத் தலைவராக இருந்தாலும், யாருக்குமே தெரியாத சாதாரண மனுஷனாக இருந்தாலும், தினமும் கக்கூசுக்குப் போகாமல் வாழமுடியாது.” என்றேன்.
“நம் வாயிலிருந்து வருகிற வார்த்தைகள்தான், நம் மனநலம் எப்படி இருக்கிறது என்று காட்டுகின்றன. அதேபோல ஆசனவாயிலிருந்து வரும் மலம்தான், நம் உடல்நலம் எப்படி இருக்கிறது எனபதைக் காட்டுகிறது.” என்றார் மாமா.
காந்தியைப் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. அவரை ஒரு வெளிநாட்டு நிருபர் பேட்டி எடுக்க ஆசிரமத்துக்கு வந்தபோது, காந்தி கழிப்பறையில் ஒருவரின் மலத்தைக் குச்சியால் கிளறிப் பார்த்து, அவர் உடல்நலம் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாராம்.
“கக்கூசில் என்ன தியானம் செய்தாய்?” என்று கேட்டான் பாலு.
“தியானத்தில் ஏதாவது ஒரு பொருளையோ, சொல்லையோ நினைத்துக்கொள்ளச் சொல்வார்கள் இல்லையா? நான் எவ்வளவு நேரம் என்னால் என் மலத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியும் என்று, தியானம் செய்து பார்த்தேன்.” என்றேன்.
“என்ன தோன்றியது?” என்றான் பாலு.
“சில நிமிடத்திலேயே மிகவும் அருவெறுப்பாகிவிட்டது. அப்போதுதான் உறைத்தது. என் மலத்தை நான் பார்ப்பதற்கே இவ்வளவு அருவெறுப்பாக இருக்கும் என்றால், இன்னொருத்தர் மலத்தை நாள் முழுக்க கையால் எடுத்து, கழிப்பறையைச் சுத்தம் செய்யும் மனிதர்களுக்கு எவ்வளவு கொடுமையாக இருக்கும்?” என்றேன்.
“அந்தக் கொடுமையை நம் நாட்டில் இன்னமும் தொடர்ந்து செய்து வருகிறோம். 1993லேயே சட்டம் போட்டோம். அதன் பின்னர் பல முறை, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் உத்தரவுகளைப் போட்டிருக்கின்றன. ஆனால், மத்திய அரசும் சரி; மாநில அரசாங்கங்களும் சரி; நடைமுறையில் எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. இந்த வரலாற்றை ஒரு விரிவான ஆழமான படமாக, திவ்யாபாரதி என்ற பெண் உருவாக்கியிருக்கிறார்.” என்றார் மாமா.
“கக்கூஸ் என்பதுதான், அந்தப் படத்தின் பெயர். அதை நான் நேற்றுப் பார்த்தேன். எங்கள் பள்ளிக்கூடத்தில் திரையிட்டார்கள்.” என்றேன். “ஓ, பள்ளியில் போட்டுக் காட்டினார்களா? நல்ல விஷயம். எல்லா பள்ளிக்கூடங்களிலும் போட்டுக் காட்டவேண்டிய படம் அது. நானும் பார்த்துவிட்டேன்.” என்றார் மாமா.
கக்கூஸ் சுத்தப்படுத்துவது என்பது, நம் வீட்டில் இருக்கும் பீங்கான் பகுதியை பினாயில் போட்டுக் கழுவும் வேலை என்று சுருக்கிப் புரிந்துகொள்ளக் கூடாது. அந்தப் பீங்கானிலிருந்து மலமும் தண்ணீரும் எங்கே போகின்றன என்று யோசித்துப் பார்க்கவேண்டும். சென்னை மாதிரி நகரங்களில் பாதாள சாக்கடைக்கும், சின்ன ஊர்களில் செப்டிக் டேங்க் எனப்படும் மலத்தொட்டிகளுக்கும் போகின்றன. அந்த சாக்கடை அடைத்துக் கொள்வதையும் தொட்டிகள் நிரம்பி வழிவதையும் சரிப்படுத்துவது யார்?
அந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை நினைத்தாலே குமட்டுகிறது. தொண்டை அடைக்கிறது. தெரு நடுவே வட்ட வட்டமான மூடிகளைப் பார்த்திருப்போம். அதில் ஒரு மூடி திறந்து கிடக்கும். உள்ளே கழுத்து வரை அதில் நின்றபடி தலை மட்டும் வெளியே தெரிவது மாதிரி ஒரு தொழிலாளி நிற்பதை பலமுறை பார்த்திருப்போம். முழுக்க முழுக்க மலத்திலும் கழிவிலும் அவர் அப்படி நிற்கிறார் என்பது, நமக்கு உறைப்பதே இல்லை. செப்டிக் டேங்க் என்ற மலத்தொட்டியின் மூடியைத் திறக்கிறபோதே, மீத்தேன் வாயுவும் ஹைட்ரஜன் சல்பைட் வாயும் தாக்கி செத்துப் போகிறார்கள்.
“டில்லியில் மட்டும் வருடத்துக்கு 100 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையிலும், செப்டிக் டேங்கிலும் செத்துப் போகிறார்கள். எல்லா மாநிலங்களிலும் இருக்கும் தொழிலாளிகளில் 100க்கு 2 பேர் ஒரு வருடத்தில் இப்படிப்பட்ட விபத்தில் சாகிறார்கள். தமிழ்நாட்டில் சுமாராக பத்தாயிரம் பேர் இருப்பதாக வைத்துக்கொண்டால், வருடத்துக்கு 400 பேர் மரணம். ஒரு வருடத்தில் இந்தியா முழுக்க சுமார் 23 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளிகள் இறக்கிறார்கள். இப்படி செத்துப் போகிறவர்கள் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டுமென்று நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன. ஆனால், அதைத் தருவதில்லை. அதற்கு மறுபடி வழக்கு போட்டுப் போராடவேண்டியிருக்கிறது.” என்றார் மாமா.
கழிவுச் சாக்கடையில் மனிதர்களை இறக்குவதில்லை, அதை நிறுத்திவிட்டோம் என்று அரசாங்கங்கள் ஓயாமல் நீதிமன்றங்கள் முன்னால் பொய் சொல்கின்றன. ஆனால், தினசரி செய்தித்தாளைப் படித்தால், வாரந்தோறும் எங்காவது 'கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி மரணம்' என்ற செய்தி வந்துகொண்டேதான் இருக்கிறது.
“வெளிநாடுகளிலும்தானே கக்கூசும், பாதாள சாக்கடையும் இருக்கின்றன. அங்கெல்லாம் இப்படி மனிதர்களை இறக்கியா சுத்தம் செய்கிறார்கள்?” என்று பாலு கேட்டான்.
“இல்லை. அவர்கள் இயந்திரங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். இங்கேதான் இப்படி.” என்றார் மாமா.
“ஏன் இங்கே மட்டும் இப்படி?” என்று கேட்டான் பாலு.
“இந்த துப்புரவுப் பணி வேலை, சில சாதிகளுக்கு மட்டுமேயானது என்பது போல இங்கே ஆக்கிவைத்திருக்கிறோம். கோவிலுக்குள் சாமியைத் தொட்டு பூஜை செய்ய, சிலருக்குத்தான் உரிமை என்பது மாதிரி, கழிப்பறை சுத்தப்படுத்தும் வேலை தலித் சாதியினரின் கடமை என்று நினைப்பது, நம் சமூகம் முழுவதும் பரவியிருக்கிறது. பழைய மாதிரி அலுவலகம் என்று இல்லை, நவீன கார்ப்பரேட் அலுவலகத்துக்குப் போய் பார்த்தால்கூட, ஹவுஸ் கீப்பிங் என்ற புதுப் பெயரில், தோட்டி வேலை பார்க்கிறவர்கள் யாரென்று கவனித்தால், குறிப்பிட்ட சாதிக்காரர்களாகவே வேலைக்கு வைத்திருக்கிறார்கள்.” என்றார் மாமா.
எல்லாரிடமும் இந்த மனநிலை இருக்கிறது. பல இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள், அலுவலக, ஓட்டல் கழிப்பிடங்கள் எல்லாம் படுமோசமாக இருக்கின்றன. உபயோகிப்பவர்கள் ஒழுங்காக தண்ணீர் ஊற்றுவதில்லை. கண்ட இடத்திலும் மலம் கழிக்கிறார்கள். கேட்டால், இதையெல்லாம் சுத்தப்படுத்தத்தான் ஆள் வைத்திருக்கிறோமே என்கிற தொனியில் பதில் சொல்கிறார்கள். அது அந்த சாதியின் தலையெழுத்து என்று சொல்பவர்களைக் கூடப் பார்த்திருக்கிறேன்.
“வெளிநாடுகளைப் போல, இங்கேயும் இதற்கு தொழில்நுட்பத்தைப் நடைமுறைக்குக் கொண்டு வர முடியாதா?” என்று கேட்டான் பாலு.
“அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால், ஒரே நாளில் செய்யமுடியும். ஒரே நாளில் நம்மால் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டை நீக்க முடியவில்லையா? ஒரே நாளில் நாம் ஒரு ராக்கெட்டிலேயே 104 செயற்கைக்கோள்களை அனுப்பவில்லையா? நம்மால் நிச்சயம் முடியும்” என்றேன்.
“ஏன் செய்வதில்லை?” என்றான் பாலு.
“நம் மனத்தில் இருக்கும் சாதீயம் என்ற மலத்தை முதலில் நீக்கினால்தான் முடியும். முதலில் மனத் துப்புரவு தேவைப்படுகிறது. அதனால்தான் காந்தி தன் ஆசிரமத்தில், துப்புரவு வேலைக்கு தனியே ஊழியர்கள் போடவில்லை. எல்லாரும் அந்த வேலையை செய்யவேண்டும் என்று சொன்னார்.” என்றார் மாமா.
“முதலில் அவரவர் வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான மனநிலை வரவேண்டும்” என்றான் பாலு.
“அதற்கு வழி தியானம்தான்.” என்றேன். “கக்கூஸ் தியானம்” என்றது வாலு.
வாலுபீடியா 1: லண்டனில் இருக்கும் பெக்சன் சுத்திகரிப்பு நிலையம், தினசரி 34 லட்சம் மக்களின் கழிவுகளைச் சுத்திகரித்து, நல்ல நீரை தேம்ஸ் நதிக்கு அனுப்புகிறது. கழிவிலிருந்து பிரிக்கப்படும் திடக் கழிவு உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாலுபீடியா 2: நகரம் முழுவதும் ஒற்றை பாதாள சாக்கடை முறைக்கு பதில், ஒவ்வொரு வீட்டில் இருக்கும் கழிப்பறையிலிருந்து வரும் கழிவும் அந்தந்த வீட்டிலேயே சுத்திகரிக்கப்பட்டு திடக் கழிவை உரமாகவும், சுத்தப்படுத்தப்பட்ட நீரை பாசனத்துக்கும் பயன்படுத்தும் முறையை, இப்போது ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருகின்றன. சிற்றூர்களிலும், கிராமங்களிலும் இந்த முறையை இன்னும் சுலபமாக செயல்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.

