PUBLISHED ON : மார் 28, 2016

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தார். ஒரு நாள் அவர் தனது நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார். கடப்பாறை ஏதோ ஒன்றில் பட்டு, 'நங்' என்ற ஓசை கேட்டது. ஒரு பெரிய, காலி செப்புப் பானை!
'இதனால் எனக்கு என்ன பயன்?' என்று எரிச்சலோடு பானை மீது கடப்பாறையைத் தூக்கி எறிந்தார். சற்று நேரம் கழித்துப் பானையின் பக்கம் அவரது பார்வை போனது. அவருக்குப் பேரதிர்ச்சி! நூறு கடப்பாறைகள் பானைக்குப் பக்கத்தில் கிடந்தன. பானைக்குள் மாம்பழம் ஒன்றைப் போட்டார். நூறாகப் பெருகியது. ஒரு தங்கக் காசைப் போட்டுப் பார்த்தார். அதுவும் நூறாகப் பெருகியது.
இரவு விவசாயியும் அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது பானை. திடீரென பாத்திரங்கள் தட புடலாக உருளும் சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
பார்த்தால் சுற்றிலும் எலிகள். ஒன்றல்ல, இரண்டல்ல, நூற்றுக்கணக்கில். பானைக்குள் விழுவதும், ஆயிரக்கணக்கில் பெருகுவதுமாக இருந்தன. சிரமப்பட்டு விவசாயியும், அவரது மனைவியும் பானையைக் காலி செய்து மூடினார்கள். விவசாயின் மனைவி, 'அப்பவே சொன்னேன். பேராசை சும்மா விடாதுன்னு...கேட்டீங்களா?' என்று அழத் தொடங்கினார்.
விவசாயி உணர்ந்தவராக, 'உழைச்சு சாப்புடுறத விட்டுப்புட்டு மந்திரம் பின்னால அலைஞ்சா இப்படித்தான்...' என்றார். காலையில் எழுந்ததும் இருவரும் முதல் வேலையாகப் பானையை இருந்த இடத்திலேயே வைத்துப் புதைத்தார்கள்.
