தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிக்குன்குனியாவுக்கு வரப்போகிறது சூப்பர் மருந்து!

சிக்குன்குனியாவுக்கு வரப்போகிறது சூப்பர் மருந்து!

சிக்குன்குனியாவுக்கு வரப்போகிறது சூப்பர் மருந்து!


PUBLISHED ON : நவ 26, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உத்தரகாண்ட் மாநிலம், ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியர்கள், சிக்குன்குனியா நோய்க்கு எதிரான புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஷெய்லி டோமர் என்பவரும், மற்றொரு பேராசிரியரும் நான்கு ஆண்டுகளாகச் செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளனர்.

மருந்து எதற்கு?

சிக்குன்குனியா வைரஸ் தாக்குதலால், காய்ச்சல், மூட்டு இணைப்புகளில் கடுமையான வலி ஏற்படும். காய்ச்சல் குணமானாலும், மூட்டு இணைப்புகளில் சில வாரங்கள் வரை வலி இருக்கும். இதன் பாதிப்பில் இருந்து மீண்டு, பழைய நிலைக்கு வருவதற்கு சில வாரங்கள் ஆகும். ஒரு சிலருக்கு ஒரு சில மாதங்கள்கூட ஆகலாம். அதனால், இந்த நோய்க்கு எதிரான மருந்துகளை, குறிப்பாகப் பக்க விளைவுகள் இல்லாத மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியமானது.

இயற்கை தந்த கொடை

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் புளியின் கொட்டையில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகைப் புரதம், சிக்குன்குனியாவுக்கு எதிராகப் போராடும் திறன் கொண்டது. இதனால், புளியங்கொட்டையை அடிப்படையாகக் கொண்டு மருந்து தயாரித்தால், எதிர்காலத்தில் சிக்குன் குனியாவை சுலபமாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதே, ரூர்க்கி பேராசிரியர்களின் கருத்து.

நான்காண்டுகள் தொடர்ந்த ஆராய்ச்சியின் முடிவில், மேற்சொன்ன கருத்துகளை உறுதிசெய்து வெளியிட்டிருக்கும் பேராசிரியர்கள், புளியங்கொட்டைகள் சிக்குன்குனியாவின் தீவிரத்தை 45 சதவீத அளவுக்குக் குறைப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

எது சரியான முறை?

புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் புரதத்தின் அடிப்படையிலான மருந்தை, மாத்திரை வடிவில் நோயாளிக்குக் கொடுப்பதா? ஊசி வடிவில் உடலுக்குள் செலுத்துவதா? எது சிறப்பான பலனைக் கொடுக்கும் என்பதை ஆராய்ச்சி செய்து வருவதாகவும் இந்தப் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியம் குறித்த புரிதல்

நவீன மருத்துவத்தில் மட்டுமல்ல, இந்தியப் பாரம்பரிய மருத்துவமுறைகளில் ஒன்றான ஆயுர்வேதத்திலும் புளியங்கொட்டை சிறந்த மருந்து. வயிறு சம்பந்தமான நோய்த்தொற்றுக்கும் உயர் ரத்தஅழுத்தத்திற்கும் நன்கு பொடிக்கப்பட்ட புளியங்கொட்டை, மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த புளியமரத்தின் கொட்டைகளில் மட்டும்தான் சிக்குன்குனியாவிற்கு எதிராகப் போராடும் திறன் இருக்கிறதா? அல்லது எல்லா வகையான புளியமரங்களின் கொட்டைகளும் நோய் எதிர்ப்புக்குப் பயன்படுமா என்பதையும் பேராசிரியர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றி அடைந்துவிட்டால், பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு சிரமப்படாமல், புளியங்கொட்டை மூலம் உருவாக்கப்படும் மருந்துகளைப் பயன்படுத்தி, சிக்குன்குனியாவை வரும் காலங்களில் சுலபமாக விரட்டியடிக்க முடியும்.

- சு.கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us